சென்ற நெஞ்சத்தைத் தேடுகிறாள்...

தன் நெஞ்சைத் தானே தேடுகிறாள் தலைவி ஒருத்தி. " என்னை விட்டுச்சென்ற நெஞ்சம் எங்குளதோ தெரியவில்லையடி தோழி!' என்று தோழியிடம் சொல்லிப் புலம்புகின்றாள்.
சென்ற நெஞ்சத்தைத் தேடுகிறாள்...
Updated on
1 min read

தன் நெஞ்சைத் தானே தேடுகிறாள் தலைவி ஒருத்தி. " என்னை விட்டுச்சென்ற நெஞ்சம் எங்குளதோ தெரியவில்லையடி தோழி!' என்று தோழியிடம் சொல்லிப் புலம்புகின்றாள்.
 தலைவன், பொருள்தேடும் பொருட்டு அவளைப் பிரிந்து சென்றுவிடுகின்றான். பாவம்! அந்தப் பாவை. தலைவன்
 முயக்கம் இல்லாமல் தவிக்கின்றாள். படித்துக்கொண்டே இருக்கும்பொழுது தூக்கம்வரின் நம்மை அறியாமல் நூல் நழுவிவிடுவது போல், தவித்துக் கொண்டிருந்த அவளை விட்டு நெஞ்சம் நழுவிவிடுகிறது.
 சென்ற நெஞ்சம் திரும்பி வரவில்லை. தலைவனைத் தேடிச்சென்ற நெஞ்சம் என்னானது? வழி தவறிச் சென்றிருக்க வாய்ப்பில்லையே! நதி எப்படிப் போனாலும் கடலில்தானே போய்ச்
 சேரும். அவள் நெஞ்சமும் அவரிடம்தான் சேர்ந்திருக்கும். இதில் ஐயமில்லை. ஆனால், சென்ற நெஞ்சம் ஏன் வரவில்லை? இங்கே
 தான் இரண்டு ஐயங்கள் எழுகின்றன தலைவிக்கு. ஐயத்தைத் தோழியிடம் பகிர்ந்து கொள்கிறாள்.
 "குறியதாகிய குராமரத்தின் சிறுமுகைகள் நறுமண மலர்
 களாய்ப் பூக்க; மலர்களின் மீது வண்டமர்ந்து கிளறிவிட்ட மண
 த்தைக் காற்று கொண்டுசென்று வீச, கண்கள் களிப்பெய்தி
 கவினுறும் காலை; மின்னும் கை வளையல்கள் நெகிழ்ந்து விழும் வண்ணம் மெலியவிட்டுச் சென்ற தலைவனை எண்ணித் துன்புற்ற நெஞ்சம் என்னைப் பிரிந்து சென்றுவிட்டது.
 ஒருவேளை அவர் செய்யும் பணிக்குத் தளர்வு வராவண்ணம் அவரோடே தங்கியிருந்து, அவர் திரும்பி வரும்
 பொழுது சேர்ந்து வரலாம் என்ற அவாவினால் வருந்தி அங்கேயே இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது; அப்படிச் சொல்லிவிட முடியாது. ஏனெனில், என் காதலர்தான் அருள் அற்றவராயிற்றே! பொருள்தான் முக்கியம் என்பவராயிற்றே! ஆதலால் நெஞ்சம் திரும்பியிருக்கலாம். ஆனால், திரும்பிய நெஞ்சம் என்னைத்தானே விரும்பி வந்திருக்க வேண்டும்... ஏன் வரவில்லை?
 தலைவன் தழுவாத தருணம் பசலை படர்ந்துவிடும் என்பதால், பசலை நோய் உற்று அழகின் அசலை நான் இழந்துவிட்டதால், நிறம் மாறிய இவள் தன் தலைவியல்லள், அயலாள் என்று அடையாளம் தெரியாமல் வேறெங்கோ தேடிச் சென்றுளதோ?''
 தலைவனைப் பிரிந்து கவலை
 யுறும் இம் மங்கையாளவள் எப்படியெ
 ல்லாம் கலங்குகின்றாள்... கலக்கத்தில் என்னென்ன ஐயங்களெல்லாம் கிளைக்
 கின்றன... பெருவழுதி எனும் புலவர் இயற்றிய பாடல் இது.
 "குறுநிலை குரவின் சிறுநனை நறுவீ
 வண்டுதரு நாற்றம் வளிகலந்து ஈயக்
 கண்களி பெறூஉம் கவின்பெறு காலை
 எல்வளை ஞெகிழ்ந்தோற்கு அல்லல் உறீஇச்
 சென்ற நெஞ்சம் செய்வினைக்கு அசாவா
 ஒருங்குவரல் நசையொடு வருந்தும் கொல்லோ?
 அருளான் ஆதலின், அழிந்திவண் வந்து
 தொல்நலன் இழந்தஎன் பொன்நிறம் நோக்கி
 ஏதிலாட்டி இவள் எனப் போயின்று
 கொல்லோ நோய் தலை மணந்தே?' (நற்-56)
 
 -கே.ஜி. ராஜேந்திரபாபு
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com