
வெள்ளிவிழா (25 ஆண்டு), பொன்விழா (50 ஆண்டு), பவளவிழா (75 ஆண்டு) என்று நிறுவனங்கள் கொண்டாட, மனிதர்கள் மணிவிழா (60ஆண்டு), முத்துவிழா (80 ஆண்டு) என்று கொண்டாடி மகிழ்கிறார்கள். அவற்றுள் ஒன்றான "பொன்விழா' என்பது பற்றிய மொழி அறிவும் அதாவது, அதில் அடங்கியுள்ள வரலாற்றை அறிவதும் மகிழ்ச்சிக்குரியதே!
"பொன்' என்ற சொல் திருக்குறளில் (நான்கு முறை) "தங்கம்' ("ஒறுத்தாரை ஒன்றாக வைப்பாரே வைப்பர் / பொறுத்தாரை பொன்போல் பொதிந்து' 155, (267) என்ற பொருளிலும்; இரும்பு ("அரம்பொருத பொன் போலத் தேயும் உரம்பொருது / உட்பகை உற்ற குடி' 888, (931) என்ற பொருளிலும் கையாளப்பட்டுள்ளன.
அவ்வாறே சங்க இலக்கியத்திலும் வந்துள்ளது. தங்கம் - "பொன் புனை உழிஞை வெல்போர் குட்டுவ" (பதிற்று. 22.27). இரும்பு-"கள்வர்தம் பொன்புனை பகழி" (குறுந்.16.2).
இரும்பு என்பது கரிய உலோகம் என்ற பொருளுடைய "இரும்பொன்' என்ற வடிவத்திலிருந்து தோன்றியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. செம்பொன் (செம்பு), பைம்பொன் / பசும்பொன் (தங்கம்) என்ற வழக்குகளும் தமிழில் உள்ளன.
தொல்காப்பியம் (புள்ளி மயங்கியல்.61) பொன்னின் மாற்று வடிவமாக "பொலம்' என்ற ஒரு சொல்லைக் குறிப்பிட்டுள்ளது. ஆனால், வரலாற்று நோக்கில் "பொலம்' என்பதிலிருந்தே "பொன்' என வந்திருக்க வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். "போலும்' என்ற சொல் "போன்ம்' என மாறும் என்று தொல்காப்பியம் (மொழி மரபு.18) விளக்கியுள்ளது. போலும் }போல்ம்-போன்ம். அந்த முறையில் பொலம் என்பது "பொல்ம்' என்றும், "பொன்ம்' என்றும் மாறி "பொன்' என்ற வடிவத்தைப் பெற்றிருக்க வேண்டும்.
விழா
"விழா' என்ற வடிவம் இரண்டு முறையும், அதன் மூல வடிவமான விழவு என்பது 87 முறையும் சங்க இலக்கியத்தில் வந்துள்ளன. "பெரு விழா விளக்கம் போல' (அகநா-185.11). விழவுக்களம் கமழும் உரவு நீர்ச் சேர்ப்ப (நற்றி-19.5). அது விரும்புதல் என்ற பொருள் உடைய "வீழ்' (விரும்பு) என்ற வினை அடிச் சொல்லிலிருந்து உண்டான ஆக்கத் தொழில் பெயர்.
"வீழ்காய்' - விரும்பும் காய் என்பது நற்றிணை (271.6). விழா, விழவு என்ற இரண்டு வடிவங்களும் திருக்குறளில் பதிவாகவில்லை. ஆனால், அதன் அடிச் சொல்லான "வீழ்' என்பதிலிருந்து உண்டான விழு ("விழுப்பேறு'-162), விழுப்பம் ("ஒழுக்கம் விழுப்பம் தரலான்'-131) என்ற சொற்கள் "சிறந்தது' என்ற பொருளில் வந்துள்ளன.
விழா- விழவு வடிவ மாற்றம், நிலா-நிலவு, இரா- இரவு என்று பிற சொற்களிலும் சங்க இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால், அவற்றைக் கிளைமொழி வழக்குகள் என்று மொழியியலும்; திசைச்சொல் (எச்சவியல்-1) என்று தொல்காப்பியமும் குறிப்பிடும்.
பொன்விழா
"பொன்விழா' என்ற தொகையை, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி (தொகுதி ஐந்து) தற்கால வழக்கு என்று பதிவு செய்துள்ளது. எனவே, அது சென்ற நூற்றாண்டில் ஆக்கப்பட்ட புதிய தொடர்.
-முனைவர் செ.வை.சண்முகம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.