உறுதிமொழிப் பத்திரம்

சங்க காலத்தில் தலைவனும் தலைவியும் களவு வாழ்க்கையில் ஈடுபட்டுப் பின்னர் மணம் செய்துகொண்டு கற்பு வாழ்க்கையில் ஒருங்கிணைந்து வாழ்ந்து வந்தனர்.
உறுதிமொழிப் பத்திரம்


சங்க காலத்தில் தலைவனும் தலைவியும் களவு வாழ்க்கையில் ஈடுபட்டுப் பின்னர் மணம் செய்துகொண்டு கற்பு வாழ்க்கையில் ஒருங்கிணைந்து வாழ்ந்து வந்தனர். இத்தகைய ஒருங்கிணைந்த வாழ்க்கையில் மணம் என்பது இன்றைய காலத்தைப் போல் தாலி கட்டும் சடங்குடன் நிகழவில்லை என்பதை அக்கால இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. 

சங்கம் மருவிய காலத்தில் ஒழுக்கநெறி மருவியது. "பொய்யும் புரட்டும் பெருகியது' இல்லற வாழ்க்கையின் மாண்பு சீர்குலையும் நிலைக்குத் தள்ளப்பட்டது. தலைவன் தலைவி மணவாழ்க்கைக்கு அடையாளமாக தாலி கட்டி மணமுடிக்கும் வழக்கம் ஏற்பட்டது. 

களவு வாழ்க்கையில், "இவளை அறியேன்' எனப் பொய் கூறலும், வேறு பெண்ணை மணமுடித்தலும்,  இடையில் கைவிடல் போன்ற குற்றங்களும் அதிகரித்தன. இதன் விளைவாக ஊரார் முன்னிலையில் பெண்ணுக்கு  தாலி கட்டி மணமுடித்து வைக்கும் வழக்கம் தோன்றியதைத் தொல்காப்பியம் பதிவு செய்துள்ளது.

பெற்றோர் இசைவுடன் நடக்கும் திருமணத்துக்கு முன்பாக மகனைப் பெற்றோரும், மகளைப் பெற்றோரும் இந்தப் பெண்ணுக்கு, இந்த நாளில் இன்னாரின் மகனோடு மணம் நடக்கவிருக்கிறது என்பதை எழுதி, இருவீட்டுப் பெரியோர்களும் கையெழுத்திட்டு நிச்சயம் செய்யும் வழக்கம் பின்னாளில் தோன்றியதுதான். இதற்கு "ஓலை எடுத்தல்' என்று பெயர்.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான "ஐந்திணை எழுபது' என்னும் நூலில், மணமகன் கூறும் உறுதிமொழிகளை மணப்பெண் எழுதிப் பெறும் வழக்கம் அன்று இருந்ததை அறியமுடிகிறது. தலைவன் ஒருவன் தலைவியை நீங்கிப் பரத்தையை நாடிச் சென்றான். அப்போது தோழியிடம் தன் துயரத்தைத் தலைவி தெரிவிக்கிறாள்.

ஒள்ளிதழ்த் தாமரைப் போதுறழும் ஊரனை
உள்ளம்கொண்டு உள்ளானென்று யார்க்குரைக்கோ - ஒள்ளிழாய்
அச்சுப் பணிமொழி உண்டேனோ மேனாளோர்
பொய்ச்சூள் எனவறியா தேன்                                                                  (பா.44)  

"தலைவன் பரத்தைபால் சென்றுவிட்டான். ஆனால், அவன் காதலிக்கும் காலத்து பல உறுதிமொழிகளைத் தந்தான். அவை பிற்காலத்தில் பொய்யாகும் என்று அறியாதவளான நான், அவற்றை எழுதித்தரும்படிக் கேட்டு வைத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டேனே' என்று தலைவி தோழியிடம் புலம்புகிறாள். இதன் வழி ஒரு செய்தியை உறுதிப்படுத்துவதற்கு எழுதி வாங்கிக் கொள்ளும் வழக்கம் இருந்ததை அறிய முடிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com