காவலர் ஈகை பெரிதா? பாவலர் ஈகை பெரிதா?

குலோத்துங்கச் சோழன் மீது "கலிங்கத்துப்பரணி' பாடியவர் ஜெயங்கொண்டார். அவர் இயற்றிய தனிப்பாடல்கள் இரண்டு சுவை உடையன. இவர் சோழ அரசன் ஈகையைப் பெற்றவர்.
காவலர் ஈகை பெரிதா? பாவலர் ஈகை பெரிதா?
Updated on
1 min read

குலோத்துங்கச் சோழன் மீது "கலிங்கத்துப்பரணி' பாடியவர் ஜெயங்கொண்டார். அவர் இயற்றிய தனிப்பாடல்கள் இரண்டு சுவை உடையன. இவர் சோழ அரசன் ஈகையைப் பெற்றவர்.
 அவ்வீகையைச் சோழ அரசர் உயர்வாகக் கருதி, பரிசில் பெற்ற புலவரைத் தாழ்வாகக் கருதிய குறிப்பை அறிந்த ஜெயங்கொண்டார்,
 "நான் பாடிய பாடல் - "உனக்கு ஈந்தேன்'; அது நான் கொடுத்த பரிசு - ஈகை. அப்பாடல் பூவுலகில் அழியாது நிலைத்திருக்கும் மன்னா! ஆனால், நீ கொடுத்த பொருளோ நிலைத்திருக்கமாட்டாத ஆகாப் பொருள்'' என்று அறிவுமிக்க சோழ
 மன்னனின் உயர்வு மனப்பான்மையை, கீழே தள்ளி, "புலவர் இயற்றும் பாடலின்' அழியாத மேன்மையை அருளிச்செய்து, அறிவு கொளுத்திய ஜெயங்கொண்டாரது தனிப்பாடல் அறியத்தக்கது.
 "காவல ரீகை கருதுங்காற் காவலர்க்குப்
 பாவலர் நங்கும் பரிசெவ்வா - பூவினிலை
 ஆகாப் பொருளை அபயனளித்தான் புகழாம்
 ஏகாப் பொருளளித்தேம் யாம்'
 (தமிழ் நாவலர் சரிதம், பா.118)
 என்ற பாடலில், "பாவலர் ஈகையே நிலைத்தது - பெரியது' என்று நிலைநாட்டியுள்ளார் ஜெயங்
 கொண்டார்.
 மற்றொரு பாடலும் சிந்திக்கத்தக்கது. இவர் செட்டிமார் பற்றி "இசையாயிரம்' பாடியபோது, வாணியர்கள் தங்கள் ஊர் "புகார்' தங்களுக்கு ஊர் எனப் பாடக் கூறி வேண்டினர்.
 இவரும் அவர்கள் விண்ணப்பத்தை ஏற்று ஒரு பாடல் இயற்றினார். வாணியர்கள் என்பவர் செக்காராவார். அப்பாடல் வருமாறு:
 "ஆடுவதும் செக்கே அளப்பதுவும் எண்ணையே
 கூடுவதும் சக்கிலியக் கோதையே - நீடுபுகழ்க்
 கச்சிச்செப் பேட்டிற் கணிக்குங்காற் செக்கார்தாம்
 உச்சிக்குப் பின் புகாரூர்' (த.நா.ச. பா.119)
 என்ற பாடலின் மூலம், சக்கிலியக் கோதை என்பது பிண்ணாக்கையும், கச்சிச் செப்பேட்டில் என்பது எண்ணிப் பார்த்து என்றும், உச்சிக்குப் பின்புகாரூர் என்பது, வெயில் தாழ்வதற்கு முன் தன் ஊர் புகமாட்டார் என்றும் நயம்படப் பாடிய பாடல் சிந்திக்கத்தக்கதன்றோ!
 
 -புலவர் தா.குருசாமி தேசிகர்
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com