போர்க்களமும் காதல் கவிரசமும்!

தமிழ்க் கவிஞர்களுக்கு ஓர் அற்புதத் திறம் உண்டு. அவர்கள் காதலைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அதில் வீரத்தை விதைத்து விடுவார்கள்
போர்க்களமும் காதல் கவிரசமும்!
Published on
Updated on
1 min read

தமிழ்க் கவிஞர்களுக்கு ஓர் அற்புதத் திறம் உண்டு. அவர்கள் காதலைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அதில் வீரத்தை விதைத்து விடுவார்கள். வீரத்தைப் பற்றிச் சொல்லும்போது அதனூடே காதலை சுவைபடக் கூறுவார்கள். இந்தத் திறம்மிக்க புலவர்களுள் ஒருவர் கலிங்கத்துப்பரணி பாடிய ஜெயங்கொண்டார்.
 போர்க்களக் காட்சியை வர்ணித்துக் கொண்டிருக்கும் வேளையில், களத்திடையே அழகான காதல் காட்சி ஒன்றையும் அமைத்துக் காட்டுகிறார். பெண்களின் காதல், கணவன் மீது கொண்ட பிடிப்பு, அவனை வேறெவர்க்கும் விட்டுத்தர இயலாத அவளின் தவிப்பு என ஒரு பெண்ணின் இயல்பை ஓர் ஆணின் கண்கள் வழியே காணும்போது அது அழகான கவிதையாகிறது.
 ஒருவருக்கொருவர் மிக்க காதலோடு இணைபிரியாது வாழும் கணவனும் மனைவியும் இருக்கிறார்கள். கணவன் நேச மிகுதியால் அவளைப் போர்க்களத்துக்கே அழைத்துச் செல்கின்றான். அவன் களத்தில் தன் வீரத்தைக் காட்டிப் போரிடுவதை அவன் மனைவி பாசறையிலிருந்து காண்கிறாள். அப்படி அவனின் வீரத்தைக் கண்டு அவள் வியக்கும் பொழுதே... கணநேரத்தில் அவனது மார்பில் பகைவனின் வேல் இறங்கிவிடுகிறது.
 மார்பில் வேல் தாங்கிய வீரன் மண்ணில் சாய்வதற்கு முன் காற்று வேகத்தில் ஓடிச் சென்று அவனது உடலைத் தான் தாங்கிக் கொள்கிறாள். அவன் உயிர் பிரியும்
 முன்னே அவள் உயிர் நீத்துவிட்டாள். இப்படி ஒரு நேசத்தின் காட்சியை நம் கண்முன் ஓவியமாக்குகிறார் ஜெயங்கொண்டார்.
 இந்தக் காட்சியின் அழகை அவர் சொல்லும் காரணம் விஞ்சி நிற்கிறது.
 "தன்கொழுநன் உடலை மண்மகள் தழுவாமுன்னம்
 தன்னுடலாற் தாங்குவாளைக் காண்மின் காண்மின்
 விண்மகளிர் தன்கொழுநன் உயிர்புணரா முன்னம்
 தன்ஆவி ஒக்கவிடுவாளைக் காண்மின் காண்மின்'
 மார்பில் வேல் தாங்கிச் சாயும் தன் கணவனின் உடலை மண்மகள் தழுவிவிடக்கூடாது என்று உடன் சென்று தன் மார்பிலேயே தாங்கிக் கொண்டாளாம். காயமடைந்த அவன் வீர மரணம் அடைந்து விண்ணுலகம் செல்லும் முன் விண்ணுலக மகளிர் அவனைக் கூடிவிடும் முன்னர் தன் உயிரைவிட்டு விண் உலகிலும் அவளே அவனை எதிர்கொள்கிறாளாம்.
 -கோதை
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com