இந்த வார கலாரசிகன்

வாழ்த்துகளும் பாராட்டுகளும் வந்து குவிந்தவண்ணம் இருக்கின்றன. "தினமணி' தனது 85-ஆவது ஆண்டு இதழியல் பயணத்தை நிறைவு செய்து 86-ஆவது  ஆண்டில் அடியெடுத்து வைத்ததைத் தங்களது குடும்பத்தில் நடக்கும்
இந்த வார கலாரசிகன்

வாழ்த்துகளும் பாராட்டுகளும் வந்து குவிந்தவண்ணம் இருக்கின்றன. "தினமணி' தனது 85-ஆவது ஆண்டு இதழியல் பயணத்தை நிறைவு செய்து 86-ஆவது  ஆண்டில் அடியெடுத்து வைத்ததைத் தங்களது குடும்பத்தில் நடக்கும் கொண்டாட்டமாகக் கருதி மகிழும் அத்தனை வாசகர்களுக்கும் நன்றி சொல்ல என்னிடம் தமிழும் இல்லை, வார்த்தையும் இல்லை.

"தினமணி' குறித்தும், "தினமணி'யுடனான தங்களது அனுபவங்கள் குறித்தும் கட்டுரைகள் வந்து குவிந்திருக்கின்றன. அவற்றை எல்லாம் பதிப்பிப்பதாக இருந்தால் ஆயிரம் பக்கங்கள் தேவைப்படும். பொன்.ராதாகிருஷ்ணன், முனைவர் தெ.ஞானசுந்தரம் தொடங்கி, பல ஆளுமைகளின் கட்டுரைப் பதிவுகளை "தினமணி 85' மலரில் வெளியிட முடியாமல் போய்விட்டது. அதனால்,  தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் கட்டுரைகளை ஞாயிற்றுக்கிழமை "கொண்டாட்டம்' இணைப்பில் வெளியிடுவது என்று முடிவு செய்திருக்கிறோம். 
எழுத்தாளர் மாலன் உள்ளிட்ட பலரும், "தினமணி 85' மலரை ஏன் புத்தக வடிவில் கொணரவில்லை என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். நாங்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம். அது, மலருக்குப் புத்தக வடிவம் தருவது என்பதுதான். 

இன்று காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை, சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில்,  "பாமரருக்கும் பரிமேலழகர்' என்கிற கருத்தரங்கம்  நடைபெறுகிறது. மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டிருக்கும் சி.இராஜேந்திரனின் "பாமரருக்கும் பரிமேலழகர்' என்கிற உரை நூலின் அடிப்படையில் நடத்தப்படும் அந்தக் கருத்தரங்கை மாண்பமை நீதிநாயகம் ஆர்.மகாதேவன் தொடக்கி வைக்கிறார்.

தமிழில் மிக அதிகமாக உரை எழுதப்பட்டிருக்கும் நூல் திருக்குறள் மட்டுமாகத்தான் இருக்கும். தமிழ்மீது  தாளாப் பற்றுகொண்ட ஆளுமைகள் அனைவருமே திருக்குறளுக்கு  உரை எழுதியிருக்கிறார்கள் என்றால்,  அவர்கள் எந்த அளவுக்குத் திருக்குறளால் கவரப்பட்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படுகிறது.

எத்தனை எத்தனையோ உரைகள் வெளிவந்தாலும், அவை அனைத்துமே ஏதாவது ஒரு வகையில் பரிமேலழகரின் உரையைச் சார்ந்தோ,  அதன் அடிப்படையிலோ, அதன் உதவியுடனோதான் எழுதப்பட்டிருக்கின்றன என்பதுதான் உண்மை.

பரிமேலழகரை அகற்றி நிறுத்தினால் திருக்குறள் இல்லை; திருக்குறளை அகற்றி நிறுத்தினால் தமிழும் இல்லை. அதனால், உங்களைப் போலவே நானும், "பாமரருக்கும் பரிமேலழகர்' தொகுப்பை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

எல்லா தமிழ் ஆளுமைகளின் பிறந்த நாளையும் கொண்டாடுவது என்கிற புதிய, வரவேற்புக்குரிய முயற்சியில் இறங்கியிருக்கிறது முஸ்தபா தமிழ் அறக்கட்டளை. கடந்த வாரம் தோழர் ஜீவானந்தத்தின் பிறந்த நாளையொட்டி, சென்னை கவிக்கோ அரங்கத்தில் நடந்த விழாவில் நீதிநாயகம் சந்துருவுடன் நானும் கலந்து கொண்டேன். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த கவிஞர் யுகபாரதி, அவர் வெளிக்கொணர்ந்திருக்கும் "பின்பாட்டு' என்கிற அவரது புத்தகத்தைத் தந்தார்.

கவிஞர் யுகபாரதியின் "நேற்றைய  காற்று' புத்தகத்தைப் படித்த பிரமிப்பிலிருந்தே நான் இன்னும் விடுபடாத நிலையில், "பின்பாட்டு' தரப்பட்டபோது,  பின்னால் படித்துக் கொள்ளலாம் என்று எடுத்துவைக்க மனமொப்பவில்லை. திரையிசை குறித்துத் திரைத்துறையில் இருக்கும், திரையுலகுடன் தொடர்புடைய ஒருவர் செய்திருக்கும் பதிவு எனும்போது, அதன் சுவாரஸ்யம் அலாதியாக இருப்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?

"நேற்றைய காற்று' புத்தகம், தனக்கு முன்னால் இருந்த திரையிசைக் கவிஞர்கள் பற்றிய அரிய தகவல்களுடனான கவிஞர் யுகபாரதியின் பதிவு என்றால், "பின்பாட்டு' திரையிசைப் பாடல்களுக்குப் பின்னால் புதைந்து கிடைக்கும் ருசிகரமான செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது.

எஸ்.எஸ்.வாசன் எழுதிய "மொழி பிரிக்காத உணர்வு' கவிஞர் யுகபாரதியின் பார்வையில் பட்டிருப்பது என்னை ஆச்சரியப்பட வைத்தது. கே.என்.சிவராமனின் "தெரிஞ்ச சினிமா, தெரியாத விஷயம்' இன்றைய சினிமா பத்திரிகையாளர்களுக்கேகூடத் தெரியுமா என்பது சந்தேகம்தான். சினிமா குறித்து மேலோட்டமாகத் தெரிந்து வைத்திருக்காமல், தான் சார்ந்த துறை குறித்த ஆழமான புரிதலுடன் இருக்கும் கவிஞர் யுகபாரதியின் அர்ப்பணிப்பு உணர்வும், ஈடுபாடும் அவரது உயரத்தை அரை அடி கூட்டுகிறது.
எத்தனை எத்தனையோ திரையிசைப் பாடல்கள், அவை உருவான வரலாறு, பின்னணிச் செய்திகள் என்று தன் பாட்டுக்குக் கவிஞர் யுகபாரதியின் "பின்பாட்டு' நகர, அதன் பின்னால் நாமும்  நகர்கிறோம். "தொடர்ந்து வாசித்து வந்ததன் பயனை, இந்நூலில் ஒவ்வொரு வரியிலும் உங்களுக்குக் காட்டியதில் பெருமையடைகிறேன்' என்கிற கவிஞர் யுகபாரதியின் கூற்று, சம்பிரதாயப் பதிவு அல்ல, உண்மை.

தோழர் ஜீவா பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் சந்தித்தபோது, கவிஞர் இசாக் தனது "மணல் உரையாடல்' கவிதைத் தொகுப்பைத் தந்தார். கவிதை உலகுக்கு இசாக் புதியவரல்லர். பல கவிதைத் தொகுப்புகளை ஏற்கெனவே வெளிக்கொணர்ந்திருக்கிறார். பல்வேறு இதழ்களில் இவருடைய கவிதைகள் வெளியாகியிருக்கின்றன. குறும்பட,  ஆவணப்பட  உலகில் வலம் வருபவர்.
"மணல் உரையாடல்' தொகுப்பிலிருந்து பதிவு செய்ய அரை டஜன் கவிதைகளைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தேன். அவற்றில், ஆணாதிக்கத்தைப் பதிவு செய்யும் இந்தக் கவிதைக்குத்தான் முன்னுரிமை கொடுக்கத் தோன்றுகிறது.

எங்கே போனாய்
எப்போது வந்தாய்
என்ன செய்தாய்
அடுக்கடுக்கான
வினாக்களுக்கு 
விடை கேட்கிறேன்...
என்னைப் பற்றி
நீ எதுவும் 
கேட்கக் கூடாதென்ற
கட்டளையோடு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com