விருத்த வகை - 1

ஒவ்வொரு வகைப் பாவுக்கும் தாழிசை, துறை, விருத்தம் என்று மூன்று இனங்கள் உண்டு என்பதை முன்பே தெரிந்து கொண்டோம்.
 விருத்த வகை - 1

கவி பாடலாம் வாங்க - 23

ஒவ்வொரு வகைப் பாவுக்கும் தாழிசை, துறை, விருத்தம் என்று மூன்று இனங்கள் உண்டு என்பதை முன்பே தெரிந்து கொண்டோம். அவற்றில் கலித்துறையைப் பற்றியும் ஆசிரிய விருத்தத்தைப் பற்றியும் அறிந்தோம். இனி மற்ற விருத்தங்களின் இலக்கணத்தையும் கவனிக்கலாம்.
 
 வெளி விருத்தம்:
 வெண்பாவின் இனமாகிய விருத்தத்தை வெண்பா விருத்தம் என்று சொல்வதில்லை; வெளி விருத்தம் என்பார்கள். மற்றவை அவ்வப்பாவின் பெயர்களோடு இணைந்திருக்கும்; ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம், வஞ்சி விருத்தம் என்று அவை பெயர் பெறும்.
 வெளி விருத்தம் ஐந்து சீர்களை உடைய அடிகள் மூன்றோ நான்கோ பெற்று வரும். இதில் முக்கியமான இலக்கணம், ஒவ்வோர் அடியிலும் ஒரே சொல்லோ, தொடரோ ஐந்தாவது சீராக இருக்கும். நான்கு அடிகளும் ஓரெதுகையாக வரும்; இது எல்லா விருத்தங்களுக்கும் பொது இயல்பு.
 
 "வீரம் இல்லார் வீரம் பெற்றார் காந்தியினால்
 சீரொன் றில்லாத் தேயம் இலங்கும் காந்தியினால்
 போரென் றாலும் உயிர்க்கோள் இல்லை காந்தியினால்'
 
 இந்த வெளிவிருத்தம் மூன்றடிகளால் வந்து, காந்தியினால் என்ற ஒரே சொல்லே அடிதோறும் ஐந்தாம் சீராகப் பெற்றிருப்பது காண்க.
 
 "ஆவொ வென்றே அஞ்சின ராழ்ந்தார் ஒருசாரார்
 கூகூ வென்றே கூவிளி கொண்டார் ஒருசாரார்
 மாமா வென்றே மாய்ந்தனர் நீத்தார் ஒருசாரார்
 ஏகீர் நாய்கீர் என்செய்து மென்றார் ஒரு சாரார்'
 
 இது நான்கடியால் வந்த வெளிவிருத்தம். ஈற்றில் ஒரு தொடரே வராவிட்டால் இது கலித்துறை ஆகிவிடும். ஆசிரிய விருத்தத்தின் இலக்கணத்தை முன்பே விரிவாகப் பார்த்து விட்டோம்.
 
 கலி விருத்தம்:
 அளவொத்து வரும் நான்கு சீர் அடிகள் நான்காக வருவது கலிவிருத்தம்.
 
 "உலகம் யாவையும் தாமுள வாக்கிலும்
 நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
 அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
 தலைவ ரன்னவர்க் கேசர ணாங்களே'
 
 கம்பராமாயணத்தில் வரும் இது கலி விருத்தம். இந்த விருத்தத்தில் அடிதோறும் பன்னிரண்டு எழுத்துக்களே இருப்பதைக் காணலாம். யாப்பிலக்கணத்தில் வரும் எழுத்துக் கணக்கில் ஒற்றுச் சேராது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த விருத்தத்தில், ""புளிமா கூவிளம் கூவிளம் கூவிளம்'' என்ற வாய்பாட்டில் ஒவ்வோரடியும் வந்திருக்கிறது. புளிமாவுக்குப் பதில் தேமா இருந்தால் அடிதோறும் பதினோரெழுத்துக்கள் இருக்கும்.
 
 "சாந்த மாமுனி வோர்தொழும் தற்பரன்
 சேந்தன் வேலவன் சேவலெ டுத்தவன்
 போந்த கொங்கிற் பொலிதரு மோகனூர்க்
 காந்த மாமலை காதல்செய் தானரோ'
 
 இந்தப் பாட்டில் அடிதோறும் பதினோரெழுத்து வந்ததைக் காணலாம். கொங்கிற் - பொலிதரு என்னும் இடத்தில் கூவிளஞ் சீர் வராவிட்டாலும் மா வந்தபொழுது அடுத்து நிரை வந்தமையால் ஓசை கெடாமலும் எழுத்துக் கணக்கும் கெடாமல் நின்றன.
 
 "பலபல கலையுணர் பருணிதர் குலவினர்
 கலைநல மிகுசுவை கருதினர் பருகினர்
 அலைபடு கடலென அளவறு பனுவல்கள்
 குலவுறு அவைநனி குவியுற நிறுவினர்'
 
 இதுவும் ஒரு வகைக் கலிவிருத்தம். ஒவ்வொரு சீரும் கருவிளமாகவே வந்தது. பனுவல்கள் என்பதில் லகர ஒற்று அலகிடப்படாது. கந்தர் அநுபூதியில் வருவன கலிவிருத்தங்களே!
 
 "ஆடும் பரிவே லணிசே வலெனப்
 பாடும் பணியே பணியா யருள்வாய்
 தேடும் கயமா முகனைச் செருவில்
 சாடுந் தனியா னைசகோ தரனே'
 
 கலிவிருத்தங்களில் இன்னும் பல வகை உண்டு.
 
 (தொடர்ந்து பாடுவோம்...)
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com