விடுகதையில் உழவின் மேன்மை!
By DIN | Published On : 06th October 2019 04:40 AM | Last Updated : 06th October 2019 04:40 AM | அ+அ அ- |

உழவுத் தொழிலின் மேன்மையினை ஒரு விடுகதையின் வாயிலாக சுந்தரக் கவிராயர் எனும் புலவர் பாடிய தனிப்பாடல் மிகுந்த சிறப்புடையதாகும். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தவர் சுந்தரக் கவிராயர். இவர் பாடிய 26 பாடல்கள் தனிப்பாடல் திரட்டில் உள்ளன. எட்டயபுரம் அருணாசலத்துரை, தையூர் முத்து முதலானோரால் ஆதரிக்கப் பெற்றவர் இவர். உழவுத் தொழிலின் உயர்வை நன்குணர்ந்தவர் என்பதற்கு இவ்வொரு பாடலே சான்றாகும்.
பத்துக்கால், மூன்று தலை, ஆறு கண்கள், ஆறு முகம், நான்கு வாய் என அனைத்தையும் ஓரிடத்தில் கண்டேன் என்று விடுகதையில் பாடி, நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்.
"பத்துக் கால், மூன்று தலை, ஆறு கண், ஆறு முகம், நான்கு வாய் ஆகியன உடைய ஒன்றை ஓரிடத்தில் கண்டேன். அதன் மீது ஆசை கொண்டேன்; மகிழ்ச்சியுற்றேன். இவ்வுலகில் இந்தப் புதுமையைக் கண்டு என்னவென்று கூறுவாயாக?' என்பதுதான் அவர் போடும் விடுகதை. இவ்விடுகதையிலேயே இதற்கான விடையும் உள்ளது.
"பத்துக்கால் மூன்றுதலை பார்க்கும்கண் ஆறுமுகம்
இத்தரையில் ஆறுவாய் ஈரிண்டாம் - இத்தனையும்
ஓரிடத்தில் கண்டேன் உகந்தேன் களிகூர்ந்தேன்
பாரிடத்தில் கண்டே பகர்.' (பா.9)
பத்துக் கால்: இரு காளைகளைக் கலப்பையில் பூட்டி ஓட்டும் காலத்தில் இரண்டு காளையின் கால்கள் எட்டும், ஓட்டும் மனிதனின் கால் இரண்டும் ஆக பத்துக்கால்; மூன்று தலை: காளையின் முகம் இரண்டும், மனிதன் தலை ஒன்றும் ஆக மூன்று தலை; ஆறு கண்கள்: இரண்டு காளையின் முகத்திலுள்ள கண்கள் நான்குடன் ஓட்டுபவனின் முகத்திலுள்ள கண்கள் இரண்டும் சேர்த்துக் கண்கள் ஆறு; ஆறு முகம்: காளை, மனிதனின் முகத்தோடு கொழு முகம் மூன்றும் சேர்த்து முகம் ஆறு; நான்கு வாய்: இம்மூன்று வாயுடன் நாழிவாய் ஒன்று சேர்த்து வாய் நான்காகும் என்பதுதான் இவ்விடுகதைக்கான விடை! அதாவது ஓர் உழவன் இருமாடுகளைக் கொண்டு கலப்பை ஓட்டி உழவு செய்வதைக் குறிக்கிறது இப்பாடல்!
-சே.ஜெயசெல்வன்

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...