

ஒரு சில சொற்கள் சங்க இலக்கியங்களிலும், இக்கால இலக்கியங்களிலும் இடம்பெற்றுள்ளன. ஆனால், அதற்கான பொருள்தான் வேறுபடுகிறது. எடுத்துக்காட்டாக, "நாற்றம்' நுகர்வதற்கு ஏற்றதாக இல்லாத அருவருப்பான வாசனை என்றே அகராதியில் பொருள் உள்ளது. அதே சமயம் "வாசனை' என்ற பொருளிலேயே பழைய இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ளது.
"தீயுனுள் தெறல் நீ, பூவினுள் நாற்றம் நீ' (பரிபாடல்). நீதான் நெருப்பின் சூடு, நீதான் பூவின் நறுமணம் என்பது இவ்வரியின் பொருள்.
மேலே குறிப்பிட்டதைப் போன்று, "மடி' என்ற வேறொரு சொல் தற்போது "பிறரால் தொடப்படாமல், தூய்மையாக இருக்கும் "தன்மை' என்ற பொருள் இருந்தாலும், பழைய பாடல்களில் "சோம்பல்' என்றே பொருள் வருகிறது.
திருக்குறளில் (பொருட்பால்-அரசியல்) "மடியின்மை' என்ற அதிகாரமே உள்ளது (சோம்பல் இல்லாதிருத்தல்). கம்பராமாயணத்தில் (பால காண்டம்) "சோம்பல்' என்கிற பொருளிலேயே "மடி' ( மடி யிலா அரசினான் மார்பு உளாளோ?) பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
சங்க இலக்கியம், நீதி இலக்கியமான திருக்குறள், காப்பிய இலக்கியமான கம்பராமாயணம் இவற்றில், பழக்கமான வார்த்தை ஒன்று முற்றும் வேறு பொருளில் புழங்கியதில் வியப்பில்லை. ஆனால், அண்மைக்காலக் கவிஞரான அருணகிரிநாதர், நாம் எல்லாரும் அறிந்த "குண்டர்' என்ற வசைச் சொல்லை சகட்டு மேனிக்குப் பயன்படுத்தியது வியப்புதான்!
"தோழமை கொண்டுச லஞ்செய் குண்டர்கள்
ஓதிய நன்றிம றந்த குண்டர்கள்
சூழ்விர தங்கள்க டிந்த குண்டர்கள்- பெரியோரைத்
தூஷண நிந்தைப கர்ந்த குண்டர்கள்
ஈவது கண்டுத கைந்த குண்டர்கள்
சூளுற வென்பதொ ழிந்த குண்டர்கள்'
அதாவது, நட்பைக் காட்டிப் பின்னர் நண்பருக்கு வஞ்சகம் செய்யும் கீழோர் போதித்த நன்றியை மறந்த கீழோர்; கடைப்பிடிக்க வேண்டிய விரதங்களை விலக்கிய கீழோர்; பெரியோரைத் தவறாகப் பேசி, நிந்தித்துப் பேசிய கீழோர்; கொடுப்பதைக் கண்டு அதைத் தடுத்த கீழோர்; உண்மை சொல்வதையே ஒழித்த கீழோர் எனக் குண்டர்களை "கீழோர்' என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார்.
இந்நாளில், பாலியல் குற்றங்களுக்கு விதிக்கப்படும் "குண்டர்கள் சட்டத்துக்கும்' அருணகிரியார் "கீழான மக்கள்' என்றே ஒரு சிலரை வகைப்படுத்தி "குண்டர்கள்' என்று கூறுவதற்கும் எத்தனை வேறுபாடு இருக்கிறது!
-வாதூலன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.