ஆய்வுத்துறை முன்னோடி!

தமிழிலக்கண, இலக்கிய ஆய்வுத்துறையில் முன்னோடியாக விளங்கிய அறிஞர் மு. இராகவையங்கார். இவர் பாண்டிய நாட்டு அரியக்குடியில் ஜூலை 26, 1878-இல் பிறந்தவர். இவரது வாழ்க்கை வரலாறு பலரும் அறிந்ததே!
ஆய்வுத்துறை முன்னோடி!

தமிழிலக்கண, இலக்கிய ஆய்வுத்துறையில் முன்னோடியாக விளங்கிய அறிஞர் மு. இராகவையங்கார். இவர் பாண்டிய நாட்டு அரியக்குடியில் ஜூலை 26, 1878-இல் பிறந்தவர். இவரது வாழ்க்கை வரலாறு பலரும் அறிந்ததே!
 "செந்தமிழ்' இதழிலிருந்து ரா. இராகவையங்கார் ஓய்வு பெற்றபின் மு. இராகவையங்காரையே அதன் ஆசிரியப் பொறுப்பில் நியமித்தார் பாண்டித்துரைத் தேவர். "செந்தமிழ்' இதழில் தமிழிலக்கியம், இலக்கணம் தொடர்பான பல்வேறு அரிய ஆய்வுக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதினார் மு. இராகவையங்கார்.
 அக்காலத்தில் இலக்கிய - இலக்கணங்கள் தொடர்பான ஆய்வுகள் ஓரளவு நடைபெற்று வந்ததென்றாலும், வரலாற்றுத் துறை பலரும் அறியாததாகவே இருந்தது. மு. இராகவையங்கார் அத்துறையில் இறங்கி அரிய செய்திகள் பலவற்றைக் கண்டுபிடித்து வெளிக்கொணர்ந்தார். அதுவரை தமிழறிஞர்கள் பலரும் சரியென நம்பிக்கொண்டிருந்த பல செய்திகள் தவறானவை என்பதைத் தரவுகளோடு நிறுவினார்.
 "செந்தமிழ்' இதழின் கட்டுரைகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. அவ்வாறு மு. இராகவையங்கார் எழுதிய கட்டுரைகளில் முக்கியமானது "வேளிர் வரலாறு'. "வேளிர்' என்ற சொல் சிற்றரசர்களைக் குறிக்கும் சொல் என்று அதுவரை நம்பப்பட்டு வந்தது. ஆனால், அது ஒரு குறிப்பிட்ட மன்னனைக் குறிப்பதென்பதையும், அவனது குலத்தின் வரலாறு இன்னதென்பதையும் கண்டறிந்து விளக்கினார்.
 குறிப்பாக, "தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி', "சேரன் செங்குட்டுவன்', "ஆழ்வார்கள் காலநிலை', "சாஸனத் தமிழ்கவி சரிதம்' போன்றவற்றை எழுதி எட்டு ஆண்டுகள் "செந்தமிழ்' பத்திரிகையை நடத்தினார். மேலும், பல அரிய நூல்களை ஆய்வு செய்து பதிப்பித்தும் இருக்கிறார். அவற்றுள் "நரி விருத்தம்', "சிதம்பரப் பாட்டியல்', "திருக்கலம்பகம்', "விக்கிரம சோழனுலா', "சந்திரலோகம்', "கேசவப் பெருமாள் இரட்டை மணிமாலை' ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
 சென்னைப் பல்கலைக்கழகம் 1912-இல் தமிழ்ப் பேரகராதி ஒன்றை உருவாக்க முற்பட்டபோது, அப்பணியில் பங்குபெற மு. இராகவையங்கார் அழைக்கப்பட்டார். அந்த அகராதிக் குழுவுக்குத் தலைவராக இருந்தவர் அமெரிக்கன் மிஷினைச் சேர்ந்த ஜே.எஸ். சான்ட்லர் துரை. அகராதிப் பணியில் அயராது உழைத்த மு. இராகவையங்கார், சான்ட்லர் துரை குழுவிலிருந்து விலகிய பின்னரும் தொடர்ந்து சிறப்புடன் பணியாற்றி அகராதிப் பணியை முடித்தார். அவரது அரும்பணியைப் பாராட்டி ஆங்கிலேய அரசு அவருக்கு "ராவ் ஸôஹேப்' பட்டம் வழங்கி சிறப்பித்தது.
 மு. இராகவையங்காரின் தன்னலமற்ற தமிழாய்வுப் பணியை, காஞ்சி சங்கர மடம், திருவாவடுதுறை ஆதீனம் போன்ற சமய அமைப்புகளும், "தமிழ்த் தாத்தா' உ.வே.சாமிநாதையர், ரா. இராகவையங்கார், திருமணம் சென்னக் கேசவராய முதலியார், வ.உ. சிதம்பரம் பிள்ளை, சி. சுப்பிரமணிய பாரதியார் போன்ற அறிஞர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.
 சென்னை லயோலா கல்லூரியின் தமிழ்த்துறையில் கௌரவ விரிவுரையாளராகப் பணியாற்ற வருமாறு அழைப்பு வந்தது. அவ்வழைப்பை ஏற்று, அக்கல்லூரியில் நான்கு மாதங்கள் பணியாற்றினார். அப்போது, திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தில் (இப்போது கேரளப் பல்கலைக்கழகம்) வள்ளல் அழகப்பச் செட்டியார் தமிழ் ஆராய்ச்சிக்கென ஓர் இருக்கையை நிறுவி, அதில் மு. இராகவையங்காரை நியமித்தார். அங்கு பணியாற்றிய காலத்தில் அடிக்கடி சொற்பொழிவுகள் நிகழ்த்தி வந்தார். அவருடைய சொற்பொழிவுகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து திருவிதாங்கூர் பல்கலைக்கழகம் நூலாக வெளியிட்டது.
 சேர மன்னர்கள் பற்றிய செய்யுள்களை அடைவுபடுத்தி, தனது விளக்கவுரையுடன் "சேர வேந்தர் செய்யுட் கோவை' என்ற தலைப்பில் இரு பாகங்களடங்கிய நூலாக மு. இராகவையங்கார் வெளியிட்டார். திருவிதாங்கூர் அரண்மனை சுவடி நிலையத்தில் கிடைத்த "அரிச்சந்திர வெண்பா' என்னும் அரிய நூலை தனது உரையுடன் அச்சிட்டார்.
 தனது வாழ்வுக்குப் பெருந்துணையாக இருந்த பாண்டித்துரைத் தேவர், அவருடைய தந்தையார் பொன்னுசாமித் தேவர் ஆகியோரின் தமிழ்ப் பணிகளைத் தொகுத்து "செந்தமிழ் வளர்த்த சான்றோர்' என்ற நூலை வெளியிட்டார். இந்நூல் அப்போது பள்ளியிறுதி வகுப்புக்குத் துணைப்பாட நூலாக வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்நூலின் மூலம் தனக்குக் கிடைத்த இரண்டாயிரம் ரூபாயை இராமநாதபுரம் பள்ளியில் சிறப்பாகத் தேர்ச்சி பெறும் மாணவனுக்குக் கொடுக்கச் செய்தார்.
 இடையறாது தமிழ்ப் பணியாற்றி வந்த மு. இராகவையங்காரின் வாழ்வில் 1954-இல் எதிர்பாராத துயர் சூழ்ந்தது. அவருடைய மனைவியும், மூத்த புதல்வரும் திடீரெனக் காலமானதால், மனம் வருந்திய அவர் மானாமதுரைக்குச் சென்று தன் இளைய புதல்வருடன் வசிக்கலானார். மன வருத்தத்தில் இருந்த அவரை, காரைக்குடி கம்பன் விழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார் கம்பன் கழகத்தின் செயலாளர் சா. கணேசன். அவ்வழைப்பை ஏற்று, அவ்விழாவில் கலந்துகொண்டு, கம்பரின் புலமை குறித்து அரியதோர் ஆய்வுரை நிகழ்த்தினார்.
 சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிடத் திட்டமிட்டிருந்த கம்பராமாயணப் பதிப்பின் ஆசிரியர் குழுவில் பணியாற்ற அழைக்கப்பட்டார் மு. இராகவையங்கார். அவர் அங்கு சென்று1956 முதல் மூன்று ஆண்டுகள் அங்கு தங்கியிருந்து "பால காண்ட'த்திற்கும் "சுந்தர காண்ட'த்திற்கும், மேலும் சில பகுதிகளுக்கும் சிறப்புரை எழுதினார்.
 1958-இல் மு. இராகவையங்காரின் எண்பதாண்டு (சதாபிஷேகம்) விழா கொண்டாட்டத்தின்போது, அவர் எழுதிய "வினைத்திரிபு விளக்கம்' என்ற நூல் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் வீட்டிலிருந்தவாறே "கட்டுரை மணிகள்' என்ற தலைப்பின்கீழ் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். பதினான்கு கட்டுரைகள் எழுதத் திட்டமிட்டு, பதிமூன்றாவது கட்டுரையாக "களப்பிரர்' என்ற கட்டுரையை எழுதி முடித்ததும் அவர் உடல்நிலை மோசமாயிற்று.
 தமிழிலக்கிய - இலக்கண ஆய்வுத்துறை முன்னோடி மு. இராகவையங்கார் 1960-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டாம் நாள் இந்நிலவுலக வாழ்விலிருந்து விடைபெற்றுக் கொண்டார். அவரது பூதவுடல் மறைந்திடினும் புகழுடல் தமிழுள்ளவரை வாழும் என்பதில் ஐயமில்லை.
 - ராஜ்கண்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com