இந்த வாரம் கலாரசிகன்

அண்ணல் காந்தியடிகளின் 150-ஆவது பிறந்த தினக் கொண்டாட்டத்தையொட்டி மதுரைக்குச் சென்ற எனக்கு ஏற்பட்டிருக்கும் புரிதல் எதிர்பாராதது. ஆச்சரியப்படுத்துவதாக இருக்கிறது.
இந்த வாரம் கலாரசிகன்

அண்ணல் காந்தியடிகளின் 150-ஆவது பிறந்த தினக் கொண்டாட்டத்தையொட்டி மதுரைக்குச் சென்ற எனக்கு ஏற்பட்டிருக்கும் புரிதல் எதிர்பாராதது. ஆச்சரியப்படுத்துவதாக இருக்கிறது. தமிழகத்தில் தேசிய உணர்வு நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கிறது என்கிற உண்மையை நான் நேரில் கண்டு உணர்ந்த தருணம் இது.
 சாரி சாரியாகக் குடும்பத்தினருடன் நூற்றுக்கணக்கானோர் அதிகாலையில் இருந்து மதுரை காந்தி அருங்காட்சியகத்துக்கு ஏதோ ஆலயத்துக்குப் போவது போல வந்து கொண்டிருந்தனர். எந்தவித கட்சிப் பின்னணியோ, ஜாதிப் பின்னணியோ, முறையான அழைப்போ இல்லாமல் வேறு எந்தவொரு ஆளுமைக்கும் இப்படியொரு ஈர்ப்பு இந்தியாவில் இல்லை என்பதை என்னால் உணர முடிந்தது.
 காந்திஜியின் பிறந்த நூற்றாண்டைப் போல அவரது 150-ஆவது பிறந்த நாளையும், மதுரையில் அவரது மூச்சுக்காற்று உலவிய இடங்களுக்கெல்லாம் புனிதப் பயணம் மேற்கொண்டு மரியாதை செலுத்த முடிந்ததில் நான் அடைந்திருக்கும் மகிழ்ச்சிக்கும் மனத் திருப்திக்கும் ஈடு இணையே கிடையாது. அதிலும் குறிப்பாக, நண்பர் சிதம்பரபாரதி ஏற்பாடு செய்திருந்த நூற்பு வேள்வியில் கலந்துகொண்டு, சர்வோதயத் தொண்டர்களைச் சந்தித்தது அண்ணல் காந்தியடிகளையே சந்தித்த உணர்வையும் சிலிர்ப்பையும் ஏற்படுத்தியது.
 புதுக்கோட்டையில் அதே நாளில் நண்பர் தினகரன் ஆண்டுதோறும் நடத்தும் காந்திஜியின் பிறந்த நாள் விழாவில் இன்னொரு பேராச்சரியம் காத்திருந்தது. தமிழகம் எங்கும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியிலும், பேச்சுப் போட்டியிலும் பங்குகொண்டவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்துக்கும் அதிகம். முன்பு, வழக்குரைஞர் வெங்கட்ரமணனின் வேண்டுகோளைத் தொடர்ந்து "தினமணி'யும், மதுரை காந்தி அருங்காட்சியகமும் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டியிலும் இதேபோல ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
 கட்டுரைப் போட்டிகளில் மாணவ, மாணவியர் கலந்து கொள்வது புதிதொன்றும் இல்லைதான். ஆனால், காந்தியம் குறித்த இந்த இரண்டு போட்டிகளிலும் கலந்து கொண்ட மாணவர்களின் எழுத்து மட்டுமல்ல அவர்களது காந்திய சிந்தனையிலும் காணப்பட்ட ஆழமும் அழுத்தமும் சற்றும் எதிர்பாராதது. சொல்லிக் கொடுத்து எழுதாமல் காந்தியத்தைக் கற்றுத் தேர்ந்து இந்த இளைய தலைமுறை மாணவ, மாணவியர் எழுதுகிறார்கள், பேசுகிறார்கள் என்பதே எந்த அளவுக்கு காந்திய சிந்தனை அவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
 மகாத்மா குறித்துப் பேசும்போதும், காமராஜர் குறித்துக் குறிப்பிடும் போதும் கூடியிருக்கும் இளைய தலைமுறையினரிடமிருந்து எழுகின்ற கரவொலி காந்தியம் என்கிற அக்கினிக் குஞ்சின் வீரியம் சற்றும் குறைந்துவிடவில்லை என்பதை உறுதிப்படுத்தியது.
 
 அண்ணல் காந்தியடிகளுடன் தொடர்புடையவர்கள் அவரது பிறந்தநாளையொட்டி மறைகிறார்கள் என்பது, எந்த அளவுக்கு அவர்கள் காந்தியத்துடன் ஒன்றியிருந்தனர் என்பதை எடுத்துரைக்கிறது. "பெருந்தலைவர்' காமராஜரும், "அருட் செல்வர்' நா.மகாலிங்கமும் காந்தி ஜயந்தி அன்று மறைந்தார்கள் என்றால், "சிலம்புச் செல்வர்' ம.பொ.சி. காந்தி ஜயந்திக்கு அடுத்த நாள் இயற்கை எய்தினார்.
 வீரபாண்டிய கட்டபொம்மன், மகாகவி பாரதியார், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம்பிள்ளை, அருட்பிரகாச வள்ளலார் ஆகியோர் குறித்துத் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் உரையாற்றி, அவர்களது நினைவைப் போற்றிய பெருமை சிலம்புச் செல்வருக்கு மட்டுமே உண்டு.
 அக்டோபர் 3-ஆம் தேதி ம.பொ.சி. நினைவு தினம். ம.பொ.சி. என்று சொல்லும்போதே "சிலம்புச் செல்வர்' என்கிற அடைமொழியும், கண்ணகியின் கதையைப் பட்டிதொட்டியெல்லாம் எடுத்துரைத்த அவரது தொண்டும் மனதில் எழுகிறது. சிலப்பதிகாரம் இந்த அளவுக்குப் பிரபலமானதற்கு ம.பொ.சி.தான் காரணம் என்பதுகூட இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாத அளவுக்கு மறக்கடிக்கப்பட்டிருக்கிறது.
 ம.பொ.சி. எழுதிய அற்புதமான புத்தகம் "வீரக்கண்ணகி'. ஆரம்பக் கல்விகூட இல்லாத சாமானியரான "மயிலை பொன்னுசாமி சிவஞானம்' சிலப்பதிகாரக் காவியத்தைப் படித்தது சிறையில்தான். அதுமுதல் அதனுடன் வாழத் தொடங்கிவிட்டார். இதுகுறித்து "வீரக்கண்ணகி' புத்தகத்தின் முன்னுரையில் சிலம்புச் செல்வரின் பதிவு இது -
 ""1942 ஆகஸ்ட் போரில் ஈடுபட்டு சிறையில் கிடந்தபோதுதான் சிலப்பதிகாரக் காப்பியத்தை நான் முதன்முதலாகப் பார்த்தேன். படிக்கவும் தொடங்கினேன். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் போர்க்களத்தில் இருந்தவண்ணம் படித்ததால், கண்ணகி தேவியின் அரசியல் புரட்சி எனது கருத்தைக் கவர்ந்தது. பத்தினி கண்ணகி, கோவலன் வெட்டுண்ட கொலைக்களத்தில் நின்று புகன்ற வீரமொழிகளும், பாண்டியன் அரசவையில் கூறிய ஆவேச மொழிகளும் என் உள்ளத்தைத் தொட்டன.
 சிலப்பதிகாரத்தை ஒருமுறை கருத்துடன் படித்து முடித்ததுமே "நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்' என்று பாரதியார் புகன்ற வாசகத்தின் உண்மைப் பொருளை உணர்ந்தேன். சிறையில் கிடைத்த ஓய்வைப் பயன்படுத்தித் திரும்பத் திரும்ப சிலப்பதிகாரத்தைப் படித்தேன். நான் படித்த ஒவ்வொரு முறையும் வெவ்வேறு காட்சிகள், தமிழினத்தின் வருங்காலத்தை உருவாக்கும் புதுப்புதுக் கருத்துகள் என்னுள் தோன்றிக்கொண்டே இருந்தன. சிறையில் சிலப்பதிகாரத்தைப் படித்து நான் எண்ணிய எண்ணங்களின் முழு உருவம்தான் தமிழரசு இயக்கம்''.
 சிலப்பதிகாரத்தை ஒருமுறை படித்துவிட்டு சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் எழுதிய "வீரக்கண்ணகி' புத்தகத்தைப் படித்தால் போதும். அவரைப் போலவே நாமும் இளங்கோவடிகளின் அமர காவியத்துக்கு அடிமையாகிவிடுவோம்.
 
 ண்ணல் காந்தியடிகள் எப்படி சிலம்புச் செல்வரை ஈர்த்தாரோ, அதேபோல சிலம்புச் செல்வரால் ஈர்க்கப்பட்ட எழுத்தாளர்களும், கவிஞர்களும் தமிழகத்தில் ஏராளம்... ஏராளம். அவர்களில் கவிஞர் புவியரசு முக்கியமானவர்.
 கடந்த மாதம் வெளிவந்திருக்கும் கவிஞர் புவியரசின் கவிதைத் தொகுப்பு "புவி 88'. அதில், காந்தியடிகள் குறித்த ஒரு கவிதை. தலைப்பு, "பாராட்டா? குற்றச்சாட்டா?'
 

காந்தியிடம் ஒரு தடி இருந்தது அதை அவர் பயன்படுத்தவே இல்லை.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com