மூவர் பயன்படுத்திய முதுமொழிகள்!

பழமொழி என்பதற்கு அகராதியில் ""மக்களிடையே நீண்ட காலமாக வழங்கி வருவதும், பேச்சில் எடுத்துக்காட்டாகக் காட்டப்படுவதுமான ஒரு தொடர்'' என்று பொருள் உள்ளது. பழமொழி  "முதுமொழி' என்றும் கூறப்படும்.
மூவர் பயன்படுத்திய முதுமொழிகள்!

பழமொழி என்பதற்கு அகராதியில் ""மக்களிடையே நீண்ட காலமாக வழங்கி வருவதும், பேச்சில் எடுத்துக்காட்டாகக் காட்டப்படுவதுமான ஒரு தொடர்'' என்று பொருள் உள்ளது. பழமொழி  "முதுமொழி' என்றும் கூறப்படும். பழமொழிகளில் பலரும் அடிக்கடி பயன்படுத்தும்,  "பாம்பின் கால் பாம்பறியும்', "கல்லிலே நார் உரித்தல்', "மரத்தை நட்டவன் தண்ணீர் ஊற்றுவான்' முதலியவற்றைக் கம்பர், மகாகவி பாரதியார், தேசிக விநாயகம் பிள்ளை ஆகிய மூவர் பெருமக்கள் எவ்விதம் கையாண்டுள்ளனர் என்பதைக் 
காண்போம்.

கம்பர் தகுந்த இடத்தில், பொருத்தமான பழமொழி ஒன்றைக் கையாண்டிருக்கிறார். இலக்குவன் சூர்ப்பணகையின் உறுப்புகளை அறுத்து, அலங்கோலம் செய்த போதிலும், அவளுக்கு ராமன்பால் இருந்த காமம் போகவில்லை; ""நீர் என்னை ஏற்றுக்கொண்டால் ஒரு நொடிப் பொழுதில் அம்மூக்கை உண்டாக்குவேன்'' என்றெல்லாம் பேசி, ராமனை வசப்படுத்த நினைக்கிறாள். அந்நிலையில், அரக்கர்களைக்கூட  அவள் இகழ்ந்து பேசுகிறாள். இதில்,  பயின்றுவரும் பழமொழியைப் பாருங்கள்.

"காம்பு அறியும் தோளாளைக் கைவிடீர்
        என்னினும் யான் மிகையோ? கள்வர்
ஆம், பொறிஇல், அடல் அரக்கர் அவரோடே
        செருச் செய்வான் அமைந்தீர ஆயின்
தாம் பொறியின் பல மாயம் தரும் பொறிகள்
        அறிந்து,  அவற்றைத் தடுப்பென் அன்றே?
பாம்பு அறியும் பாம்பின கால் 
        எனமொழியும் பழமொழியும் பார்க்கிலீரோ?
         (சூர்ப்பணகைப் படலம், 139)

"மூங்கில் போல் தோள்களை உடைய சீதையை துறக்கமாட்டீர் என்றாலும், நான் உம்முடன் சேர்ந்திருப்பது அதிகமாகுமோ? வஞ்சகரான இராக்கதர்களுடனே போர் செய்ய விரும்பினீர் என்றால், ஐம்பொறிகள் போல மயக்கம் தரும், வஞ்சனைகள் செய்யும் அவர்களின் தந்திரங்களை நான் அறிந்து தடுத்திடுவேன் என்பது மேற்கண்ட பாடலின் பொருள். ""பாம்பானது பாம்பின் காலை அறியும்' எனக் கூறும் உலக முதுமொழியையும் அறியீரோ?'' என்பது அ.ச.ஞா.வின் உரை.

மகாகவி பாரதியின் "பாஞ்சாலி சபதம்' அற்புதமான கவிதைப் படைப்பு, சகுனியின் துர்ப்போதனையால், பாண்டவர்களை சூதுக்கு அழைக்கும் திட்டம் வகுக்கும்போது, துரியோதனனைத் திருதராஷ்டிரன் தடுக்கிறார். 

"உன் சின்ன மதியினை என் சொல்வேன்?', "உறவு அண்ணன் தம்பியும்' என்று பலவாறாக அறிவுரை கூறுகிறார். அதற்கு துரியோதனன் தந்தையை சினம் கொண்டு சாடுகிறான்; அதில் வரும் ஒரு பாடலில்,  "கல்லில் நார் உரித்தல்' என்கிற பழமொழி பயின்று வருகிறது.

"சொல்லின் நயங்கள் அறிந்திலேன்  உனைச்
சொல்லினில் வெல்ல விரும்பினேன்; கருங்
கல்லிடை நாருரிப் பாருண்டோ?  நினைக்
காரணம் காட்டுதலாகுமோ? எனைக்
கொல்லினும் வேறெது செய்யினும் நெஞ்சில்
கொண்ட கருத்தை விடுகிலேன் - அந்தப்
புல்லிய பாண்டவர் மேம்படக்  கண்டு
போற்றி உயிர் கொண்டு வாழ்கிலேன்'

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மிக மிக எளிய சொற்களால் கவிதை எழுதிப் புகழ் பெற்றவர். பல ஆங்கிலப் பாடல்களையும், பாரசீகப் பாடல்களையும் அனைவரும் புரிந்து கொள்ளும்படி கவிதையாகத் தீட்டியவர். அவருடைய பாரசீக தனிப் பாடலில், "மரத்தை நட்டவன் தண்ணீர் ஊற்றுவான்' என்கிற பழமொழி பயின்று வருகிறது!

"ஐயோ அறியா மானிடரே!
ஆசைப் பேயின் அடிமைகளே
எய்யாதெ ன்றும் வான் நோக்கி
இரங்கி அழுது நிற்பதுமேன்
மெய்யாய் அன்று படைத்தவன்
மெலியாதும்மைக் காவானோ
கையால் மரத்தை நட்டவர்கள்
கருத்தாய் நீரும் வார்க்காரோ?' 

(பா. த.பா. பக். 210)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com