இந்த வாரம் கலாரசிகன்

'திநியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் புதுச்சேரி துணை மேலாளர் ரவியின் மகள் ஜனனி - தேஜேஷ் குமார் திருமண வரவேற்பில் கடந்த ஞாயிறு கலந்து கொண்டேன்.
இந்த வாரம் கலாரசிகன்

'திநியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் புதுச்சேரி துணை மேலாளர் ரவியின் மகள் ஜனனி - தேஜேஷ் குமார் திருமண வரவேற்பில் கடந்த ஞாயிறு கலந்து கொண்டேன். புதுவை மாநில அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல் தமிழகத்திலிருந்து பல பிரபலங்களும், முக்கியமான இலக்கிய ஆளுமைகளும் வந்திருந்தனர். தினந்தோறும் "தினமணி'யை சுவாசிக்கும் ஜெயராம் ஹோட்டல் மேலாளர் லட்சுமிநாராயணன், கிருங்கை சேதுபதி, அவரது இளவல் சொ.அருணன் ஆகியோரும் என்னுடன் வந்திருந்தனர்.
 திருமண வரவேற்பில் புதுவை எழுத்தாளர் மஞ்சை வசந்தன், மருத்துவர் இரத்தின. ஜனார்த்தனன், பட்டிமன்றப் பேச்சாளர் வழக்குரைஞர் த. இராமலிங்கம் என்று பலரையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. திருமண வரவேற்பில் புதுச்சேரி சட்டப்பேரவையின் பொறுப்புத் தலைவராக இருக்கும் சிவக்கொழுந்தை சந்தித்தபோது, கம்பன் குறித்து எனக்கு வியப்பு மேலிட்டது. அதற்கு ஒரு காரணம் உண்டு.
 சடையப்ப வள்ளல் தொடங்கி, காலந்தோறும் ஒவ்வொரு ஊரிலும் கம்ப காதையின் புகழ்பாட ஒரு புரவலரைக் கம்பன் தேடிக்கொண்டு விடுகிறார். காலமாற்றங்களால் பாதிக்கப்படாமல் கம்பனின் கொடி தொடர்ந்து பட்டொளி வீசிப் பறப்பதற்கு அதுதான் காரணம். புதுவையில் கம்பன் கண்டெடுத்திருக்கும் இன்றைய காலகட்டத்திற்கான சடையப்ப வள்ளல் நண்பர் சிவக்கொழுந்து.
 அடுத்த வாரம் (மே.10, 11,12) புதுவைக் கம்பன் விழா தொடங்க இருக்கிறது. அதுகுறித்த கலந்தாய்வுக்கு என்னையும் அழைத்திருப்பதற்குக் கம்பன் கழகச் செயலாளர் சிவக்கொழுந்துக்கு நன்றி.
 அரசு உதவியுடன் நடத்தப்படும் இலக்கிய விழா என்கிற பெருமை புதுவைக் கம்பன் விழாவுக்கு மட்டுமே உரித்தான சிறப்பு. புதுவைக் கம்பன் விழாவில் மேடை ஏறுவதைவிட, பார்வையாளராகக் கலந்து கொள்வதில்தான் அதிக மகிழ்ச்சி. கம்ப காதையை முழுவதுமாக ஒருமுறை படித்துவிட்ட ஆனந்தம் கிடைக்கும் என்பதுதான் காரணம். இந்த ஆண்டு எப்படியும் புதுவைக் கம்பன் விழாவுக்கு சென்றுவிட வேண்டும் என்று குறித்து வைத்துக் கொண்டிருக்கிறேன்.
 
 தமிழறிஞர் பாலூர் கண்ணப்ப முதலியாரின் பங்களிப்பு அளப்பரியது. அவருடைய புத்தகங்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டிருக்கின்றன. சென்னைப் புதுக்கல்லூரி தொடங்கியதிலிருந்து 16 ஆண்டுகள் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் விளங்கியவர் அவர். சென்னை சைவ சித்தாந்த சமாஜம், சென்னை எழுத்தாளர் சங்கம் ஆகியவற்றில் தன்னை இணைத்துக்கொண்ட பாலூர் கண்ணப்ப முதலியார் சென்னைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டப் பிரிவிலும் உறுப்பினராக விளங்கியவர்.
 இவர் எழுதிக் குவித்திருக்கும் நூல்களும், கட்டுரைகளும் ஏராளம். இவரது தமிழ் இலக்கிய வரலாறு, கிரேக்க நாட்டுப் புதுமைப் பண்புகள், கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள், தமிழ்ப் புதையல், தமிழ் நூல் (இலக்கிய) வரலாறு ஆகியவை நிகரற்ற படைப்புகள்.
 இத்தனைப் பெருமைக்குரிய தமிழறிஞர் பெயர் மயிலாப்பூரில் ஒரு தெருவுக்குச் சூட்டப்பட்டது. "பாலூர் கண்ணப்ப முதலியார் தெரு' என்று இருந்ததை, ஜாதிப் பெயரை அகற்ற வேண்டும் என்று கூறி மாநகராட்சி "பாலூர் கண்ணப்பன் தெரு' என்று மாற்றிவிட்டது.
 வாழ்ந்து மறைந்த பெரியவர்கள், எந்தப் பெயரில் அறியப்பட்டார்களோ அந்தப் பெயரில் அவர்களின் பெயர் சூட்டப்பட்ட தெருக்களின் பெயரும் தொடர்வதுதான் நியாயம். அதை வெட்டிச் சிதைக்கும் அதிகாரம் அடுத்த தலைமுறைக்குக் கிடையாது. அப்படியே செய்வதாக இருந்தாலும், அந்தத் தெருவில் அந்த ஆளுமை குறித்த தகவல் பலகையோ, கல்வெட்டோ அமைத்தால்தானே, அந்தத் தெருவுக்கு இன்னார் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது என்று அடுத்த தலைமுறைக்குத் தெரியும்?
 பாலூர் கண்ணப்ப முதலியார் குறித்த சிந்தனைக்குக் காரணம், நான் சமீபத்தில் படித்த அவரது "தமிழ் மந்திரம்' என்கிற புத்தகம். நாட்டுடைமை ஆக்கப்பட்டதால், புதிதாக எழுதப்பட்ட புத்தகம் போல வித்துவான் பாலூர் கண்ணப்ப முதலியாரின் "தமிழ் மந்திரம்' முதல் பதிப்பாக வெளியிடப்பட்டிருக்கிறது. அப்படி வெளியிடும்போது, குறைந்தபட்சம் எந்த ஆண்டு முதலில் பதிப்பிக்கப்பட்டது என்பது குறித்தும், அந்த ஆசிரியர் குறித்தும் சிறு குறிப்பாவது இணைக்கப்பட்டிருக்க வேண்டாமா?
 "தமிழ் மந்திரம்' என்பது, திருமூலர் எழுதிய திருமந்திரத்திலிருந்து 365 திருமந்திரங்கள் அடங்கிய ஒரு தொகுப்பு நூல். ஆண்டு முழுவதும் தினம் ஒரு மந்திரமாக ஒவ்வொரு நாளும் படித்து உணர வேண்டும் என்பதுதான் இந்த நூலைத் தொகுத்த பாலூர் கண்ணப்ப முதலியாரின் நோக்கம்.
 "திருமந்திரம் உணர்வதற்குக் கடினமானது என்று மக்கள் பயந்து ஓடாது, எளிமையான மந்திரங்களும் திருமந்திர நூலில் உண்டு என்பதை மக்களுக்கு உணர்த்தவே எளிதாகப் பொருள் உணர்ந்து கொள்வதற்குரிய மந்திரங்களை இத்தொகுப்பின் உள்ளே சேர்த்துள்ளேன்'' என்று தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் அவர். பாலூர் கண்ணப்ப முதலியாரால் எழுதப்பட்ட 15 கட்டுரைகளும் இதில் இணைக்கப்பட்டிருக்கின்றன. இவை திருமந்திரம் பற்றி ஆய்வு செய்வோருக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
 "தமிழ் மந்திரம்' நூலுக்கு அணிந்துரை வழங்கியிருக்கும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தத்துவத்துறைத் தலைவராக விளங்கிய பேராசிரியர் டாக்டர் டி.எம்.பி. மகாதேவன், "பத்தாம் திருமுறையான திருமந்திரம் தோத்திர நூலாகக் கருதப்படும் அளவுக்கு சாஸ்திர நூலாகவும் விளங்கும் பெருமையுடையது'' என்று தெளிவுபடுத்துகிறார். திருமூலர் வரலாறு பற்றிய ஆய்வுரை, திருமூலர் காலம் உள்ளிட்ட கட்டுரைகள் அடங்கிய "தமிழ் மந்திரம்' ஒரு தமிழ்ப் பொக்கிஷம்.
 
 
 புத்தக விமர்சனத்திற்கு வந்திருந்தது எஸ்.யாழ்.ராகவன் எழுதிய "அப்பாவின் சாய்வு நாற்காலி' என்கிற கவிதைத் தொகுப்பு. இது அவருடைய முதல் கவிதைத் தொகுப்பு. அதிலிருந்து ஒரு கவிதை.
 
 ஆளாளுக்கு எல்லோரும் எப்போதும் சொந்தம் கொண்டாட ஆறுதலாய் எங்கும் ஆகாயம்!
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com