பத்மாஸனியின் முரளி சரித்திரம்!

பத்மாஸனி எனும் பெண் கவிஞர் எழுதிய முதல் நூலான - விருத்தப்பாவில் அமைந்த "முரளி சரித்திரம்' மதுரைத் தமிழ்ச் சங்கத்தாரால் 1905-ஆம் ஆண்டு பதிப்பிக்கப் பெற்றுள்ளது.
பத்மாஸனியின் முரளி சரித்திரம்!

பத்மாஸனி எனும் பெண் கவிஞர் எழுதிய முதல் நூலான - விருத்தப்பாவில் அமைந்த "முரளி சரித்திரம்' மதுரைத் தமிழ்ச் சங்கத்தாரால் 1905-ஆம் ஆண்டு பதிப்பிக்கப் பெற்றுள்ளது. இது தவிர, மீனாட்சி கீர்த்தனம் (1905),  துரோபதைச் சரித்திரக் கும்மி (1906), நலுங்கு பத்தியம் (1906), ஸாவித்ரி சரித்திரக்கும்மி (1918), அனுசூயைச் சரித்திரக்கும்மி (1918), கோரக்கும்பார் சரித்திரக்கும்மி (1918), நாரதர் விஜயம் என்னும் கும்மி (1918), பிரகலாத சரித்திரக்கும்மி (1920), ருக்மாங்கத சரித்திரக் கும்மிப்பாட்டு (1928), ஊஞ்சல் லாலி (1934) ஆகிய பத்து நூல்களும் கிடைத்துள்ளன.  
முரளி சரித்திரத்தின் கதைச் சுருக்கம்:
கன்னியாபுரம் என்ற நகரில் அந்தணர் ஒருவர் தம் மனைவியோடு வாழ்ந்திருந்தார். அவருக்கு நீண்ட நாள்களுக்குப் பிறகு பெண் மகவு  ஒன்று பிறக்கிறது. அதற்கு "முரளி' என்று பெயர் சூட்டி வளர்க்கிறார். திருமால் பக்திப் பாடல்களைப் பாடி வளர்ந்து வருகிறாள் ஐந்து வயதான முரளி. 
பக்கத்து நாட்டில் ஏகாந்த நகர் என்ற அக்ரஹாரத்தில் வேதியர் வீதிகள் இருந்தன. அங்கே சாஸ்திரங்கள் உணர்ந்த பிராமணர்கள் நாள்தோறும் குளக்கரைக்குச் சென்று வேதங்கள் ஓதி வருவதும், மந்திரங்கள் கூறுவதும் வழக்கம். அம்மந்திரங்களைப் புலைச்சேரியில் பிறந்த சிறுவன்  ஒருவன் ஒளிந்திருந்து பிழையறக் கற்று வருகிறான். இதனால், ஆத்திரம் அடைந்த அவனுடைய பெற்றோர் அவனைக் கட்டிவைத்து அடிக்கின்றனர். 
ஆயினும், அவன் வேதபாராயணத்தில் கருத்தாக இருந்து முழுவதையும் கற்றுக்கொள்கிறான். மேலும், அக்ரஹாரங்கள் தோறும் பிச்சை எடுத்து உண்டு வருகிறான். அந்தணர்களைக் கண்டு உதவிகள் செய்து வருகிறான். அவர்களும் இவன் வேதங்கள் கற்றுணர்ந்ததைக் கண்டு "சங்கர சாஸ்திரிகள்' என்றே அழைக்கின்றனர். அப்பா தீட்சிதர் என்பவர், "சங்கர சாஸ்திரியே என் வீட்டில் தங்கி, தப்பாமல் பூசை செய்வாய்' என்று வேண்ட, இவனும் அவர் இல்லத்தில் தங்குகின்றான். 
அப்பா தீட்சிதர் அவனிடம், "முரளி எனும் பெண் ஹரி பஜனை செய்து நான்கு வேதங்களும், ஆறு சாஸ்திரங்களும் கற்றவள். அவளை உனக்கு மணமகள் ஆக்குகிறேன்' என்கிறார்.
சங்கரன், முரளியின் இல்லத்திலேயே வாழ்கிறான். முரளி புஷ்பவதியாகிறாள். அவனும் விடலைப் பருவம் எய்துகிறான். அப்பா தீட்சிதர் முரளியை சங்கரனுக்கு மணம் முடித்துக் கொடுக்கிறார். ஆனால், சங்கரன் மனம்  குற்றவுணர்வில் தவிக்கிறது. 

"என்ன செய்குவேன் இந்தக் கன்னியரை
மாலையிட்டிடவும் நீதி உண்டோ?
பின்னமான பறையர் ஜாதியில் உதித்து
இந்தக் கன்னியரைக் கொள்வாருண்டோ?
கற்புள்ள மங்கையரை அற்பனான பறையன்
எப்படித் தொடுவேன் நானறியேன்
தப்பிக் கொள்ளாவிட்டால் சாபம்
வரும் இவளால் தாய் தந்தை
பறைச்சேரி போவோம்'      (11ஆம் கட்டம்)

என்று அவன் புறப்படுகிறான். மனைவி முரளி கணவனின் வாட்டம் கண்டு "என்ன காரணம்?' என்று கேட்க,  "திருமணம் நடந்ததைக்கூட அறியாத என் தாய் - தந்தையர் கவலை கொள்வார்; நான் மட்டும் சென்று அவர்களைப் பார்த்து வருகிறேன். நீ இங்கு இரு' என்று கூறுகிறான். மனைவி முரளியும் "உடன் வருவேன் உம்மோடு' என்று புறப்படுகிறாள். "காடு, மலை, தாண்டிச் செல்ல வேண்டும். மங்கையே உன் கால்கள் வருந்தும்' என்று கூறி அவன் மறுக்கிறான். ஆனால், "தங்கள் தாய்-தந்தையரைக் கண்டு பணிந்திட நானும் வருவேன்' என்று அவளும் புறப்படுகிறாள்.
"கள்வர் வருவர், நகைகளைக் கழற்றிக்கொடு' என்று அவற்றை வாங்கித் துணியில் கட்டிக்கொண்டு, எப்படி மனைவியைத் தவிர்ப்பது என்ற எண்ணத்துடன் காடு, மேடு கடந்து செல்லும்போது,  மூர்ச்சையற்றுக் கிடப்பவன்போல நடித்து, மயங்கி விழுகிறான். தண்ணீர் எடுத்து முகத்தில் தெளிக்கலாம் என்று ஒரு கிணற்றில் தண்ணீர் எடுக்கச் சென்ற முரளியின் பின்னே சென்று அவளைக் கிணற்றில் தள்ளிவிட்டு ஓடிவிடுகிறான் சங்கரன். 
தண்ணீரில் முழுகியும், எழுந்தும் கூக்குரலிட்டு அழைத்தும் துடிக்கிறாள் முரளி. வழிப்போக்கர் சிலர் முரளியின் குரல் கேட்டுக் கிணற்றிலிருந்து அவளைக் காப்பாற்றி, "எப்படி அம்மா நிகழ்ந்தது?' என்று கேட்க, "புலி துரத்தியது, அதனால் அறியாமல் கிணற்றில் விழுந்தேன்' என்று கணவனைக் காட்டிக்கொடுக்காமல், மாற்றிக் கூறுகிறாள். பின் தந்தையிடம் கொண்டுபோய் அவர்கள், அவளைச் சேர்க்கின்றனர். 
மகளின் உடை கிழிந்ததையும், உடம்பில் உள்ள காயத்தையும் கண்டு தந்தை பதறிப்போய் காரணம் கேட்க, "எந்தன் நாதன் மொழியைத் தட்டி ஏகினதன் விளைவால் இவ்வாறு ஆயிற்று' என்று  கூறுகிறாள்.
பிறகு ஒருநாள் முரளி இறந்து விட்டதைக் கூற முரளியின் இல்லம் வருகிறான் சங்கரன். அங்கிருந்த முரளியைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகிறான். "பாவி உன் குலம் உரைப்பாய்! பொல்லாத துரோகி. வேதிய வேடம் பூண்ட பாதகனே... பாழும் கிணறு தன்னில் தோஷம் என்று எண்ணாமல் தள்ளியேவிட்ட சண்டாளா' என்று கோபிக்கிறாள். 
சங்கரனும் நடுநடுங்குகிறான். துளசி, தந்தையிடம் சென்று "தந்தையே! நவபாண்டத்தைச் சண்டாளன் ஒருவன் தீண்டிய பின் கிரகத்தில் அவனை சேர்க்கலாமோ?' என்று தீ வளர்க்கச் சொல்லி, அதில் பாய்ந்து உயிரை விடுகிறாள். குற்றம் உணர்ந்த சங்கரனும் அத்தீயினுள் பாய்ந்து இறக்கிறான்.
தீயில் எரிந்த முரளியின் உடல் சிறு மூங்கிலாக மாறி, கானம் இசைக்கும் புல்லாங்குழலாக மாறுகிறது. சங்கரனின் உடல் ஆடு, மாடுகளை மேய்க்கும் சிறு மூங்கில் தடியாக மாறுகிறது. இதுதான் முரளி சரித்திரத்தின் கதை. இக்கதையைக் கவிதை வடிவில் பாடியுள்ளார் பத்மாசனி அம்மையார். இக்கதை நாடோடிக் கதையாக ("மைனா கூறிய கதை' என்ற பெயரில்) சில மாற்றங்களோடு வெளிவந்திருப்பதாகத் தெரிய வருகிறது.   
இந்நூலிலிருந்து, 115 ஆண்டுகளுக்கு முன்பு சாதி வேறுபாடுகள் எவ்வாறு இருந்தன; பொய் சொல்லி ஒரு பெண்ணைத் திருமணம் செய்வது குற்றம்;  கணவன் தனக்கு இழைத்த தீங்கை  யாரிடமும் சொல்லாத பெண்ணாக முரளி வாழ்ந்தது;  ஒவ்வொரு பாட்டிலும் ராகம், தாளம் எழுதியிருப்பதால் ஆசிரியர் சிறந்த இசையறிவு உடையவர் என்பது; பல இடங்களில் அந்தணர் பேச்சு மொழியில் பாடல் நடை அமைந்துள்ளதால், நூலாசிரியை அந்தணர் குலத்தில் பிறந்தவர் - என்பன போன்ற தகவல்களை அறிய முடிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com