Enable Javscript for better performance
"மருத்துவர்' மனோன்மணி!- Dinamani

சுடச்சுட

  
  tm1

  சென்னைப் பண்டிதை' என அழைக்கப் பெற்றவர் மனோன்மணி எனும் பெண் கவிஞர். குன்றத்தூரை அடுத்த மண்ணிவாக்கத்தில் பிறந்தவர். இவரது காலம் 1863-1908. செங்குந்த முதலியார் குலத்தில் அருணாசல முதலியார் மகன் முருகேச முதலியாருக்கும் அலர்மேல் அம்மையாருக்கும் மூன்று ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தனர். பெண் குழந்தையின் பெயர் மனோன்மணி.
   முதலியார், மருத்துவ நூல்களைப் படித்தறிந்து மருத்துவ அறிவு பெற்றவர். மருத்துவர் உதவியுடன் சில மருந்து வகைகளைச் செய்வதிலும், சில நோய்களுக்குரிய காரணங்களைக் கண்டறிவதிலும் கைதேர்ந்தவர். தம் வீட்டில் சிறு நூல் நிலையம் ஒன்றை அமைத்ததோடு, சிறிய மருத்துவ நிலையத்தையும் நடத்தி வந்தவர்.
   இவருடைய மகள் மனோன்மணி 1863-இல் பிறந்து, உரிய பருவம் வந்ததும் தொடக்கநிலைப் பள்ளியில் சேர்ந்து கல்வி கற்றார். தம் தந்தையாரிடம் அந்தாதி, கலம்பகம், பிள்ளைத்தமிழ், பெரியபுராணம், திருவிளையாடற் புராணம் முதலிய நூல்களைப் பாடம் கேட்டார். மருத்துவத் துறையிலும் தந்தையாரிடம் பயிற்சிபெற்று வந்தார். சைவத் திருமுறைகளைத் தாமாகவே படித்துணர்ந்தார். தமது பதினெட்டு வயதில் குடும்ப மருத்துவப் பயிற்சி பெற்ற ஒருவரைக் காதல் மணம் செய்துகொண்டு, இல்லறத்தை இன்புற நடத்தி வந்தார்.
   ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, கணவர் நோய்வாய்ப்பட்டு இறந்தார். அப்பொழுது அம்மையாருக்கு வயது 25. தம் கணவரின் மரணத்திற்குப் பிறகு தஞ்சாவூர் சுப்பிரமணியப் பண்டிதர் எனும் மருத்துவரிடம் நான்கு ஆண்டுகள் மருத்துவப் பயிற்சி பெற்றார். சிறப்பாகப் பெண்கள் மருத்துவத்திலும், குழந்தைகள் மருத்துவத்திலும் பெயர்பெற்று விளங்கினார். சென்னையிலுள்ள கொண்டித்தோப்பு எனும் பகுதியில், தம் இல்லத்தில் மருத்துவத் தொழில் செய்து வந்தார். அட்டாவதானம் பூவை கலியாணசுந்தர முதலியார் அம்மையாருடைய வரலாறு முழுவதையும் கேள்வியுற்று வருத்தமும், அவர் மீது அன்பும் கொண்டார். அம்மையார் அவரிடம் தமிழ் இலக்கண - இலக்கியங்களைக் கற்றார்.
   1. பழநிப் பாமாலை, 2. பழநி யிரங்கல் விருத்தப் பதிகம், 3. பழநி வெண்பாப் பதிகம், 4. திருவாமாத்தூர் அழகியநாதர் பஞ்சரத்தினம், 5. சென்னைக் கந்தசுவாமிப் பதிகம், 6. திருவானைக்கா அகிலாண்டநாயகி அந்தாதி, 7. திருமுல்லைவாயில் கொடியிடை நாயகி அந்தாதி, 8. திருமயிலைக் கற்பகவல்லி அந்தாதி, 9. திருக்கழுக்குன்றத் திரிபுரசுந்தரி மாலை, 10. பழநிச் சன்னிதி முறை, 11. பழநிச் சிங்காரமாலை, 12. பழனிச் சிங்காரப் பதிகம், 13. பூவைச் சிங்காரச் சதகம், 14. குன்றத்தூர் பொன்னியம்மன் பதிகம், 15. புதுவைக் காமாட்சியம்மன் பதிகம், 16. ஒருவளென்னும் சொல்லின் மேலெழுந்த வினாக்களும் விடைகளும், 16. தனிப்பாடற்றிரட்டும் பல பாடற்றிரட்டும், 17. மனோன்மணீயம் (மருத்துவ நூல்) ஆகிய நூல்களை இவர் இயற்றியுள்ளார்.
   "மனோன்மணீயம்' என்னும் மருத்துவ நூல் (எங்கும் கிடைக்கவில்லை) கிடைத்தால் தமிழ்ச் சமுதாயத்திற்கு மிகவும் பயன்படும். இவருடைய தமிழறிவையும், மருத்துவ அறிவையும் வியந்து தமிழறிஞர்கள் பலர் இவரைப் பாராட்டியுள்ளனர்.
   திருச்சியிலுள்ள திருஆனைக்கா என்னும் இடத்தில் குடிகொண்டிருக்கும் அகிலாண்ட நாயகியைப் போற்றி 102 பாக்களில் (கட்டளைக் கலித்துறை) பாடியுள்ளார். சிவபெருமானின் பெருமைகள், கொடியிடை நாயகியின் சிறப்புகள் முதலியவற்றை அந்தாதித் தொடையில் யாத்துள்ளார். திருவானைக்கா அகிலாண்ட நாயகி அந்தாதியிலிருந்து ஒரு பாடல் வருமாறு:
   "குயிலைப் பழித்த மொழியையும் மேகம் குறித்தகவும்
   மயிலைக் கழித்த வொயிலையும் கொல்லன் வடித்தெடுத்த
   அயிலை நிகர்த்த விழியையும் கண்டங் கதிசயித்துக்
   கயிலைக் கிறையவன் காலையில் ஏங்குறுங் காரணங்கே' (பா-84)
   என்ற பாடலில் "அன்னையின் மொழி குயில் போன்று இனிது; அன்னை மயில் போன்ற சாயல் உடையவள்; அவள் விழி வேல் போன்று கொடியது பகைவனிடத்தில்; ஆனைக்கா பெருமானை ஏங்க வைக்கும் அழகு அன்னையிடையது' என்கிறார்.
   "அணி கொண்ட காவை அகிலாண்ட நாயகிக்கு அன்பு செய்யும்
   பணி கொண்ட பாவை மனோன்மணி'
   என்று தண்டபாணி சுவாமிகள் இக்கவிஞரைப் போற்றியுள்ளார். மருத்துவ அறிஞர்களும், தமிழ்ப் புலவர்களும் இவருக்கு, "ஆயுர்வேத ரத்நாகரம்' என்ற பட்டம் அளித்துள்ளனர்.
   மருத்துவப் பணியை 15 ஆண்டுகள் சிறப்பாகச் செய்துவந்த மனோன்மணி அம்மையார் 45ஆவது அகவையில்(1908) காலமானார். என்றாலும், அவர் தமிழுக்கும் தமிழ் மருத்துவத்துக்கும் ஆற்றிய பணிகள் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
   
   - தாயம்மாள் அறவாணன்
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai