தமிழில் சிறுவர் இலக்கியம் - ஒரு பார்வை!

"சின்னஞ்சிறு கிளியே; செல்வக் களஞ்சியமே; பிள்ளைக் கனியமுதே; பேசும் பொற்சித்திரமே; ஆடி வரும் தேனே;
தமிழில் சிறுவர் இலக்கியம் - ஒரு பார்வை!

"சின்னஞ்சிறு கிளியே; செல்வக் களஞ்சியமே; பிள்ளைக் கனியமுதே; பேசும் பொற்சித்திரமே; ஆடி வரும் தேனே; அன்பு தரும் தெய்வமே' எனக் குழந்தையைப் பெரிதும் கொண்டாடி மகிழ்ந்த மகாகவி பாரதியார் பிறந்த நாடு - நம் தமிழ்நாடு.
 இந்திய மொழிகளில் தமிழ்மொழியில் மட்டும்தான் குழந்தை இலக்கியம் மிகப்பெரும் அளவில் விளங்கி வருகிறது. 16-ஆம் நூற்றாண்டில் ஒüவையார் தந்த "ஆத்திசூடி' குழந்தை இலக்கியத்தின் முதல் நூல் என்பதுடன், அதனைத் தொடர்ந்து அவருடைய கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை, கல்வி ஒழுக்கம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இந்நூல்கள் எல்லாம் அன்றைய சிறார்களை நல்வழிப்படுத்தின. இரண்டு சொற்களில், ஒரு வரியில், இரண்டு வரிகளில் சுருங்கச் சொல்லி விளங்க வைத்த பெருமையும், அகர வரிசைப்படுத்தி, குழந்தைகள் எளிதில் மனனம் செய்யும்படியாகப் பாடல்களைப் பாடிய பெருமையும் ஒüவையாருக்கே உரியது.
 தொடர்ச்சியாக, நீதிநெறிகளை எளிமையாக்கி மனத்தில் பதிய வைக்கும் பாடல்களைத் தந்தவர்கள் அதிவீரராம பாண்டியனார் (வெற்றி வேற்கை - 16-ஆம் நூ) உலகநாதர் (உலக நீதி - 18-ஆம் நூ). குழந்தைகள் தாமே விரும்பிப் படிக்கும்வண்ணம், கற்கும்வண்ணம், பாடும்வண்ணம் பாடல்கள் அமைவது பெரும் சிறப்பு.
 கவிமணியின் "மலரும் மாலையும்', பாரதியாரின் "பாப்பா பாட்டு', பாரதிதாசனின் "இளைஞர் இலக்கியம்' ஆகியவற்றைத் தொடர்ந்து நமச்சிவாய முதலியார், மணிமங்கலம் திருநாவுக்கரசு, மயிலை சிவமுத்து, அ.கி.பரந்தாமனார், எம்.வி. வேணுகோபால் பிள்ளை ஆகியோரின் குழந்தை இலக்கியப் படைப்புகள் குறிப்பிடத்தக்கவை.
 தமிழில் குழந்தை இலக்கியம் ஆழமும் அகலமும் சிறப்பாக பெற்றிட "மலரும் உள்ளம்' தந்த குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் பங்கும் பணியும் போற்றத்தக்கது. தாம் படைப்பாளியாக மட்டுமல்லாமல், குழந்தை இலக்கியப் படைப்புகளை ஊக்குவித்து, ஒருங்கிணைத்து, சங்கம் அமைத்து, புத்தகக் காட்சி, நூல் அறிமுகம், நாடக விழா, எழுத்தாளர்-பதிப்பாளர் அறிமுகம், கதை சொல்லல் நிகழ்ச்சி முதலியவற்றை நடத்தியமையில், பாரதத்தின் மற்ற மாநிலங்களை மலைப்புடன் வியக்க வைத்தவர் அவர்.
 
 "தேனொழுக கவிபாடும் தேசிக விநாயகமே
 நானுனது கவிபாடி நாடோறும் மகிழுவனே!'
 
 எனக் கவிமணியின் மாணவராக நன்றியுடன் செயல்பட்ட வள்ளியப்பாவின் பாடல்கள் அனைத்தும் சாகாவரம் பெற்றவை.
 "தமிழ்க் குழந்தை இலக்கியத்தின் தாய்வீடு' எனப் போற்றப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ராயவரம் குழந்தைக் கவிஞர் "சக்தி' வை.கோவிந்தன், "பாப்பா' ராம.தியாகராஜன், "பாப்பா மலர்' முத்து நாராயணன், "பாலர் மலர்' வெ.சுப.நடேசன் மற்றும் பதிப்பாளர் பழனியப்ப செட்டியார், ச.மெய்யப்பன் ஆகியோர் குழந்தை இலக்கியத்திற்குப் பெரும் பங்கு நல்கியவர்கள்.
 குழந்தை இலக்கியப் பங்களிப்பில் பெரும் சாதனை புரிந்த முனைவர் பூவண்ணன் தொகுத்த "குழந்தை இலக்கிய வரலாறு' மிகச்சிறந்த -அற்புத ஆவணப் பதிவாகும்.
 "வைணவர்களுக்கு திருவேங்கடம் போல், சைவர்களுக்கு சிதம்பரம் போல், கிருஸ்தவர்களுக்கு ஜெருசலம் போல், இஸ்லாமியர்களுக்கு மெக்கா போல் குழந்தைகள் இதழியல், பதிப்பகத் துறைக்கு ராயவரம் ஒரு புனிதத்தலம்' என்று நெகிழ்வுடன் அவர் பாராட்டியிருப்பது பெரும் பொருத்தமே.
 "புதுக்கோட்டையும் அதனருகே உள்ள ராயவரமும் இல்லையெனில், குழந்தை இலக்கிய வரலாறு "பால விநோதினி'யுடன் முடிந்து போயிருக்கும்' என்று கூறியிருப்பதும் உண்மையே!
 குழந்தைகளுக்கான இதழ்கள் தற்போது மிக அதிக அளவில் வெளிவராவிட்டாலும், தரமான படைப்புகள் சில வெளிவந்து கொண்டிருப்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
 தொலைக்காட்சி, கணினி, செல்லிடப்பேசி முதலிய தொழில்நுட்ப சாதனங்களின் வருகையால் குழந்தைகளின் படிக்கும் பழக்கும் குறைந்து வருகிறது என்பது ஒருபுறம் இருக்க, கதை சொல்லும் வழக்கமும், கதை கேட்கும் வழக்கமும் இல்லாது போய்விட்டது.
 இளைய சமுதாயத்தினரிடம் படிக்கும் ஆர்வத்தையும், பழக்கத்தையும் ஏற்படுத்த பெற்றோரும், ஆசிரியர்களும், சிறுவர் இலக்கிய அமைப்புகளும் முயற்சி எடுப்பது மிக அவசியம்.
 அதனால்தான், குழந்தை இலக்கிய வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் ஆதரவுடன் ஜூன் 8-10 (2018) -ஆகிய மூன்று நாள்கள் கோலாலம்பூரில், "முதலாம் உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு' ஒன்றை நடத்த முடிவு செய்திருக்கிறது. இம்மாநாட்டின் நோக்கமே "நலிந்து வரும் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்குப் புத்துயிரூட்டல்' தான் என்கிறது மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்.
 தமிழ்நாட்டிலும் இதேபோன்று குழந்தை இலக்கிய மாநாடு பலவற்றை நடத்தினால், குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கு அவை புத்துயிரூட்டுவதாக அமையும். அதுமட்டுமல்ல, குழந்தை இலக்கியத்திற்கு விதை போட்டவர்கள் சங்கத் தமிழர்கள்தாம் என்பதையும் நாம் நினைவிற்கொள்ள வேண்டும்!
 
 - புதுகை பி.வெங்கட்ராமன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com