மயங்கா மரபின் எழுத்துமுறை!

ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் நம் தமிழ்மொழி எழுதப்பட்ட எழுத்து முறைக்குப் "பிராமி' என்று பெயர். இதைத் தமிழ் பிராமி, தமிழி என்றும் சொல்வர்
மயங்கா மரபின் எழுத்துமுறை!
Published on
Updated on
2 min read

ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் நம் தமிழ்மொழி எழுதப்பட்ட எழுத்து முறைக்குப் "பிராமி' என்று பெயர். இதைத் தமிழ் பிராமி, தமிழி என்றும் சொல்வர். இந்தப் பிராமி எழுத்து முறையில் மெய்யெழுத்துகளுக்குப் புள்ளியிடும் வழக்கம் இல்லை. மேலும் எகர, ஒகர உயிர்/உயிர்மெய் எழுத்துகளுக்கு வேறுபாடு கிடையாது. "கொடி' என்பதை இடத்துக்கேற்றவாறு, "கொடி' என்றோ அல்லது "கோடி' என்றோ படித்துக்கொள்ள வேண்டும். தமிழ் தெரிந்தவர்களுக்கு இது குழப்பமாக இருந்ததில்லை போலும்.
இன்றைக்கும் Raman என்பதை நாம் ராமன் என்று படிக்கிறோம், ஆனால், இந்தப் பெயரைக் கேள்வியுறாத வேறுநாட்டார், இதனை ரமன், ரமான், ராமான் என்று படித்துக் குழப்பமடைவதுண்டு. கடல, மககள, சினம, தநதை, வயல ஆகியவற்றை நாம் கடல், மக்கள், சினம், தந்தை, வயல் என்று சரியாகப் படித்துவிடுவோம். "அந்தத் தெருவில் தெர் சென்றது' என்பதை "அந்தத் தெருவில் தேர் சென்றது' என்று குழப்பமில்லாமல் படித்துவிடலாம். "கொழுநன் மீது கொபம் கொண்டாள்' என்பதனை, "கொழுநன் மீது கோபம் கொண்டாள்' என்றும் படித்துவிடுவதில் சிரமம் இல்லை. எனவேதான், பண்டைய தமிழ் எழுத்துகளில் புள்ளிகளோ, எ/ஏ, ஒ/ஓ வேறுபாடோ இல்லை.
ஆனால், தமிழ் தெரியாதவர்கள் இதனைப் படிக்கும்போது மெத்தத் தடுமாறுவர் என்பது உண்மை. ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் தமிழ்நாட்டுக்கு வந்த சமண, புத்தத் துறவிகளுக்கு இது பேரிடராக இருந்திருக்கும். எனவே, தமிழில் எழுதப்பட்டதைப் படிக்கும்போது அவர்கள் பெரிதும் குழம்பியிருந்திருப்பர். இந்தக் குழப்பத்தைத் தீர்த்துவைக்க முனைந்தவர் தொல்காப்பியர். அவர்தான்,
மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்
எகர ஒகரத்து இயற்கையும் அற்றே (எழுத்.நூன்.15,16)
என்று தொல்காப்பியத்தில் எழுதி வைத்துள்ளார். இதற்கு, மெய்யெழுத்துகள், மேலே புள்ளிபெறும், எகர/ஒகர உயிர்/உயிர்மெய் எழுத்துகளும் அவ்வாறே புள்ளிபெறும் என்பது பொருள். எனவே, "செடி', "கொன்' என்பவற்றை நெடிலாகச் "சேடி', "கோன்' என்றும், "செ', "கொ' ஆகிய எழுத்துகளுக்கு மேல் புள்ளி வைத்தால், அவற்றைக் குறிலாகச் "செடி', "கொன்' என்றும் படிக்க வேண்டும் என்பது தொல்காப்பிய(ர்) விதி. ஆனால், இந்தப் புள்ளிமுறை தொல்காப்பியர் காலத்துக்கும் முன்னர் இருந்து, அவற்றைத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறாரா அல்லது இந்த முறை தொல்காப்பியராலேயே ஏற்படுத்தப்பட்டதா என்பது கேள்வி.
தொல்காப்பியர் தனது இலக்கண நூலில், தமக்கு முன்னர் இருந்த பல மரபுகளைக் குறிப்பிடுகிறார். அவ்வாறு குறிப்பிடும்போது, அவர் அந்த மரபைக் கூறி, "என்ப', "என்மனார் புலவர்', "மொழிப' என்று குறிப்பிடுவார். காட்டாக,
பன்னீர் எழுத்தும் உயிர் என மொழிப (எழுத். நூன்:8/2)
வல்லெழுத்து என்ப க, ச, ட, த, ப (எழுத். நூன்:19/1)
கூட்டி எழூஉதல் என்மனார் புலவர் (எழுத். நூன்:6/2)
என்ற நூற்பாக்களைப் பார்க்கலாம். இவ்வாறாக, "என்ப' என்பது 145 இடங்களிலும், "என்மனார்' என்பது 75 இடங்களிலும், "மொழிப' என்பது 87 இடங்களிலும் தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளன. ஆனால், புள்ளிகளைப் பற்றிக் கூறுமிடத்து,
மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்
எகர ஒகரத்து இயற்கையும் அற்றே
என்று இந்நூற்பாக்களைத் தன்கூற்றாகவே கூறியிருப்பதை உற்று நோக்க வேண்டும். புள்ளிமுறை தொல்காப்பியருக்கு முன்னர் இருந்திருந்தால் அவர் இந்நூற்பாக்களை,
மெய்யின் இயற்கை புள்ளிபெறும் என்ப
எகர ஒகரமும் அற்றென மொழிப
என்பது போன்று அமைத்திருந்திருப்பார். இதற்குச் சான்றாக இன்னொன்றையும் காட்டலாம். தொல்காப்பியத்துக்குச் சிறப்புப் பாயிரம் என்ற முன்னுரையை அளித்திருப்பவர் பனம்பாரனார் என்ற புலவர். அவர் தொல்காப்பியரைப் பற்றிக் குறிப்பிடும்போது,
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி,
தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றி
என்று குறிப்பிடுகிறார். "மயங்கா மரபின் எழுத்துமுறை' என்பதற்கு, மெய்ப்புள்ளி, எகர/ஏகார, ஒகர/ஓகார வேறுபாடுகள் இன்றி, மயக்கம் (ambiguity) தருகிற எழுத்து முறையில், புள்ளியை அறிமுகப்படுத்தி, இந்த மயக்கங்களைத் தீர்த்து வைத்தவர் என்று பொருள்கொள்வது சிறப்பாகும். தொல்காப்பியருக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகட்குப் பின்னர் தோன்றிய உரையாசிரியர்களின் காலத்தில் இந்த எழுத்துமுறையின் வரலாறு வெளிப்படாத காரணத்தால், இத்தொடருக்கு வேறுவிதமான பொருள் கூறிச் சென்றனர் எனலாம். 
- முனைவர் ப.பாண்டியராஜா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com