கார்த்திகையின் சிறப்பெழுதிய கவிக்கனல் பாரதி

வறிதே கழியும் பொழுதின்மீது, வரலாறாகும் செயல் எழுதிக் களித்தவர் மகாகவி பாரதி. பதர்ச் செய்திகள் அனைத்தையும் பயன்நிறை அனுபவமாக்கி,"வருடம் பலவினும்
கார்த்திகையின் சிறப்பெழுதிய கவிக்கனல் பாரதி

வறிதே கழியும் பொழுதின்மீது, வரலாறாகும் செயல் எழுதிக் களித்தவர் மகாகவி பாரதி. பதர்ச் செய்திகள் அனைத்தையும் பயன்நிறை அனுபவமாக்கி,
"வருடம் பலவினும்

ஓர் நாட்போல மற்றோர் நாள் தோன்றாது,
பலவித வண்ணம் வீட்டிடைப் பரவ
நடத்திடும் சக்தி நிலையமாக'

கவிதைத் தலைவியைப் போற்றியவர். செயலற்ற நாளை, முடம்படு தினம் என்று தூற்றியவர். ஒவ்வொரு நாளையும் இன்று புதிதாய்ப் பிறந்த நாளாகக் கருதிச் செயல்படும் அவர், கார்த்திகை மாதத்துக் கார்த்திகைத் திருநாள் குறித்துக் கவித்துவம் மிகுந்த சொற்சித்திரம் ஒன்றைச் சரியாக ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் தந்திருக்கிறார்.

கொடுங்கோன்மைக்கு எதிரான செய்திகளை எந்த வகையில் எல்லாம் தந்துவிட முடியுமோ, அந்த வகையில் தந்து இந்தியர்களின் ஊக்கத்திற்கு ஆக்கம் தேட, காலத்தைக் கருவியாகக் கைக்கொண்டவர் பாரதி. அதற்குக் கார்த்திகை மாதக் கார்த்திகைத் திருநாள் ஒரு கருவியாகிவிடுகிறது. கண்ணனை முன்னிறுத்தி, கடமைபுரியும் தேசபக்தர்களுக்கு ஊக்கம் அளிக்கிறது இச்செய்தி.

""கார்த்திகையில் கார்த்திகை நாள். கார்மேனிக் கமலக்கண்ணன் கொடியவரைக் கடிந்தடக்கிய நாள். உலகினில் கொடுங்கோலர்கள் கொட்டத்தைக் கருணாநிதியான கடவுள் அடக்கிய நாள். 

மாதவ முனிவரையும் மூவாவுலகத்தவரையும் மிகுவலியால் மாவலி யரக்கன் இழைத்த தீச் செயல்களைத் தீர்த்துக் காத்து திருவிக்ரமனான திருமால் ஈரடியால் மூவுலகளந்து மிச்சத்திற்கவனை மஹாதலத்தில் மறைய மலரடி கொண்டழுத்திய மாண்புறு நாள். பல்லாயிரம் கைகளுடன் பாரினில் பல்லிடர்ப்படுத்தி வந்த கல்லனைய நெஞ்சத்துக் கொடுங்கோலன் மறமன்னன் கார்த்தவீரியார்ச்சுனன் கரசிரங்களைக் கோடாலி கொண்டு பரசுராமன் கொய்ததாற் குவலயம் மகிழ்ந்திடும் குணமுள நாள்.

வானுலகத்தவர்க்கு வாதைகள் பல வலிய விழைத்து வந்த வாணன் ஆயிரந்தோளும் பொழிகுருதி பாயத் திருவாழி கொண்டு தூய திருமால் துணித்த நாள். பாரதர்கள் வெந்துயர்களையும் பரந்தாமன் விரட்டிய நாள். ஆரியர்களின் ஆண்மை அவனில் பொலிந்திடு நாள். வானவரும் தானவரும் வருத்தம் நீங்கி வாழ்க்கை நிலையில் வனப்பை எய்திய நாள். மறமிடர்ப்படுக்கப்பட்ட மஹிமைப் பெருநாள். அறம் தழைத்தோங்க ஆரம்பித்த ஆனந்தத் திருநாள். தீபச் சோதியால் தேவாலயத்தை நிரப்பிடு நிகரில் திருநாள்.வாண வேடிக்கையும், மாவலியாட்டும் மலிந்திடு நாள்.

பாரத மக்கள் ஸ்ரீபகவானருள் பெற்ற நாள். கிருபாநிதிக் கடவுள் கருணை பொலிந்திடு நாள். பார் உவந்த உத்தமத் திருநாள். கார்த்திகையில் கார்த்திகை நாளே.''

ஒளிமயமாக மாலைப்பொழுதை மாற்றும் அருள்மயமான இந்நன்னாளை நினைந்து மகாகவி பாரதி கவிமயமாய்த் தந்ததை, இந்தியா இதழில் (4.12.1909 அன்று) வந்ததாய்த் தந்தவர் சீனி.விசுவநாதன். இந்தக் கட்டுரையை மீளவும் எடுத்துப் படிக்கிறபோது, அவர் எதைத்தான் விட்டுவைத்தார் என்றே எண்ணத் தோன்றுகிறது. சிந்தனையில் பாரதி ஒளி பரவத் தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com