யார் அந்தக் கண்ணகி?

இளங்கோவடிகள் இயற்றிய சிலம்பதிகாரத்தில் 29-ஆம் காதையான "வாழ்த்துக் காதை'யில் 10-ஆவது பாடலாகக் காணப்படும் பாடல் இது.
யார் அந்தக் கண்ணகி?
Updated on
2 min read

இளங்கோவடிகள் இயற்றிய சிலம்பதிகாரத்தில் 29-ஆம் காதையான "வாழ்த்துக் காதை'யில் 10-ஆவது பாடலாகக் காணப்படும் பாடல் இது.
 "தென்னவன் தீது இலன்; தேவர் கோன் - தன் கோயில்
 நல் விருந்து ஆயினான்; நான் அவன் - தன் மகள்'
 இப்பாட்டுக்குத் "தென்னவன் பாண்டியன் நெடுஞ்செழியன் ஒரு குற்றமும் அறியாதவன்; எனவே அவன் இந்திரனுடைய விருந்தினனாக விண்ணுலகில் இருக்கிறான்; நான் அவனுக்கு மகள் ஆவேன்' என்பது பொருள்.
 கோவலன் கள்வன் என்று குற்றம் சாற்றப்பட்டு, பாண்டியன் நெடுஞ்செழியனால் கொல்லப்பட்டான் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட கண்ணகி, பாண்டியன் அவைக்குச் சென்று, தன் கணவன் குற்றமற்றவன் என்பதை நிரூபித்ததுடன் மதுரை நகரையே எரித்தாள் என்பது காப்பிய உண்மை.
 உண்மை இவ்வாறு இருக்க, "யான் பாண்டியன் மகளே; அவன் மீது குற்றம் ஒன்றும் இல்லை; அவன் தேவருக்கு விருந்தினன் ஆயினன்' என்று கண்ணகி கூறியதற்கு என்ன பொருள்? இதற்கான விடையை - விளக்கத்தை இளங்கோவடிகள் கூறவில்லை. ஆனால், இதற்கான விடை சூடாமணிப் புலவர் என்பவரால் (செய்யுள் வடிவில்) இயற்றப்பட்ட "வைசிய புராணம்' என்னும் நூலில், சில மாற்றங்களோடு காணப்படுகிறது.
 இது தமிழ் மக்களால் தமிழர்தம் வழக்கப்படி நாடகமாக நடிக்கப்பட்டும், கதையாகப் படிக்கப்பட்டும் வழங்கிவந்த கதைகளுள் ஒன்று. இதைக் "கோவிலன் கதை' என்றும் கூறுவர். இப்புராணம் கூறும் கோவிலன்-கர்ணகி கதைப் பின்வருமாறு:
 "மதுரை மன்னன் பாண்டியனுக்கு நீண்ட நெடுங்காலமாகக் குழந்தைப்பேறு வாய்க்காததால், வருத்தமுற்ற பாண்டியன் இறை நம்பிக்கையற்றவனாக மாறியதுடன், மதுரையில் இருந்த காளி கோயிலுக்கு எவரும் விளக்கேற்றக்கூடாது, பூசனைகள் செய்யக்கூடாது என்று தடைவிதிக்கிறான்.
 காவிரிப்பூம்பட்டினத்தில் மாசாத்து வாணிபன் குலத்தில் மணியரசன் என்று ஒருவன் இருந்தான். அவனுக்கு மனைவியர் இருவர். முதல் மனைவிக்கு ஒரு குமாரன், இளையவளுக்கு இரு மகன்கள். இளையவளின் மகன் எண்ணெய் வணிகம் செய்து வந்தான். அவன் எண்ணெய் விற்றுவிட்டு மீளுகையில், வழியில் இருந்த காளி கோயிலில் அரசன் கட்டளையை அறியாது விளக்கேற்றிவிட்டான். உடனே சேவகர்கள் அவனை இழுத்துச்சென்று பாண்டியன் ஆணையின்படி அவன் தலையை அரிந்தனர். அப்போது அத்தலை காளி மடியிற் சென்று விழுந்து, முறையிட்டது.
 அப்போது காளி, "நீ உன் தம்பி மகனாகப் பிறப்பாய். நான் பாண்டியன் மகளாகப் பிறந்து அவனுக்கு நாசம் உண்டாக்குவேன்'' என்று அருளிச் செய்தாள்.
 காவிரிப்பூம்பட்டினத்திலுள்ள முத்துச்செட்டி எனும் வணிகன் ஒருவன் ஒரு நாள் காமதேனுவின் கன்று ஒன்றைக் கவணால் அடித்துக் கொன்றான். இதைக்கண்டு பதறிய காமதேனு, "பதினாறு வயதில் உன் மகன் இறந்து போவான்' எனச் சாபமிட்டது. சில ஆண்டுகள் கழித்து முத்துச்செட்டியின் மனைவி வர்ணமாலைக்கு, மதுரையில் கொலையுண்ட மணியரசனின் மகன் மகவாகப் பிறந்தான். அவனுக்குக் "கோவிலன்' எனப் பெயரிட்டனர். பாண்டிய மன்னனின் அரசி கோவிலங்கி வயிற்றில் காளி மகளாகக் காலில் சிலம்புடன் பிறந்தாள்.
 காலில் சிலம்புடன் பிறந்த அதிசயக் குழந்தையைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாண்டிய மன்னன், அரண்மனை சோதிடனை அழைத்து, ஜாதகம் கணிக்கச் சொன்னான். "இப்பெண்ணால் உன் குலத்திற்கே நாசம் உண்டாகும்' என்று சோதிடன் சொன்னதால், அக்குழந்தையை ஒரு பெட்டியில் வைத்து ஆற்றிலே விட்டுவிட்டான். கோவிலனுடைய மாமன் அப்பெண் குழந்தையை எடுத்து, "கர்ணகி' என்ற பெயரிட்டு வளர்த்துப் பின்னாளில் கோவிலனுக்கு மணம் புரிவித்தான்.
 காவிரிப்பூம்பட்டினத்திற்கு மேற்கிலுள்ள திருக்கடவூரில் வசந்தமாலை என்னும் கணிகைக்குலப் பெண்ணுக்கு வாணிகன் (கொலையுண்ட) மனைவி மகளாகப் பிறந்தாள். அவளுக்கு "மாதகி' என்று பெயரிட்டனர்.
 கோவிலன் - கர்ணகி திருமணத்தில் அக்கால வழக்கப்படி நாட்டியக் கச்சேரியில் நடனமாட மாதகி வந்தாள். அவள் நாட்டியமாடியபோது, ஒரு நிபந்தனை விதித்தாள். அதாவது, தன் கையிலிருந்த பொன்னுருவி மாலையைச் கழற்றி வீசி எறியும்போது, அந்த மாலை யார் கழுத்தில் விழுகிறதோ, அவர் தனக்கே சொந்தமாவார் என்று சொல்லி அவள் மாலையை வீசினாள். அது கோவிலன் கழுத்தில் விழுந்தது. கோவிலன் அப்பொழுதே மாதகியுடன் திருக்கடவூர் சென்றுவிட்டான்' என்று இவ்வாறு கதையைக் கூறிச்செல்கிறது இப்புராணம். ஆனால், இவ்வாறு கூறப்படும் கதையில் இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரக் கதைக்குப் புறம்பான அதிர்ச்சியளிக்கும் பல தகவல்களும், நம்பமுடியாத பல நிகழ்வுகளும் உள்ளன.
 இப்புராண கதையைப் பதிவு செய்யும் "காப்பிய இலக்கியங்கள்' என்ற நூலின் (பக்.221) உள்ளவாறு: ""சிலப்பதிகாரக் கதை பிற்காலத்தில் பலபடியாக வேறுபட்டு வழங்குவதாயிற்று. கோவலன் - கோவிலனாகவும், கண்ணகி - கர்ணகியாகவும், மாதவி - மாதகியாகவும், மாசாத்துவான் - மாச்சோட்டானாகவும் ஆயினர். கதையும் ஆங்காங்கே பல மாறுபாடுகளை அடைந்தது. கண்ணகி துர்க்கையின் அவதாரமென்று கதைக்கத் தொடங்கினர். "வைசிய புராணம்' என்னும் புத்தகத்தில் 32-ஆம் சருக்கமாகிய "பஞ்ச காவியத் தலைவரில் மாசாத்துவாணிபன் சிலப்பதிகாரம் பெற்ற சருக்கம்' என்பதிற் கூறப்பட்டுள்ளது. துர்க்கையைக் கோவிலனுக்கு மனைவியாக்குதல் விருப்பத்தக்க செய்தியன்று.
 இவற்றை ஆராயும்போது "வைசிய புராணம்' இயற்றியவர் சிலப்பதிகாரத்தைப் படித்தவரல்லர் என்றும், கர்ண பரம்பரையாக வழங்கிய செய்திகளையே பாடி வைத்தார் என்றும் கொள்ள நேர்கிறது'' என்று இந்நூலாசிரியர் பதிவு செய்துள்ளார்.
 ஆக, மேற்படி "வைசிய புராணம்' வரைந்துகாட்டும் கர்ணகி கதையின் மூலமே அவள் மதுரையின் காளி (துர்கை) என்பதும், அவளே பாண்டிய மன்னனுக்கு மகளாகப் பிறந்து அவனையும், மதுரையையும் பழிவாங்கியதும் புலனாகிறது. இந்
 நிகழ்ச்சியையே இளங்கோவடிகளின்
 "தென்னவன் தீது இலன்; தேவர் கோன் - தன் கோயில்
 நல் விருந்து ஆயினான்; நான் அவன் - தன் மகள்'
 என்கின்ற வரிகள் எடுத்துக்காட்டுகின்றன .
 -கரைகண்டம் கி.நெடுஞ்செழியன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com