தொடுதோல் என்னும் காலணி

மெசபட்டோமியாவில் கி.மு. 1, 500 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வகையான காலணி பயன்பாட்டில் இருந்துள்ளது. இதே காலகட்டத்தில் எகிப்திலும் இவ்வகையான காலணி  பயன்பாட்டில் இருந்துள்ளது.
தொடுதோல் என்னும் காலணி
Updated on
2 min read

மெசபட்டோமியாவில் கி.மு. 1, 500 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வகையான காலணி பயன்பாட்டில் இருந்துள்ளது. இதே காலகட்டத்தில் எகிப்திலும் இவ்வகையான காலணி  பயன்பாட்டில் இருந்துள்ளது. தோலில் செய்யப்பட்ட அந்தக் காலணிதான் (செருப்பு) பழைமையான வடிவம் என அறிய முடிகிறது. தற்போது நாம் பயன்படுத்தும் செருப்பு,  ஷூ வகைகளும் கி.பி. 1850-இல்தான் நடைமுறைக்கு வந்துள்ளன. மேற்குறித்த அதே காலகட்டத்திலேயே தமிழ் நாட்டிலும் செருப்பு பயன்பாட்டில் இருந்துள்ளது. அகநானூற்றில் மூன்று இடங்களில் செருப்பினைக் குறிக்கும் "தொடுதோல்' என்னும் பெயர் இடம்பெற்றுள்ளது.

"தொடுதோல் கானவன் கவை பொறுத்தன்ன
இருதிரி மருப்பின் அண்ணல் இரவை' (34: 2-4)

சங்ககால முல்லை நிலம். அங்கே பிடவ மரங்கள் வளர்ந்துள்ளன. அவை மிக உயரமாக வளராமல் நெருக்கமாக வளர்ந்துள்ள காரணத்தால், புதர் போல் காட்சியளிக்கின்றன. அந்தப் பிடவ மரங்கள் அனைத்தும் பூத்துக் குலுங்குவதால் அந்தப் புதரே பூச்சூடியது போல் காட்சியளிக்கிறது. அந்தப் புதரில் இரலை மான்கள் துள்ளி விளையாடுகின்றன. அந்த இரலை மான்களின் கொம்புகள் கூர்மையாகவும் நீளமாகவும் முறுக்கேறியும் காணப்படுகின்றன. அந்தத் தோற்றத்தை, கானவன் ஒருவனது முறுக்கேறிய கவைக்கம்பு போல் இருந்தது என்கிறார் மதுரை மருதன் இளநாகனார் என்னும் புலவர். அந்தக் கானவன் தனது காலில் தொடுதோல் என்னும் செருப்பினை அணிந்தபடி கையில் கவைக் கம்பினை வைத்திருக்கிறான் என்றும் காட்சிப்படுத்தியுள்ளார். 
இன்னொரு பாடலில், ஆநிரைகளைக் கொள்ளையிடுவதற்குச் செல்லும் எயினர்கள் தங்கள் காலடித் தடத்தைப் பிறர் அறிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக செருப்பு அணிந்து செல்கிறார்கள் என்று தெரிவிக்கிறார் மாமூலனார்.

"அடிபுதை தொடுதோல் பறைய ஏகிக்
கடிபுலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர்' (அகநா.101:8-9) 
"செம்மறி ஆட்டுக்கடாவின் கொம்பு இரண்டு பக்கமும் வளைந்து சுருண்டு இருக்கும். அந்தக் கொம்பினைப் போல் வளைந்து சுருண்டு சுற்றிய தலைமுடியைக் கொண்டவர்கள் எயினர்கள். அந்த எயினர்கள் பசுக்கூட்டங்களைக் கொள்ளையடிக்கச் செல்லும்பொழுது 
வாயிலிருந்து இருமல் முதலான சத்தங்கள் எழுந்துவிடக்கூடாது என்பதற்காக வாயில் புற்று மண்ணினை அடக்கி வைத்துக் கொள்வார்கள்.
அவர்கள் தங்கள் கையில் வில்லினையும் அந்த வில்லின் வழியாக எய்வதற்கான நெருப்புக் கோல்களையும், மத்துகளையும் எடுத்துச் செல்வார்கள். அவர்களின் கால் தடம் தெரியாமல் இருப்பதற்காக அவர்களின் பாதத்தை மறைக்கக் கூடிய செருப்பினை அணிந்து சென்றார்கள் என்பது பாட்டின் பொருள்.
மூன்றாம் பாடலிலும் ஒரு கானவன்தான் செருப்பு அணிந்துள்ளான். குறிஞ்சி நிலத்தில் பயிர் அறுவடையான பின் அதனை நெருப்பிட்டுக் கொளுத்துவார்கள். அவ்வாறு கொளுத்தும் கானவர்கள் தங்கள் காலில் நெருப்புப் படாமல் இருப்பதற்காகக் காலணி அணிந்துள்ளார்கள் என்கிறார் மதுரை மருதன் இளநாகனார்.
"தொடுதோல் கானவன் சூடுறு வியன்புனம்
கரிபுறம் கழீஇய பெரும்பாட்டு ஈரத்து' (368: 1-2)
என்னும் அடிகளிலும் செருப்பு என்னும் காலணியைக் குறிப்பதற்குத் "தொடுதோல்' என்னும் பெயரே இடம்பெற்றுள்ளது. காலைத் தொட்டபடி இருக்கும் வேற்றுத் தோல் என்பதைக் குறிப்பதற்காகவே தொடுதோல் என்னும் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக,  தோலினால் செருப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். இம்மூன்று பாடல்களிலும் கானவர்களே செருப்பு அணிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
கானவன் ஒருவன், காட்டிலுள்ள முள் செடிகளை வெட்டிப் பயன்படுத்துவதற்காகக் கையில் கவைக் கோலுடன் செல்கிறான். அடுத்த கானவன், பசுக்கூட்டத்தைக் கொள்ளை அடிப்பதற்காகச் செல்கிறான். அவ்வாறு கொள்ளையடிக்கும்
பொழுது தனது கால் தடத்தை மறைப்பதற்காகச் செருப்பு அணிந்து செல்கிறான். 
மூன்றாம் கானவன், காட்டை எரியூட்டும்பொழுது நெருப்பிலிருந்து தனது கால்களைக் காத்துக் கொள்வதற்காக செருப்பு அணிந்
துள்ளான். 
இவ்வாறு அடிப்படைத் தேவையின் காரணமாக செருப்பு அணியும் பழக்கம் இருந்திருக்கிறது என்றால், பல வகையான ஆடம்பரச் செருப்புகளும் அந்தக் காலத்தில் இருந்திருக்கும். இவ்வாறு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சாதாரண மக்கள் செருப்பு அணிந்திருக்கிறார்கள் என்றால், செருப்பின் பயன்பாடு அதற்கு நெடுங்காலத்திற்கு முன்பே தமிழகத்தில் இருந்திருக்கிறது என்பதனை அறிந்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com