நாலடியாரின் சீரடிகள்!

"ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி' என்னும் பழமொழியில் நாலும் என்பது நாலடியாரைக் குறிக்கிறது. திருக்குறளுக்கு அடுத்தபடியாகப் பேசப்படும் நீதி நூல் நாலடியார்.
நாலடியாரின் சீரடிகள்!
Published on
Updated on
2 min read

"ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி' என்னும் பழமொழியில் நாலும் என்பது நாலடியாரைக் குறிக்கிறது. திருக்குறளுக்கு அடுத்தபடியாகப் பேசப்படும் நீதி நூல் நாலடியார்.
 "பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்' என்னும் சொற்றொடரால் நாலடியாரின் சிறப்பு பெரிதும் விளங்கும். நாலடி வெண்பாக்களால் இயற்றப்பட்டிருப்பதால் "நாலடி' என்று அழைக்கப்பட்டு, பிறகு "ஆர்' விகுதியும் இணைந்து "நாலடியார்' என வழங்கப்பட்டது. நானூறு வெண்பாக்களைக் கொண்டமைந்ததனால் "நாலடி நானூறு' என்றும் வழங்கப்பட்டிருக்கிறது. "வேளாண் வேதம்' எனவும் குறிக்கப்பட்டிருக்கிறது.
 கடவுள் வாழ்த்துத் தவிர்த்து, 400 பாடல்களும், 40 அதிகாரங்களும், 12 இயல்களும் உள்ளன. ஓர் அதிகாரத்துக்குப் பத்துப் பத்துப் பாடல்களாக நாற்பது அதிகாரங்களிலும் நானூறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
 திருக்குறளைப் போலவே அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பாலைப் பற்றியப் பாடல்கள் உள்ளன.செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, அறன் வலியுறுத்தல், துறவு, பிறர்மனை நயவாமை, ஈகை, கல்வி, குடிப்பிறப்பு, மேன்மக்கள், நல்லினம் சேர்தல், நட்பாராய்தல், கூடா நட்பு, அறிவுடைமை, நன்றியில் செல்வம், ஈயாமை, அவையறிதல், பேதைமை, கயமை, கற்புடை மகளிர் முதலிய 40 அதிகாரங்களைக் கொண்டு விளங்குகிறது.
 நாலடியாரின் அருமை பெருமைகளைக் கற்றுணர்த்த ஜி.யு.போப், அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அகிலம் உணரச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 நாலடியார் பற்றிய ஒரு கர்ண பரம்பரைக் கதையை வீரமாமுனிவர் 1730-ஆம் ஆண்டு, செப்டம்பர் 13-இல் தாம் எழுதி வெளியிட்ட "செந்தமிழ் என்று அழைக்கப்படுகின்ற தமிழ் மொழியின் இலக்கணச் சிறப்பு' என்னும் ஆங்கில நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
 எண்ணாயிரம் தமிழ்ப் புலவர்கள் ஒரு குறிப்பிட்ட அரசவைக்கு வருகிறார்கள். அந்த அரசன், கல்வியிற் சிறந்த - புலமையில் தேர்ச்சி மிக்கோரை ஆதரிக்கும் நற்குணம் படைத்தவன். அவன்
 இந்தப் புலவர்களை வரவேற்று, உபசரித்து உணவு, உறைவிடம் அளித்து, வேண்டிய வசதிகள் செய்து கொடுக்கிறான்.
 அரசனுடைய வசதி வாய்ப்புகளை அனுபவித்துக்கொண்டு அங்கு ஏற்கெனவே இருந்த புலவர்களுக்கு, இவர்கள் மீது பொறாமை ஏற்படுகிறது. அவர்கள் இப்புலவர்கள் மீது அரசனுக்கு வெறுப்பு ஏற்படும்படி கதைகளைக் கட்டிவிடுகின்றனர்.
 அரசனும் அதை நம்புகின்ற நிலை ஏற்பட்ட போது, அரசனது மனம் நோகாமல் இருப்பதற்காகவும், தங்களுடைய பாதுகாப்பின் பொருட்டும் அரசனிடம் சொல்லிக் கொள்ளாமல் இரவோடு இரவாக ஊரை விட்டுப் போய் விடுகின்றனர் அந்தப் புலவர்கள். போகும்பொழுது ஒவ்வொரு புலவரும் ஓலைச் சுருளில் ஒவ்வொரு செய்யுள் எழுதி, அதைத் தலையணைக்குக் கீழே வைத்துவிட்டுப் போகின்றனர்.
 காலையில் இச்செய்தி அரசனுக்குத் தெரிய வரும்போது அவன் கடுங்கோபம் அடைகிறான். இருந்த புலவர்களும் அரசன் கோபத்தை மேலும் தூண்டிவிட்டு, உற்சாகம் அடைகின்றனர். அரசன் அவர்கள் எழுதிய ஓலைச் சுவடிகளை ஒன்றாகக் கட்டி ஆற்றில் எறிந்துவிட ஆணையிடுகின்றான்.
 அவ்வாறு ஆற்றில் எறிப்பட்ட ஓலைச்சுவடிகளில் நானூறு மட்டும் நான்கடி இடைவெளியில் ஆற்று நீரை எதிர்த்து மேலேறி வந்தன. இதைக் கண்ட மன்னன் வியப்படைந்து, அந்தப் பாடல்களைப் பாதுகாக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் அதனைத் தொகுக்கிறான். அதுவே "நாலடியார்' ஆயிற்று என்று வீரமாமுனிவர் குறிப்பிடுகின்றார்.
 நாலடியாருக்கு அதிகாரம் வகுத்தவர்கள் பதுமனார் ஆவார். அதிகாரங்களை முப்பாலாய் வகுத்து உரை செய்தவர் தருமர் ஆவார். நாலடியார் வாயிலாக சங்கத் தமிழர்களின் வாழ்க்கை நெறிமுறைகளையும் சமயப் பற்றுகளையும் நன்கு அறிய முடிகிறது. அவற்றுள் மேன்மக்கள் பற்றி வரும் அதிகாரத்தின் 152-ஆவது பாடலைக் காண்போம்.
 இசையும் எனினும் இசையா தெனினும்
 வசைதீர எண்ணுவர் சான்றோர் - விசையின்
 நரிமா உளங்கிழித்த அம்பினின் தீதோ
 அரிமாப் பிழைபெய்த கோல்?
 விரைவோடு நாயின் மார்பைப் பிளந்து சென்ற அம்பைவிட, சிங்கத்தை நோக்கிவிடப்பட்ட குறி தவறிய அம்பு உயர்ந்ததாகும். அதனால் முடிந்தாலும் முடியாவிட்டாலும் சான்றோர் பழியற்ற செயல்களையே எண்ணிச் செய்வர் என்பது பாடலின் பொருள். இதுபோன்ற பயனுள்ள அறநெறிகள் பல இந்நூலில் உள்ளன.
 திருக்குறளைப் போலவே நாலடியார் நல்ல அறநெறிகளை எடுத்தியம்புகிறது. அவற்றை சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் படித்து, பாதுகாத்துப் பயன்பெற வேண்டும்.
 - குடந்தை பரிபூரணன்
 
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com