"ஏலாதி' கூறும் உடற்பயிற்சி!
By DIN | Published On : 05th May 2019 01:04 AM | Last Updated : 05th May 2019 01:04 AM | அ+அ அ- |

சங்க காலத் தமிழர்களின் வீரத்தையும், காதலையும், ஆட்சியியலையும், அறச்சிந்தனைகளையும் பதிவு செய்திருக்கும் தமிழ் இலக்கியங்கள், அவர்கள் செய்யும் உடற்பயிற்சி பற்றிய செய்திகளையும் எடுத்துக் கூறியிருக்கின்றன. போரும் வீரமும் நிறைந்திருந்த மன்னராட்சியில் போர் வீரர்களுக்கும், மல்லர்களுக்கும் குறைவு இருந்திருக்குமா என்ன?
மல்லர்களும், போர் வீரர்களும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்பர். அப்படிப் பயிற்சி செய்வதை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான "ஏலாதி' செய்யுள் நமக்கு அறியத் தருகின்றது.
திரிகடுகம், சிறுபஞ்சமூலம் போலவே "ஏலாதி' என்பது மருந்தின் பெயர்கொண்ட ஒரு நீதி நூல். ஏலம், இலவங்கம், நாவற் பூ, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு மருந்துப் பொருள்களின் கூட்டுக்கலவை உடல் நோயைக் குணப்படுத்துவது போலவே, ஏலாதியில் உள்ள செய்யுள்களில் ஆறு நீதிகளைக் கூறி, மன நோயைக் குணப்படுத்த முயன்றிருக்கிறார் அதன் ஆசிரியர் கணிமேதாவியார்.
ஏலாதியில் உடற்பயிற்சி செய்வது பற்றிய குறிப்பு ஒன்று காணப்படுகின்றது. தம் உறுப்புகளை இயக்குதல், அவற்றை இயக்காது முடக்கல், நிமிரச் செய்தல், நிலைக்கச் செய்தல், படுக்க வைத்தல், ஆடவைத்தல் என்று உயர்ந்த அறிஞர்கள் உயிர் சார்ந்த உடம்பின் தொழில்கள் ஆறு என்று கூறியுள்ளனர். இப்பாடலின் வழி யோகாசனக் குறிப்பு கூறப்பட்டுள்ளதாகவும் கொள்ளலாம். காரணம், இத்தகைய உயிர் சார்ந்த உடலின் பயிற்சியை இன்றைக்கு "யோகா' என்றே கூறுகின்றனர். அப்பாடல் வருமாறு:
"எடுத்தல், முடக்கல், நிமிர்த்தல், நிலையே,
படுத்தலோடு, ஆடல் பகரின் அடுத்து உயிர்
ஆறு தொழில் என்று அறைந்தார் உயர்ந்தவர்
வேறு தொழிலாய் விரித்து' (பா.69)
தேகப் பயிற்சி (யோகா) செய்வதால் உடல் உறுதி பெறுவதோடு ஆரோக்கியமும் பெறலாம் என்பதை எடுத்துரைத்துள்ளார் புலவர் கணிமேதாவியார்.
-குடந்தை பரிபூரணன்
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...