தேசப்பிதாவும்  தமிழ்த் தாத்தாவும்! 

உலகம் போற்றும் உத்தமர், பாரதத் தேசத்தின் தனிப்பெரும் தலைவர் மகாத்மா காந்தியடிகள் தமிழ்மொழி,  பண்பாடு, இலக்கியம்  ஆகியவற்றின் மீது பேரன்பு கொண்டவர். அக்காலத்தில் இந்திய விடுதலைக்காகத்  தமிழகத்தில் நடைப
தேசப்பிதாவும்  தமிழ்த் தாத்தாவும்! 
Published on
Updated on
1 min read

உலகம் போற்றும் உத்தமர், பாரதத் தேசத்தின் தனிப்பெரும் தலைவர் மகாத்மா காந்தியடிகள் தமிழ்மொழி,  பண்பாடு, இலக்கியம்  ஆகியவற்றின் மீது பேரன்பு கொண்டவர். அக்காலத்தில் இந்திய விடுதலைக்காகத்  தமிழகத்தில் நடைபெற்ற பல அறவழிப் போராட்டங்களிலும், பொதுக் கூட்டங்களிலும் தலைமையேற்று உரையாற்றியுள்ளார்.

1937-ஆம் ஆண்டில் "பாரதீய சாகித்திய பரிஷத்தின் மாநாடு'  சென்னையில் நடைபெற்றுள்ளது. இம்மாநாட்டிற்குக் காந்தியடிகள் தலைமை வகித்துள்ளார். இக்கூட்டத்தில் "தமிழ்த் தாத்தா'  உ.வே.சாமிநாதையர் வரவேற்புரை நிகழ்த்தியுள்ளார். 

இக்கூட்டத்திற்குச் சென்ற உ.வே.சாமிநாதையர், வரவேற்புரையில்  தமிழின் பெருமை,  தமிழரின் தனிச் சிறப்பு  ஆகியவை சங்க நூல்களில் எவ்வாறு கூறப்பட்டுள்ளன என்பதை விரிவாக எடுத்துரைத்தும், காந்தியடிகளின் பெருமைகளைக் கூறியும் வரவேற்புரை நிகழ்த்தியுள்ளார். இவ்வுரையைத் தமிழிலிருந்து ஹிந்தியில் கா.ஸ்ரீ.ஸ்ரீ. என்பவர் மொழிபெயர்த்தார். 

உ.வே.சாமிநாதையரின் வரவேற்புரையைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த காந்தியடிகள், ""தமிழின் வடிவமாகவே இருக்கும் இவர்கள் திருவடியில் இருந்து தமிழ் பயில வேண்டுமென்ற ஆசை எனக்கு உண்டாகிறது. பல வேலைகளை உடைய எனக்கு அந்தச் சந்தர்ப்பம் எப்போது கிடைக்கப் போகிறது'' என்று கூறியுள்ளார். இச்செய்தியை  உ.வே.சா. "என் சரித்திரத்தின்' தொடர்ச்சியாக கி.வா.ஜகந்நாதன் எழுதிய "என் ஆசிரியப்பிரான்' நூலில் (27.3.1937) பதிவு செய்துள்ளார்.

உ.வே.சா.,  காந்தியடிகளைச் சந்தித்துப் பேசியதை  தாம் எழுதிய 27.3.1937-ஆம் ஆண்டு நாட்குறிப்பில் ""பாரதீய ஸாஹித்ய பரிஷத் காலை 7.45 முதல் நடைபெற்றது. மகாத்மா காந்தி தலைமை வகித்தார். வரவேற்புப் பிரசங்கம் படிக்கப்பட்டது. காந்தியைக் கண்டு பேசினேன். குறுந்தொகை அகராதி எழுதப்பட்டது''என்ற குறிப்பு காணப்படுகிறது. இதற்கு முன் தேதியிட்ட நாட்குறிப்பில் பாரதீய  ஸாஹித்ய பரிஷத் வரவேற்புப் பிரசங்கம் எழுதி அச்சுக்குக் கொடுக்கப்பட்டது என்ற குறிப்பும் காணப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com