தென்னூல்: போற்றப்பட வேண்டிய இலக்கண-மொழியியல் நூல்

தமிழிலக்கண உலகில் பல்வேறு இலக்கண நூல்கள் பல்வேறு காலங்களில் அக்கால மொழியினைப் பிரதிபலிக்கும் வகையில் செய்யுள் வழக்கு, உலகியல் வழக்கு ஆகிய இரு வழக்குகள் நோக்கி தோற்றம் பெற்றன.
தென்னூல்: போற்றப்பட வேண்டிய இலக்கண-மொழியியல் நூல்

தமிழிலக்கண உலகில் பல்வேறு இலக்கண நூல்கள் பல்வேறு காலங்களில் அக்கால மொழியினைப் பிரதிபலிக்கும் வகையில் செய்யுள் வழக்கு, உலகியல் வழக்கு ஆகிய இரு வழக்குகள் நோக்கி தோற்றம் பெற்றன.

""தொல்காப்பியமும் அதன்பின் ஏறக்குறைய பத்து நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வீரசோழியம், நேமிநாதம், நன்னூல் என்று வரிசையாகத் தோன்றின. ஆயினும் தொல்காப்பியத்தைத் தவிர, அதன் பின்னர் தோன்றிய இலக்கண நூல்கள் சரிவர இலக்கண விதிகளை அமைக்கவில்லை. தொல்காப்பியத்தைத் தவிர ஏனையவை அக்கால மொழிகளின் தன்மையைப் பிரதிபலிக்கவில்லை'' என்கிறார், "தென்னூல்' ஆசிரியரான பாவலரேறு ச. பாலசுந்தரம்.

தென்னூல்

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் மரபிலக்கணத்திலும் மொழியியலிலும் தோய்ந்த பாவலர் ச. பாலசுந்தரத்தின் சீரிய முயற்சியால் உருவாக்கப்பட்ட ஓர் அரிய நூல்தான் "தென்னூல்' என்னும் இலக்கண நூல். இவர், தொல்காப்பியம் முழுமைக்கும் உரை கண்டவர். இந்நூல் இது எழுத்துப்படலம், சொற்படலம், இலக்கியப்படலம் ஆகிய மூன்று பிரிவுகளில் 1991-ஆம் ஆண்டில் தஞ்சாவூர் தாமரை வெளியீட்டகத்தின் மூலம் வெளிவந்துள்ளது. மூன்று பிரிவுகளில் முதல் இரண்டு பிரிவுகள் ஒரு நூலாகவும், மூன்றாவது பிரிவு ஒரு நூலாகவும் வெளிவந்திருக்கின்றன.

நூலின் சிறப்பு

எழுத்து, சொல், இலக்கியம் ஆகிய மூன்று பகுப்புகளாக இருக்கும் இந்நூல் தமிழ் மரபிலக்கணத் தனித்தன்மை குறையாவண்ணம் இருக்க நூற்பா வடிவில் அமைந்துள்ளது. மேலும், தற்கால மொழியின் வளர்ச்சிக்கேற்ப புதிய கருத்துகளை உட்புகுத்தி நூற்பாக்கள் யாக்கப்பட்டுள்ளன. நூற்பாக்கள் கவிதை நடையிலும் எளிமையான முறையிலும் அமைந்துள்ளன. இந்நூலுக்கு எழுத்துப்படலம் முழுமைக்கும், சொற்படலத்தில் 11 இயல்களுக்கும் நூலாசிரியரே உரையும் எழுதியுள்ளார். சொற்படலத்தில் "தொடரியல்' என்னும் இயலிலிருந்தும் இலக்கியப்படலத்தில் முழுமையும் உரைகள் இல்லை. ஆயினும், உரையின் உதவியின்றியே இந்நூலை கற்க முடியும். 
இலக்கணக்கடல் தி.வே.கோபாலையர் தந்துள்ள விரிவான ஆய்வு முன்னுரை இந்நூலின் சிறப்பினையும் தேவையினையும் தெளிவாக எடுத்துரைக்கிறது. சங்க இலக்கியங்களில் பதிவாகியுள்ள சில வடிவங்களுக்கு மரபிலக்கணங்களில் விதிகள் காணப்படாத நிலையில், இந்நூலில் பெரும்பான்மையாகக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

எழுத்துப்படலம்

343 நூற்பாக்களை உள்ளடக்கிய இப்படலம் பதினான்கு இயல்களைக் கொண்டுள்ளது.  அவை: 1. தோற்றம், 2. வகைவிரி, 3. குறியீடு, 4. அளவை, 
5. இனம்-முறை, 6. மயக்கம், 7. மொழி முதல் நிலை, 8. மொழி இறுதி நிலை, 9. இடைநிலை, 10. மாற்றொலி எழுத்துக்கள், 11. (இயலின் பெயரை அறிய முடியவில்லை "பிறமொழி எழுத்துக்கள்' என்று இருக்கலாமென நூற்பாக்களின் மூலம் ஊகிக்க முடிகிறது), 12. பிறப்பியல், 13. கிளவியியல், 14. புணரியல் என்பனவாகும். 

வடமொழியில் பெயருக்கு முன்னர் அ - என்பது எதிர்மறையை உணர்த்துவதையும் எடுத்துக்காட்டுகின்றார். பெயருள் சில குரீஇ, ஆடூஉ என்பன அளபெடை இல்லை என்பதையும்; ஐ, ஒள என்பன மாத்திரையின் குறுக்கத்தால் அய், அவ் எனவரும் என்பதையும்; நெடுங்கணக்கு எழுத்துகளின் பிறப்பின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளதையும் ச-ய; ட-ள, ழ; ற-ல, ர; ப-வ என்பன இன எழுத்துகள் என்றும் குறிப்பிட்டுச் சான்றுகளையும் தந்துள்ளார்.  
வசம்-வயம்; தேசம்-தேயம்; வாள்தடம்-வாட்டடம்; பிரிவு-பிறிவு; அளபு-அளவு; சாபம்-சாவம் இவை பிறப்பிடத்தான் இனமாயவை என்பது அவருடைய மேலான விளக்கங்களாகும். மேலும், வடமொழி, ஆங்கில எழுத்தொலிகளுக்கான விளக்கங்கள் தொல்காப்பியரின் "அகத்தெழு வளியிசை அரில்தப நாடி' என்னும் நூற்பாவிற்கான விளக்கம் நுட்பமானவை. 

சொற்படலம்

307 நூற்பாக்களைக்கொண்ட இப்படலமும் பதினான்கு இயல்களைக் கொண்டது. அவை: 1. மொழியமைப்பியல், 2. பெயரியல், 3. வினையியல், 4. இடைச்சொல்லியல், 5. உரிச்சொல்லியல், 6. தொகைமொழியியல், 7. ஆகுபெயர், 8. எச்சவியல், 9. வழாநிலை வழுவமைதி, 10. செப்புவினா இயல், 11. மரபு வழக்கியல், 12. தொடரியல், 13. கூற்றியல், 14. ஒழிபியல் ஆகியனவாகும். இதில் பன்னிரண்டாவது இயலான தொடரியலிலிருந்து உரைகள் இல்லை.

இதில் மொழியிலக்கணப் பயனை விளக்கியுள்ளார். தன்மைப் பன்மை விகுதிகளை விளக்கும்போது, தற்காலத்தில் பயன்படும் - "ஓம்' என்னும் விகுதி விடுபட்டுள்ளதன் காரணம் தெரியவில்லை. வியங்கோளுக்குப் புதிய விளக்கமாக -க, -இய, -இயர் என்னும் விகுதிகளையுடைய படர்க்கை வினைமுற்றுகளே தன்மையிலும் முன்னிலையிலும் வரும். 

எனவே, தொல்காப்பியரின் ""தன்மை முன்னிலை ஆயீரிடத்தும் மன்னாதாகும் வியங்கோட் கிளவி'' என்பதற்கு தன்மை, ""முன்னிலை வடிவ வினைமுற்றுகள் தன்மையிடத்தும் முன்னிலையிடத்து முடிக்குஞ் சொற்களாய் வாராமல் தன்மை, முன்னிலைப் பெயர்களையடுத்துப் படர்க்கை வினைமுற்றுகள் வந்து வியங்கோட்பொருளைத் தரும் என்பதும்; எனவே தன்மையிலும், முன்னிலையிலும் வியங்கோட்பொருள் வாராது என்பதும் தொல்காப்பியரின் கருத்து இல்லை'' என்பது இவருடைய சிறப்பான கருத்தாகும். 

தொல்காப்பியர், "ஓகாரம்' ஆறு பொருளில் வருமென்று சொல்ல, இவர் எட்டுப் பொருள்களில் வரும் என்கிறார். இவையெல்லாம் காலந்தோறும் மொழியில் ஏற்படும் மாற்றங்களைப் பதிவு செய்வதும் கூர்ந்த மதியால் தொன்மைக் கருத்துகளை மேம்படுத்துவதுமாகும்.

இலக்கியப்படலம்

789 நூற்பாக்களைக் கொண்டுள்ள நூலின் இறுதிப் படலமான இது 24 இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. அவை: 1. பாயிரவியல், 2. ஈரேழ் திணையியல், 3. இருவகை கைகோளியல், 4. சுவையியல், 5. அணியியல், 6. பொருள்மரபியல், 7. யாப்பியல், 8. இயற்பாவியல், 9. இசைப்பா இயல், 10. உரைப்பாவியல் (புதுக்கவிதை), 11.உரைஇயல், 12.நூல் இயல், 13. காவிய இயல், 14. புராணவியல், 15. கதைபொதிபாடல் இயல், 16. சிற்றிலக்கிய இயல், 17. செய்யுள்மாலை இயல், 18. சிறுகதை இயல், 19. புதினவியல் (நாவல்), 20.நாடக இலக்கிய இயல், 21. கட்டுரை இயல், 22. திறனாய்வுக் கட்டுரை இயல், 23. ஒப்பியலாய்வுக் கட்டுரையியல், 24. ஒழிபியல் என்பனவாகும்.
இப்படலத்தில் உரைகள் இல்லை. ஆயினும் இவை உரையின்றியே படிக்கும் வகையில் அமைபவை. காலப்போக்கில் மொழியில் வளர்ந்து வருகின்ற இலக்கிய வகைகளைத் தம்முடைய இலக்கண நூலில் வகைப்படுத்தி, அவற்றின் இலக்கணத்தினை வரையறைப்படுத்தியதே நூலாசிரியரின் வெற்றி எனக் கூறலாம். 

20-ஆம் நூற்றாண்டில் அத்தி பூத்ததைப் போல ஒரு செவ்விய இலக்கண நூலாக மலர்ந்திருக்கும் இந்நூல்,  தமிழ்த்துறை மற்றும் மொழியியல்துறை மாணாக்கர்களுக்குப் பாடமாக  வைக்கும்  தகுதி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com