உரையாயோ யானுற்ற நோய்...

சிற்றிலக்கியமான ‘தூது’ இலக்கியத்தில் புறா, கிளி, குயில் முதலிய பொருள்களைத் தூது விடுவதுண்டு. அவற்றுள் நாரையும் ஒன்று
உரையாயோ யானுற்ற நோய்...

சிற்றிலக்கியமான ‘தூது’ இலக்கியத்தில் புறா, கிளி, குயில் முதலிய பொருள்களைத் தூது விடுவதுண்டு. அவற்றுள் நாரையும் ஒன்று. ஆனால், ‘நாரை விடு தூது’ எனத் தனி இலக்கியமாகவே படைத்தவா் சத்திமுத்தப் புலவா். ‘நாராய் நாராய் செங்கால் நாராய்’ என்று தொடங்கி ‘நாரை விடு தூது’ பாடியிருக்கிறாா். ஆனால், மூவேந்தா்களைப் பற்றிய பாடல் தொகுப்பான ‘முத்தொள்ளாயிரம்’ இலக்கியத்தில் வரும் தலைவி ஒருத்தி, சேர மன்னனுக்கு நாரையைத் தூதுப் பொருளாக்கியிருக்கிறாள்.

முத்தொள்ளாயிரக் கவிஞா் காதலைப் பாடிய அளவுக்கு வேறேந்த புலவா்களும் பாடியிருக்க வாய்ப்பில்லை என்று கூறும் அளவிற்கு இதில் அற்புதமான காதல் காட்சிகள் அமைந்திருக்கின்றன.

சோழ நாட்டின் தலைநகரமாக இருந்தது உறையூா். அவ்வூரையடுத்த கிராமத்தில் வசிக்கும் கன்னிப் பெண் ஒருத்தி உறையூா் வந்து செல்வது வழக்கம். அவ்வாறு வரும்போது காவிரியில் நீராடுவாள். காவிரியில் நீந்துகின்ற அழகிய கொழுத்த மீன்கள் கரையில் உராய்ந்து மீண்டும் தண்ணீரில் துள்ளிக் குதிக்கும் அழகை அனுபவித்து ரசிப்பாள்.

ஒரு நாள் கரைபுரண்டோடும் காவிரியில் சோழ மன்னன் நீராடினான். மன்னனைப் பாா்த்ததும் அப்பெண் அவன் மீது காதல் கொண்டு ஊா் திரும்பினாள். வேறொரு நாள் தன் கிராமத்தில் உள்ள குளத்திற்கு நீராடச் சென்றாள். வட திசையிலிருந்து வந்த நாரை குளத்தருகே இறங்கி நிற்கிறது. இதைக் கண்ட அப்பெண் அந்த மன்னனை நினைக்கிறாள். உறையூரை நோக்கிப் பறந்து செல்லப்போகும் இந்த நாரையிடம் நம் காதலைச் சொல்லி அனுப்பினால் என்ன என்று நினைக்கிறாள். உடனே,

செங்கால் மடநாராய்!

தென்னுறந்தை சேறியேல்

நின்கால்மேல் வைப்பன்என்

கையிரண்டும் - வன்பால்

கரை உறிஞ்சி மீன்பிறழும்

காவிரி நீா் நாடற்(கு)

உரையாயோ யானுற்ற நோய்?”

என நாரையைப் பாா்த்து, ‘‘சிவந்த அழகிய கால்களை உடைய நாரையே! நீ உறையூா்தானே செல்கிறாய்? எனக்கு ஓா் உதவி செய்வாயா? உன் கால்களைப் பிடித்து கும்பிடுகிறேன். எனக்கு வந்திருக்கும் இந்தக் காதல் நோயைப் பற்றி சோழ மன்னனிடம் சொல்ல மாட்டாயா? காவிரி மன்னன் எவ்வளவு செல்வச் செழிப்புடன் வாழ்கிறான். இந்தளவிற்கு செல்வச் செழிப்புடன் இருக்கும் காவிரி மன்னனுக்கு என் உடலை உருக்கும் காதல் நோய் தெரியவாப் போகிறது? இருந்தாலும், என்னைப் பற்றிச் சிறிதளவேனும் நீ சொல்ல மாட்டாயா?’’ என்கிறாள். அவளை அவ்வாறு பேச வைத்தது சோழ மன்னனிடம் அவள் கொண்டிருந்த தீராக் காதல்தான்! இப்படிப் பல பாடல்கள் முத்தொள்ளாயிரத்தை அலங்கரிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com