கவி பாடலாம் வாங்க - 27

தொல்காப்பியச் செய்யுளியலில் செய்யுளுக்கு உறுப்புக்கள் என்று முப்பத்து நான்கைக் கூறுகிறார் ஆசிரியர் தொல்காப்பியர்.
கவி பாடலாம் வாங்க - 27

யாப்பிலக்கணம் -2
"வாகீச கலாநிதி' 
கி.வா. ஜகந்நாதன்
தொல்காப்பியச் செய்யுளியலில் செய்யுளுக்கு உறுப்புக்கள் என்று முப்பத்து நான்கைக் கூறுகிறார் ஆசிரியர் தொல்காப்பியர்.
பொருளிலக்கணத்தின் பகுதியாக இருந்த யாப்பிலக்கணம் விரிந்து, நாளடைவில் தனியே இலக்கண நூல் அமைக்கும்படி ஆயிற்று. யாப்பருங்கலம் என்னும் நூலின் உரையில் அவ்வுரையாசிரியர் பல பல யாப்பிலக்கண நூல்களை எடுத்து மேற்கோள் காட்டுகிறார். அவற்றைப் பார்க்கும்போது, பழங்காலத்தில் யாப்பிலக்கண ஆராய்ச்சி மிக விரிவாக நடைபெற்றது என்று தெரியக்கிடக்கிறது.
தனிச் செய்யுளையன்றி நூல்களின் இலக்கணத்தைச் சொல்லும் இலக்கணங்கள் தனியே உண்டாயின. அவற்றைப் பாட்டியல் என்று சொல்வார்கள். பன்னிரு பாட்டியல் என்பது பழைய பாட்டியல் நூல். 
மாபுராணம், பூதபுராணம் என்று இரண்டு பழைய யாப்பிலக்கண நூல்கள் இருந்தன. அவை மிகவும் விரிவாக இருந்தன என்பதை, "பரந்துபட்ட பொருண்மையவாகிய மாபுராணம் பூதபுராணம் என்பன சில வாழ்நாட் சிற்றறிவின் மாக்கட்கு உபகாரப் படாமையின்' (தொல்.மரபியல், 97, உரை) என்று பேராசிரியர் எழுதியதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இலக்கண நூலுக்குப் புராணம் என்ற பெயர் அமைந்தது விநோதமாக இருக்கிறது. அவிநயம் என்பது ஐந்து இலக்கணத்தையும் உடைய பழைய நூல். அதில் யாப்பதிகாரம் விரிவாக இருந்தது.
தொல்காப்பியத்தை அடியொற்றியும் பல விரிந்த பகுதிகளை இணைத்தும் பல்காப்பியர் என்னும் புலவர் ஒருவர் செய்யுளிலக்கண நூல் செய்தார். அது "பல்காப்பியம்' என்னும் பெயரோடு வழங்கியது. அப்படியே பல்காயனார் என்பவர் "பல்காயம்' என்ற யாப்பிலக்கண நூலை இயற்றினார்.
காக்கைபாடினியார் என்னும் பெண் புலவர் ஒரு யாப்பிலக்கண நூல் செய்தார். அதற்குக் காக்கைபாடினியம் என்று பெயர். அவரை, "கற்றார் மதிக்கும் கலைக் காக்கை பாடினியார்'' என்று ஒரு பாட்டிலே புலவர் ஒருவர் சிறப்பித்துப் பாராட்டுகின்றார். 
சிறு காக்கைபாடினியம் என்று பிற்காலத்தில் செய்யுளிலக்கண நூல் ஒன்று இருந்தது. அதை இயற்றியவர் மற்றொரு காக்கைபாடினியார்.
இவற்றையன்றிக் கையனார் யாப்பு, நத்தத்தர் யாப்பு, சங்க யாப்பு, மயேச்சுவரர் யாப்பு என்ற பெயரோடு வழங்கிய நூல்கள் யாவும் யாப்பிலக்கணத்தைத் தனியே வரையறுத்துச் சொல்லுபவை. பரிமாணனார், கடிய நன்னியார், பாடலனார் என்னும் ஆசிரியர்களும் செய்யுளின் இலக்கணத்தைச் சொல்லியிருக்கிறார்கள். 
பெரிய பம்மம், செய்யுளியல், யாப்பியல், கவிமயக்கறை பெரிய முப்பழம், தக்காணியம் என்னும் பெயருள்ள நூல்களிலும் செய்யுளிலக்கணங்கள் சொல்லப்பட்டன என்று உரைகளில் வரும் குறிப்புக்களால் தெரிய வருகின்றது.
"தமிழ் நெறி விளக்கம்' என்ற நூலில், யாப்பிலக்கணம் இருந்திருக்கக்கூடும் என்று அதன் பதிப்பாசிரியராகிய மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள் எழுதியிருக்கிறார்கள். இப்போது நமக்கு உருப்படியாகக் கிடைக்கும் பழைய செய்யுள் இலக்கணம் தொல்காப்பியச் செய்யுளியல் ஒன்றுதான். எழுத்து முதலிய இலக்கணங்கள் முழுவதையும் வரையறுக்கும் பிற்கால நூல்களில் யாப்பின் இலக்கணமும் அமைந்திருக்கிறது. வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல், முத்துவீரியம் என்பவற்றில் செய்யுளிலக்கணப் பகுதி இருப்பதைக் காணலாம்.
புலவர்கள் யாப்பிலக்கணத்துக்கு மேல்வரிச் சட்டமாகக் கொண்டு பாராட்டும் நூல் யாப்பருங்கலக்காரிகை. அதனை இயற்றியவர் முதற் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்த அமுதசாகரர் என்பவர். அவர் ஜைனர். முதலில் யாப்பருங்கலம் என்னும் நூலை இயற்றிய பின்பே யாப்பருங்கலக் காரிகையை இயற்றினார். 
இந்த இரண்டுக்கும் குணசாகரர் என்பவர் விரிவான உரைகளை இயற்றியுள்ளார். யாப்பருங்கலம் "நூற்பா' என்னும் சூத்திர வடிவில் அமைந்தது. யாப்பருங்கலக்காரிகை கட்டளைக் கலித்துறைகளால் அமைந்தது. "காரிகை கற்றுக் கவி பாடுவதிலும், பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்றே'' என்பது ஒரு பழமொழி. தமிழ் நாட்டில் கவி பாடுபவர்கள் காரிகையை ஆழ்ந்து கற்றார்கள் என்பதை இந்தப் பழமொழி புலப்படுத்துகிறது.
(தொடர்ந்து பாடுவோம்...)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com