அதைத் தந்துவிட்டுப் போவாயாக!

வெள்ளாங்குருகு என்பது நீர்ப்பறவை இனத்துள் ஒன்று. இப்பறவையைப் பத்துப் பாடல்களிலும் வைத்துச் சிறப்பித்துப் பாடியிருப்பதால், "வெள்ளாங்குருகுப் பத்து' என்னும் பெயரைப் பெற்றது. 

வெள்ளாங்குருகு என்பது நீர்ப்பறவை இனத்துள் ஒன்று. இப்பறவையைப் பத்துப் பாடல்களிலும் வைத்துச் சிறப்பித்துப் பாடியிருப்பதால், "வெள்ளாங்குருகுப் பத்து' என்னும் பெயரைப் பெற்றது. 

இது "உள்ளான் குருகு' எனவும் வழங்கப்படும். ஆண் பறவைகளைவிட பெண் பறவைகள் மிகுதியாகக் காணப்படும்.

பரத்தை பொருட்டு தலைவியைப் பிரிந்து செல்கிறான் தலைவன். அதனால், ஊடல் கொண்ட தலைவியைக் காண, ஆற்றுப்படுத்த உணவு உண்ணும் நேரத்தில் சென்றால், அவள் மறுக்காமல் தன்னை ஏற்றுக்கொள்வாள் என்று எண்ணுகிறான் தலைவன். உணவு நேரத்தில் இல்லத்திற்கு வருகிறான். அப்போது தலைவனைப் பார்த்து தோழி கூறும், "மாறாமற் பொருட்டு உண்டிக் காலத்து வாயில் வேண்டி வந்த தலைமகற்குத் தோழி கூறியது'  கூற்றாக அமைந்த பாடல் இது.  

"வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
பசிதின அல்கும் பனிநீர்ச் சேர்ப்ப!
நின்னொன்று இரக்குவென் அல்லேன்;
தந்தனை சென்மோ கொண்ட இவள் நலனே!'
(ஐங்.வெள்ளாங் குருகுப் பத்து-9)

உள்ளான் குருகின் பிள்ளை இறந்ததால், ஆறுதல் கூறச்சென்ற நாரை, தன் வருத்தத்தால், பசி மிகுந்ததால் அங்கேயே தங்கும் குளிர்ந்த நீர்த்துறை தலைவனே!  அந்நாரையைப் போல பரத்தை புலந்தாள் (பரத்தை ஊடல் கொண்டாள்) என்றவுடன் நீ என் தலைவியைத் தேடி வந்திருக்கிறாய். பசி வருந்த வந்திருக்கிற நெய்தல் நிலத் தலைவனே!  உன்னிடம் நான் எதனையும் இரந்து கேட்கப் போவதில்லை. ஏற்கெனவே நின்னால் கவர்ந்து செல்லப்பட்ட என் தலைவியின் 

இளமையை - அழகைத் தந்துவிட்டுப் போவாயாக! என்கிறாள் தோழி! 

என் தலைவியின் அழகு நீ அவளை விட்டுப் பிரிந்து சென்றதால் போயிற்று. அதனால், அதைத் திருப்பிக் கொடுத்துவிடு என்று கேட்கிறாள். நாரை பசியோடு இருப்பது போல நீயும் பசி வந்ததால்தான் இங்கு வந்திருக்கிறாய் என்பதை மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகிறாள் தோழி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com