

தஞ்சையில் தன் வீட்டையே நூலகமாக மாற்றி தமிழுக்கு அருந்தொண்டாற்றி வருகின்றார் "சேக்கிழார் அடிப்பொடி' தி.ந. இராமச்சந்திரன். அவருடைய இல்லத்தில் ஒவ்வொரு நாள் மாலையிலும் இக்கட்டுரை ஆசிரியரும், உ.வே.சா.வின் வரலாறு பற்றிய ஆய்வில் தோய்ந்தவரான இரா. சுப்பராயலுவும் கலந்துரையாடல் செய்வது வழக்கம். ஒரு நாள் அப்பெரியவர் முன்பு உரையாடிக் கொண்டிருக்கும்போது, ""தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையர் பிறந்திராவிட்டால் சங்கத் தமிழ் நூல்களான பத்துப்பாட்டில் ஆறு நூல்கள் தமிழுலகுக்குக் கிடைக்காமலேயே போயிருக்கும்'' என்றார் அவர்.
எங்களுக்கு அவர் கூற்று வியப்பாக இருந்தது. நாங்கள் சொன்னோம், "அவர் அரும்பாடுபட்டு தமிழ்நாட்டில் பல இடங்களில் இருந்த சுவடிகளைச் சேகரித்துத்தானே பதிப்பித்தார். அவர் பிறக்கவில்லை என்றாலும் சுவடிகள் இருக்கத்தானே செய்யும்' என்றோம். உடனே அவர், சேக்கிழாரடிப்பொடி இல்லத்து நூலகத்திலிருந்த உ.வே.சா. பதிப்பித்த "பத்துப்பாட்டு மூலமும் உரையும்' என்ற நூலை எடுத்து ஐயரவர்கள் பதிவு செய்துள்ள ஒரு செய்தியினைப் படித்துக் காட்டினார். அதனைக் கேட்டு வியந்தோம்!
எத்தனையோ முறை "பத்துப்பாட்டு மூலமும் உரையும்' எனும் அந்நூலை ஆய்வுப்பணிகளுக்காகப் படித்துக் குறிப்புகளை எல்லாம் எடுத்துள்ளோம். நாம் அவர் கூறும் பதிப்பு வரலாற்றை முழுமையாகப் படிக்கவில்லையே என பலமுறை வருந்தினோம். சுப்பராயலுவுக்கு நன்றி சொன்னோம்.
தமிழுக்குச் செம்மொழி எனும் உயரிய தகுதிப்பாட்டினை முதற்கண் அளிப்பது பத்துப்பாட்டு எனும் பத்து நூல்களும், எட்டுத்தொகை எனும் எட்டு நூல்களும், தொல்காப்பியமும், திருக்குறளும்தாம். பத்துப்பாட்டு எனும் சங்கத் தமிழ் நூல் வரிசையில், 1. திருமுருகாற்றுப்படை, 2. பொருநராற்றுப்படை, 3. சிறுபாணாற்றுப்படை, 4. பெரும்பாணாற்றுப்படை, 5. முல்லைப்பாட்டு, 6. மதுரைக்காஞ்சி, 7. நெடுநல்வாடை, 8. குறிஞ்சிப்பாட்டு, 9. பட்டினப்பாலை, 10. மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்களையும் ஒரு தொகுப்பாக்கியுள்ளனர்.
அதற்கு நச்சினார்க்கினியர் என்பவர் உரை செய்திருக்கிறார். அந்த உரைநூல் தமிழகத்தில் அரிதாக ஓரிருவரிடம் மட்டுமே இருந்திருக்கிறது. பத்துப்பாட்டின் பத்து நூல்களில் முதல் நூலாகக் குறிக்கப்பெறும் திருமுருகாற்றுப்படை எனும் நூலின் மூலப் பாடல்கள் அடங்கிய சுவடி பலரிடம் இருந்ததை ஐயரவர் கண்டார். ஆனால், நச்சினார்க்கினியர் உரை சிறப்புப் பாயிரத்தில் குறிக்கப்பெற்றுள்ள, "சான்றோருரைத்த தண்டமிழ்த் தெரியல் ஒரு பதுபாட்டும்' என்ற குறிப்பின் அடிப்படையில், முருகாற்றுப்படை நீங்கலாக மற்ற ஒன்பது நூல்களின் மூலப் பாடல்களின் சுவடிகள் கிடைக்குமா? என ஐயரவர்கள் தேட முற்பட்டார். கிடைத்த நச்சினார்க்கினியர் உரையில் பாடல்களுக்கு உரிய உரை மட்டுமே காணப்பெற்றன. அவை மூலப் பாடல்களின் அடிகளையும், சொற்கோவைகளையும் முன்னுக்கும் பின்னுக்குமாக மாற்றி மாற்றி உரைகூறப்பெற்றவை என்பதால், மூலப் பாடல்களை அறிய இயலாத நிலை இருந்தது.
திருமுருகாற்றுப்படை முருகப்பெருமான் குறித்த பாராயண நூல் என்பதால் பலரிடம் மூலச்சுவடிகள் இருந்தன. தமிழ்நாடு முழுவதும் அலைந்து அலைந்து மற்ற ஒன்பது நூல்களையும் தேட முற்பட்டார். 1883-ஆம் ஆண்டு முதல் இப்பணி அவரால் மேற்கொள்ளப்பெற்றது. எங்கும் அவருக்கு ஒன்பது நூல்களின் மூலப்பிரதி கிடைக்கவில்லை. ஐயரவர்களின் ஆசான் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் இருந்த ஏட்டுச்சுவடிகளுள் ஒன்றில் "பொருநராற்றுப்படை' என்ற பெயர் இருந்ததை அறிந்தார்.
அதனை எடுத்துப் படிக்கும்போது, சீவகசிந்தாமணி உரையில் அப்பொருநராற்றுப்படையின் சில பகுதிகளும், மதுரைக்காஞ்சி வரை உள்ள சில பகுதிகளும் மேற்கோள்களாகக் காட்டப் பெற்றிருப்பதைக் கண்டார். அவற்றை எல்லாம் குறித்துக்கொண்ட ஐயரவர்கள், வேலூர் குமாரசாமி ஐயர் என்பவரிடம் இருந்து ஓர் ஏட்டுச் சுவடியைப் பெற்றார். அதில் பொருநராற்றுப்படை முதல் மலைபடுகடாம் வரை உள்ள நூல்களின் நச்சினார்க்கினியரின் உரை மட்டுமே இருந்தன. மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் சுவடியிலும் மூலப்பாடல்கள் கிடைக்கவில்லை.
எனவே, கிடைத்த இரண்டு சுவடிகளிலிருந்தும் திரட்டிய மூலப் பாடல்களின் சொற்களை இயன்றவரை எடுத்துத் தொகுத்து, பாடல்களை வரையரை செய்து, மூலப்பாடல்களை மீட்டுக்கொண்டு வந்தார். இதுபற்றி ஐயரவர்கள் கூறும்போது, ""முற்கூறிய இரண்டு பிரதிகளிலும் உரைக்கு முன்னம் சிறிது சிறிது ஒரு மொழியும் தொடர்மொழியுமாக அமைந்திருந்த மூல பதங்களையே இணைத்து எனது சிற்றறிவிற்கு எட்டிய மட்டும் அடி வரையறை செய்து அவ்வொன்பது பாட்டையும் எழுதிக் கொண்டேன்; உரையாசிரியர்களால் இவற்றிலிருந்து பழைய இலக்கிய - இலக்கண உரைகளில் மேற்கோளாக எழுதப்பட்டவற்றுள் கிடைத்த சில பகுதிகள் இவற்றின் மூலங்களை இணைக்குங் காலத்துப் பேருதவியாக இருந்தன. இவ்வாறு உரையிலிருந்து மூலங்களைக் கண்டுபிடித்துத் தொகுத்தது அளவிறந்த துன்பத்தை உண்டாக்கிவிட்டது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு ஐயரவர்கள் ஒன்பது நூல்களையும் உரையிலிருந்து மீட்டுருவாக்கம் செய்த பின்பு அவருக்கு ஆறுமுக மங்கலத்திலிருந்து ஓர் ஏட்டுச்சுவடி பிரதி மூலமும், பொருநராற்றுப்படை மூலமும், சென்னை கீழ்த்திசை சுவடிகள் நூலகத்திலிருந்து பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு மூலமும் கிடைத்தன. அவை ஐயரவர்கள் மீட்டுருவாக்கம் செய்த மூலத்தையே ஒத்து இருந்தன. பின்னர் குறிஞ்சிப்பாட்டு ஏட்டுச் சுவடியில் கிடைக்காது விட்டுப்போன சில அடிகளை அரும்பாடுபட்டு தருமபுரஆதீன மடத்தில் கிடைத்த ஒற்றையேட்டுச் சுவடியிலிருந்து கண்டுபிடித்து மூலத்தை நிறைவு செய்தார்.
திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு ஆகிய நான்கு மூல பாடல்கள் உள்ள சுவடிகளைத் தவிர, இன்றுவரை மற்ற ஆறு நூல்களின் மூல ஓலைச்சுவடிகள் கிடைக்கவில்லை. மதுரையாசிரியர் பரத்துவாசி நச்சினார்க்கினியர் உரை மட்டும் கிடைக்காது போயிருக்குமானால், மேற்குறித்த ஆறு நூல்களையும் தமிழகம் இழந்திருக்கும். உ.வே.சா. பிறந்திருக்காவிட்டால் பத்துப்பாட்டு எனும் அருந்தமிழை தமிழகம் இழந்திருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.