"தமிழ்த் தாத்தா'வைப் போற்றும் இலக்கியங்கள்!

ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட இலக்கண, இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள் ஆகியவற்றை மீட்டு அச்சில் பதிப்பித்து தமிழன்னைக்கு அணிகலன்களாகச் சூட்டியவர் "
"தமிழ்த் தாத்தா'வைப் போற்றும் இலக்கியங்கள்!
Published on
Updated on
2 min read

ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட இலக்கண, இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள் ஆகியவற்றை மீட்டு அச்சில் பதிப்பித்து தமிழன்னைக்கு அணிகலன்களாகச் சூட்டியவர் "தமிழ்த் தாத்தா' டாக்டர் உ.வே.சாமிநாதையர்.
இவரின் தமிழ்ப்பணி, பதிப்புப்பணி, பெற்ற பட்டங்கள் ஆகியவற்றைப் பாராட்டி கவிஞர் பலர் பாமாலைகளை இயற்றியுள்ளனர். மகாகவி சுப்பிரமணிய பாரதியார், ரவீந்திரநாத்தாகூர், வ.உ.சிதம்பரம்பிள்ளை, இரா.இராகவையங்கார், கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை, நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்பிள்ளை, சுத்தானந்த பாரதியார், மு.இராகவையங்கார். மா.இராசமாணிக்கனார், கி.வா.ஜகந்நாதன் என கவிஞர்களின் பட்டியல் நீளும்.
உ.வே.சா.வின் அரிய பணியைப் போற்றி அவருடைய மாணவர்கள் ஆசிரியர் மீது கொண்ட குரு பக்தியால் ஆசிரியர் துதிப்பாகோவை, நவமணிமாலை, பஞ்சரத்தினம் ஆகிய இலக்கியங்களைச் சில புலவர்கள் படைத்துள்ளனர்.
சேலம் முனிசிபல் காலேஜ் தமிழ் விரிவுரையாளர் கவிராஜ பண்டிதர் ரா.திம்மப்ப அந்தணர் "டாக்டர் உ.வே.சாமிநாதையர் பஞ்சரத்னம்' என்ற நூலை இயற்றியுள்ளார். இந்நூல் காப்புப் பகுதியில் பஞ்சரத்னப் பாமாலை பாட விநாயகப் பெருமானை வேண்டுகிறார். நூல் பகுதியில் ஐயரவர்களின் பிறந்த ஊர், பெற்றோர், ஆசிரியர், கல்வி, பணி, பதிப்பு, நட்பு, ஏடுதேடுதல், சிறப்பு ஆகியவற்றை ஐந்து பாடல்களில் பாடியுள்ளார்.
"பஞ்சரத்னம்' நூலின் முதல் பாடல் உ.வே.சா., உத்தமதானபுரத்தில் வேங்கடசுப்பையர் அவர்களுக்கு மகனாகப் பிறந்தது, பெருமை மிகுந்த சடகோபர், செங்கணம் விருத்தாசல ரெட்டியார், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆகியோரிடத்தில் கல்வி பயின்றது; சடகோப ராமானுஜாசார்யர், பூண்டி அரங்கநாத முதலியார் ஆகியோரிடத்தில் நட்பு கொண்டது; கும்பகோணம், சென்னை, சிதம்பரம் ஆகிய கல்லூரிகளில் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றியது முதலிய செய்திகளைக் கூறுகிறது.
புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், குறுந்தொகை பத்துப்பாட்டு, சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, இலக்கணங்கள், தலபுராணங்கள், சிற்றிலக்கியங்கள் முதலியவற்றை உ.வே.சா., ஓலைச்சுவடிகளிலிருந்து படியெடுத்து அவற்றுக்குச் சிறந்த ஆராய்ச்சி முன்னுரை எழுதி, குற்றமில்லாமல் அச்சிட்டு வெளிகொணர்ந்த அரிய பணியைப் பாடல் வடிவில் பட்டியலிட்டுக் காட்டுவதுதான் இந்நூலின் தனிச்சிறப்பு.

சீவகசிந் தாமணி சிலப்பதி காரம்ப
திற்றுப்பத் து(ந்)நம்பியார்
திருவிளை யாடலைங் குறுநூறு பரிபாடல்
திருத்தணிகைத் திருவிருத்தம்
ஆடுவது றைக்கோவை யாரூரு லாலீலை
யாற்றூர்ப்பு ராணமயிலை
யந்தாதி யுதயணன் கதைப்பத்துப் பாட்டுமத்
யார்ச்சுனத் தலமான்மியம்
சீவரன் காளத்திப் புராணமணி மேகலை
திருப்பெருந் துறைப்புராணம்
திரிசிரா மலைக்கலைசை பழமலைக் கோவைகள்
சிவக்கொழுந் துப்ரபந்தம்
தாவறநல் லேடுதமைத் தேடியிவை தந்தநின்
தணிவிலிசை சொலப்போகுமோ?
தாமமா ரந்தமிழின் சேமமா நிதிரத்னச்
சாமிநா தக்குரிசிலே. (2)

இப்பஞ்சரத்னம் ஸ்ரீசக்கரவர்த்தி இராஜகோபாலாசாரியாருக்கு உரிமை செய்யப்பட்டு, ஸ்ரீசிவோகம் ஐயரின் பொருளுதவியால் 1939-இல் நூலாக வெளிவந்துள்ளது.
செந்தமிழ்க் கற்பகமான பெரும் பேராசிரியர் உ.வே.சா.விடம் மாணவராயிருந்து தமிழ் பயின்றவர் வே.முத்துஸாமி ஐயர். இவர் ஆசிரியர் மீது துதிப்பாக் கோவை, நவமணிமாலை ஆகிய இரு குறுநூல்களைப் படைத்துள்ளார். 1906-ஆம் ஆண்டில் உ.வே.சா.வுக்குத் துரைத்தனத்தார் "மகா மகோபாத்தியாயர்' என்ற பட்டத்தை அளித்தபோது, மகாகவி பாரதியார் உ.வே.சா. மீது பாடல்
இயற்றியுள்ளார்.
"அன்னியர்கள் தமிழ்ச்செவ்வி அறியாதார்
இன்றெம்மை ஆள்வோ ரேனும்
பன்னியசீர் மகாமகோ பாத்தியா
யப்பதவி பரிவின் ஈந்து'
இப்பாடலைப் போன்றே ஆசிரியர் துதிப்பாக் கோவையில்,
"செய்ய தமிழ்ச்சுவையைத் தேர்ந்துணரா ஆங்கிலரும்
அய்யர்க் குகந்தே அளித்தனரால் - வையகத்துள்
"மாமோபாத் யாய' ரெனும் வான்பட்டம் இங்கிவர்சீர்
யாமோதற் பாலதோ ஈண்டு'
என்று ஆசிரியர் வணக்கமாக வே.முத்துஸாமி ஐயர் இயற்றியுள்ளார். நவமணிமாலை நூலில், "புதிய கோவில் கட்டுதலைவிடப் பழையதொன்றைத் திருத்திப் பரிபாலித்தல் சிறந்த தருமம் என்றும், புது நூல்கள் இயற்றலைவிட ஓலைச்சுவடிகளில் பதிப்பிக்கப்படாமல் இருந்த பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்து வெளியிட்ட உ.வே.சா.வின் பணி சிறந்ததாகும்' என்பதையும்.
"தேவா லயம்பு திதொன்றுநனி சிறப்ப எடுத்த லினும்சீர்த்தி
காவா தழியும் ஒன்றைநலம் கவினத் திருத்தல் ஆங்கதுபோல்
நாவார் புலமைப் புண்ணியஎந் நாளுந் தமிழ்த்தொன் னூல்பலவா
ஓவா நலத்திற் பதித்துள்ளம் உவந்தாய் கலைமா விற்பனனே'
என்று ஐயரின் பெருமைகளைப் பாராட்டி அந்தாதித் தொடையில் பாடியுள்ளார்.
-கோதனம் உத்திராடம்

19.2.2019 - டாக்டர் உ.வே.சாமிநாதையரின் 165ஆவது பிறந்த நாள்




 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com