பெண்கள் விளையாடும் "மூவர் அம்மானை'!

பெண்கள் மூவர் வீட்டு முற்றத்தில் அமர்ந்துகொண்டு பொழுதுபோக்காக "அம்மானை' எனும் விளையாட்டினை விளையாடுகின்றனர். விறுவிறுப்பான விளையாட்டு! மரத்தால் செய்யப்பட்ட வழுவழுப்பான உருண்டைகளை
பெண்கள் விளையாடும் "மூவர் அம்மானை'!

பெண்கள் மூவர் வீட்டு முற்றத்தில் அமர்ந்துகொண்டு பொழுதுபோக்காக "அம்மானை' எனும் விளையாட்டினை விளையாடுகின்றனர். விறுவிறுப்பான விளையாட்டு! மரத்தால் செய்யப்பட்ட வழுவழுப்பான உருண்டைகளை அம்மானைக் காய்களாக வைத்துக்கொண்டு  மேலும் கீழும் வீசியும், பிடித்தும் ஆட்டம் விறுவிறுப்பாக நடக்கின்றது. ஆட்டத்தின் வேகத்திற்கேற்ப பொருத்தமான புராணக் கதைகளை விடுகதைகளாக்கி, யார் சாமர்த்தியமாகக் கேள்வி கேட்பது, யார் அதற்கு சமயோசிதமாக விடை கூறுவது, எவ்வாறு விடையில் இரு பொருள் பொதிந்து கூறுவது என்பதிலும் இவர்களுக்குள் போட்டி!     இவ்வாறு வாய்மொழி இலக்கியமாக இருந்தது பிற்காலத்தில் பதிவும் செய்யப்பட்டு (16,17-ஆம் நூற்றாண்டுகளில்) இலக்கிய வடிவம் பெற்றது. வஞ்சப்புகழ்ச்சி, நையாண்டி வகையிலமைந்த நகைச்சுவை, இருபொருள் பொதிந்த தூற்றுமறைத்துதிகள் ஆகியன இவற்றின் சுவையான அம்சமாகும். இந்த விளையாட்டை ஒருவர், இருவர், மூவர், ஐவர் எனப் பலவகையாக விளையாடப்பட்டுள்ளன. அம்மானைப் பாடல்களை சிலப்பதிகாரத்திலேயே காணலாம். அவை சோழ மன்னர்களின் புகழைப் பாடின. விளையாட்டை நோக்கலாமா?

முதலில் ஒருத்தி, "உமை எனும் மங்கையை ஒருபாகமாகக் கொண்டவரும், விடையில் ஏறுபவருமான வழுவூர்ப் பெருமான் திங்களாகிய சந்திரனையும், கங்கை எனும் நதியையும் தன் தலையில் தினமும் சுமந்தவண்ணம் இருக்கிறார்' என ஒரு கருத்தைக் கூறி, தன் அம்மானையை மேலேவீசிப் பிடிக்கிறாள். 

மங்கையுமை பாகர் வழுவூர் விடைநாதர்
திங்களுடன் கங்கை தினம் சுமந்தாரம்மானே!

இதற்கு மறுமொழியாக அடுத்தவள், "குளிர்ச்சி பொருந்திய திங்களையும் கங்கையையும் தினந்தினம் சுமந்தாராமாகின், அவருடைய உடல் முழுமையும் குளிர்ச்சி ஆகாதோடி அம்மானே!' என லயம் தவறாது பாடியவண்ணம் அம்மானையையும் வீசிப் பிடித்தபடியே ஏளனமாகக் கேட்கிறாள்.

திங்களுடன் கங்கை தினம் சுமந்தாராமாகில்
அங்கமெல்லாம் குளிர்ச்சி ஆகாதோ அம்மானே!

மறுமொழி பகர மூன்றாமவளின் முறை இது! அவளும் சமயோசிதமாக, "அதனாலென்ன? குளிர்ச்சியாகும் என அறிந்ததனாலன்றோ யானையை உரித்து அதன் தோலை உடலில் அவர் போர்த்திக் கொண்டார் அம்மானே!' என எல்லாவற்றுக்கும் பொதுவான விடையையும் கூறி, தன் அம்மானையை உயரவீசி, வெற்றி - தோல்வியின்றி ஆட்டத்தை முடிக்கிறாள். "ஆமென்றே யானை உரித்தணிந்தனர் காணம்மானே!' அழகானதொரு புராணக்கதை இதில் அடங்கிவிட்டது! வழுவூர் அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்று. அங்குதான் இறைவனார் கஜாசுரனைக் கொன்று, அதன் தோலையுரித்துப் போர்த்திக் கொண்டார். அதுதான் இவ்வம்மானைப் பாடலின் உட்பொருள்.

இந்த அம்மானைப் பாடல் "மூவர் அம்மானை' எனப்படும் இலக்கியத்தில் காண்பது. பல சந்தர்ப்பங்களில் அம்மானை எனும் விளையாட்டினை விளையாடிய பெண்களால் புனைந்து பாடப்பட்டு வந்த பாடல்களுள் ஒன்று எனவும் கருதலாம். அல்லது பெண்கள் அம்மானை ஆடுவதாகக் கருதியோ, அம்மானை ஆடுவதற்காகவோ புலவர்களால் புனையப்பட்டனவாகவும் இருக்கலாம்.

இது "மூவர் அம்மானை' எனும் பெயரில் தொகுக்கப்பட்டு, 1861-ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட ஒரு நூலில் காணப்படுகின்றது. இதுதவிர, அம்மானைப் பாடல்கள் பதினெண்வகை உறுப்புகளைக் கொண்ட "கலம்பகம்' எனும் இலக்கிய வகையிலும் காணப்படுகின்றன.

 திருப்பேரூர்க் கலம்பகத்தில் காணும் பாடல் இது: 

முதல்பெண் அம்மானை ஆட்டத்தை ஆரம்பித்து வைக்கிறாள். புதிர் போடுவதுபோல  ஒரு செய்தியைக் கூறுகிறாள். "பட்டிநாதன் எனப்படும் பேரூர் ஈசன், காட்டில் வேடனாக அலைகின்றவன்; கடலில் வலைவீசி மீன்பிடிப்பவன்; வயலில் பள்ளனாக இறங்கி வேலையும் செய்பவன், பார்த்தாயோ அம்மானே!' என அவனது திருவிளையாடல்களைச் செய்தியாகக் கூறுகிறாள். அதே நேரத்தில் தாளலயத்துடன் அம்மானையையும் வீசிப்பிடிக்கிறாள்.

காட்டிலே வேட்டுவன்பைங் கடலில் வலைவாணன்
நாட்டிற்பள் ளன்பட்டி நாதன்கா ணம்மானை

அடுத்தவள் வேண்டுமென்றே குதர்க்கமாக, "அப்படியென்றால்,  வேதம் ஓதும் அந்தணர்கள் அவனைத்  தம்வீட்டில் சேர்த்துக் கொள்ளும் பெருமை எப்படி ஆயிற்றோ அம்மானே?' என வினவுகிறாள்.

நாட்டிலே பள்ளனெனில் நான்மறையோர் ஈங்கிவனை
வீட்டிலே சேர்த்துகின்ற மேன்மையென்ன அம்மானை

அதற்கு மூன்றாமவள், "அந்தப் பெருமான் உலகியலுக்கு அப்பாற்பட்டவனடி அம்மானே! வீட்டுக்கும் உரியவனானவன் பார்!' என சாமர்த்தியமாக விடை கூறுகிறாள். "ஆமாம்! வீட்டின் உரிமையாளனைச் சேர்க்காமல் இருக்க இயலுமா?' எனும் பொருள் மறைந்து நிற்கிறதல்லவா? "வீட்டுக் குரிய விகிர்தன்கா ணம்மானை'. பேரூரின் பட்டிநாதன் ஆகிய சிவபிரான் வேட்டுவனாகவும் (அருச்சுனனுக்கு வரமருளக் கொண்ட வேடம்), வலைவாணனாகவும் (திருவிளையாடல்), பள்ளனாகவும் (பேரூர்ப்புராணம்) எல்லாம் வந்தாலும், அவர்களிலிருந்து வேறுபட்டு வீடுபேற்றை (முத்தியை) அளிக்கவல்லவனாகவும் அல்லவோ திகழ்கிறான்' என்பது உட்பொருள்! பேரூர் முத்தித்தலம் ஆகும்! அப்பொருள் இதில் தொக்கிநிற்பது மிகுந்த அழகு!

அம்மானை ஆடும்போது கண்ணும் கையும் சிந்தையும் இணைந்து ஒருமுகப்படும் நிலை பெண்ணுக்குச் சாத்தியமாகிறது. சிந்திக்க வைக்கும் வினாக்களை எழுப்புவதனாலும், சமயோசிதமான விடைகளைக் கூறிப் பாடுவதாலும் வாக்குவன்மை வளர்கிறது. "அம்மா,' "அம்மானாய்' எனக் கூறிக்கொண்டு  பாடி விளையாடுவதனால் அம்மானை விளையாட்டு எனப் பெயர்பெற்றது.  பண்டைய மகளிர் விளையாட்டுகள் அனைத்துமே பொருள்பட அமைந்தவை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com