உயர்திணை ஊமன்!
By DIN | Published On : 09th June 2019 01:27 AM | Last Updated : 09th June 2019 01:27 AM | அ+அ அ- |

"கூவன் மைந்தன்' என்னும் பாடல் அடியால் பெயர்பெற்ற புலவரின் பாடல் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது. துஞ்சா நோயில் துயரப்படும் தலைவி கூறும் உவமை சிறப்புடைத்து.
கவலை யாத்த அவல நீளிடைச்
சென்றோர் கொடுமை ஒற்றித் துஞ்சா
நோயினு நோயா கின்றே கூவற்
குராலான் படுதுயர் இராவிற் கண்ட
உயர்திணை ஊமன் போலத்
துயர்பொறுக் கல்லேன் தோழி நோய்க்கே!
(குறுந். 224)
"கிணற்றில் வீழ்ந்த குரால்பசு படும் துன்பத்தை இரவு நேரத்தில் கண்ட வாய் பேசமுடியாத ஊமை அத்துயரத்தை எப்படி வெளியிட முடியாமல் துன்புறுவானோ அப்படி, பாலைநில வழியே பிரிந்து சென்ற தலைவன் பிரிவைத் தாங்காது துயரைப் பொறுக்கும் ஆற்றல் இல்லேனாயினேன்' என்கிறாள் தலைவி.
இதற்கு உரை கூறும் உ.வே.சா., "குராலான் - குரால் நிறம் உள்ள பசு; ஏந்திமிற் குராலும் (கலி.105:14) என்பதன் உரையைப் பார்க்க; இந்நிறத்தைக் கபில நிறம் என்பர். அதனை விளக்க, "உயர்திணை ஊமன்' என்றாள்; இது வெளிப்படை என்னும் இலக்கணத்தின் பாற்படும்' என்று விளக்கிச் செல்கின்றார்.
ஊமன் என்பது கோட்டானையும் குறிக்கும் என்பது பிற்கால வழக்கு. "கையில் ஊமன் கண்ணில் காக்கும்' (குறுந்.58) என்று குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது. "கண்ணில் ஊமன் கடற்பட்டாங்கு' (புறம்.238) என்று புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது.
சிலப்பதிகாரத்தில் "கூனும் குறளும் ஊனமும் செவிடும்' (சிலப். 5;118) என்றும் மணிமேகலையிலும் சிலம்பிலுள்ள அதே அடி (மணி. 12; 97) இடம்பெற்றுள்ளது. மேலும், மணிமேகலையில் குரால் எனும் சொல் இடம்பெற்றுள்ளது.
"புலவு ஊண் பொருந்திய குராலின் குரலும்' (மணி. 6;76) என்று சக்கரவாளக் கோட்டத்தில் உள்ள பிணந்தின்னிப் பறவைகள் பற்றிய விவரிப்பில் இடம்பெற்றுள்ளது. மேற்குறித்த புரிதலோடு "கூவல் குராலான் படுதுயர் இரவிற் கண்ட
உயர்திணை ஊமன் போல' என்பதை பொருள்கொள்ள வேண்டியுள்ளது. சேறும் சகதியும் நீரும் கலந்த பள்ளத்தில் மாட்டிக்கொண்டு தவிக்கும் பிணந்தின்னிப் பறவையான குராலின் தவிப்பைக் கண்ட மனிதாபிமானம் உள்ள ஊமையானவன் இரவில் கண்டு அதனை காப்பாற்ற முடியாமல் தவிப்பதைப் போல, தலைவன் பிரிவால் உறக்கமில்லாமல் நோய்வாய்ப்பட்டு துன்புறுகிறேன் என்று கூட்டுக.
இங்கு உயர்திணை என்பது பண்பால் உயர்ந்தவன் என்று பொருள். அவன் பகலில் கண்டிருந்தால் ஊரில் உள்ளோர் யாரையேனும் சைகையால் காட்டியாவது காப்பாற்றியிருப்பான். அதனால், எல்லோரும் உறங்கும் இரவில் கண்டான் என்கிறார். அப்பறவையின் துன்பத்தைக்கண்ட அவன் வீட்டிற்குச்சென்று உறங்கினாலும், அவனது மனம் உறங்காது அவனை பிதற்றச் செய்யும். "காப்பாற்ற முடியவில்லையே' எனும் ஆற்றாமையை எழச் செய்யும். இப்படி சங்கப்பாடல் பலவற்றிற்குப் புதிய சிந்தனைகள் தேவைப்படுகின்றன.
-கா. ஐயப்பன்