இந்த வாரம் கலா கலாரசிகன் - 28-01-2024

கரோனா நோய்த் தொற்றால் தேசமே முடங்கிக் கிடக்கும்போது விசுவின் மரணம் நிகழ்ந்தது வேதனையாக இருக்கிறது. சாதாரண காலமாக இருந்திருந்தால், அத்தனை காட்சி ஊடகங்களும் ஒருவார காலத்திற்கு விசுவின்
இந்த வாரம் கலா கலாரசிகன் - 28-01-2024
Updated on
3 min read

நடிகர், கதாசிரியர், இயக்குநர் விசுவிடம் எனக்கு நெருங்கிய தொடர்போ, நட்போ இருந்ததில்லை. ஆனால், அவரை வியந்து, அண்ணாந்து பார்த்த பலரில் நானும் ஒருவன். அவரது நாடகங்களையும் சரி, திரைப்படங்களையும் சரி விசுவுக்காகவே பார்த்தவர்கள்தான் பலரும். அவர்களில் நானும் ஒருவன்.

கரோனா நோய்த் தொற்றால் தேசமே முடங்கிக் கிடக்கும்போது விசுவின் மரணம் நிகழ்ந்தது வேதனையாக இருக்கிறது. சாதாரண காலமாக இருந்திருந்தால், அத்தனை காட்சி ஊடகங்களும் ஒருவார காலத்திற்கு விசுவின் அருமை பெருமைகளை எல்லாம் பதிவு செய்திருக்கும். 

"அரட்டை அரங்கம்' மூலம் ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் மனம் திறந்து பேசவைத்த விசுவுக்குத் தமிழகம் மெüன அஞ்சலி செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது வருத்தமாகத்தான் இருக்கிறது. அவரைப் பற்றிப் பேசவும், எழுதவும் நிறையவே இருக்கின்றன. அவரது சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். 

பெரும்பாலான நடிகர்கள் அரிதாரம் பூசிக்கொள்ளும் போதே கூடவே போலித்தனத்தையும் பூசிக்கொண்டு விடுவார்கள். போலித்தனத்தை அண்டவிடாத நடிகர்களில்  விசுவும் ஒருவர். ஒருவரால் வெளிப்படையாகப் பேசிக்கொண்டு,  நேர்மையாக  நடந்துகொண்டு வாழ்க்கையில்  வெற்றியும் பெற முடியும் என்பதற்கு என்னை அடையாளம் காட்டச் சொன்னால்,  சட்டென நினைவுக்கு வருபவர் விசு. மனதில் பட்டதை முகதாட்சண்யம் பார்க்காமல் அவரால் சொல்ல முடியும். கேட்பவர்களும் ஒப்புக் கொள்வார்கள். அதுதான் விசுவின் தனித்துவம்.

பல ஆண்டுகளுக்கு முன்னால், கேரள மாநிலம் சாலக்குடிக்கு அருகில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் வெளிப்புறப் படப்பிடிப்பின்போது, அந்த வழியாகப் பயணித்துக் கொண்டிருந்த நான் விசுவை சந்தித்ததும், பேசியதும் மறக்க முடியாத அனுபவம். அதற்குக் காரணம் நான் அவரிடம் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் தந்த பதிலும்.

""உங்களது திரைப்படங்கள் நாடகபாணியில் இருப்பதாகக் கூறுகிறார்களே?''

""நான் இந்த விவாதத்துக்கு வர விரும்பவில்லை. அதே நேரத்தில், சினிமா என்பது அழகழகான காட்சிகளைப் படம் பிடித்துக் காட்டுவதோ, உணர்ச்சிகளை வெளிப்படுத்தவோ மட்டுமேயல்ல. உரையாடல்களே இல்லாத, கதையே இல்லாத ஒன்று சினிமாவாக இருக்க முடியாது. மக்கள் பார்த்து ரசிக்க வேண்டும், அந்த ரசனைக்கு நடுவில் அவர்களுக்கு ஆக்கபூர்வமாக ஏதாவது செய்தியைத் தரவேண்டும். இதுதான் எனக்குத் தெரிந்த சினிமா. விரசமும் ஆபாசமும்  இல்லாமல் அன்றாட வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு சமுதாயத்துக்கு நல்ல கருத்தைச் சொல்ல நினைக்கிறேன். அதற்கு மேல் எதுவும் கேட்காதீர்கள்!''

அபாரமான நகைச்சுவை  உணர்வு, அசாத்திய தன்னம்பிக்கை, அபரிமிதமான சமூக அக்கறை மூன்றும் கலந்த கலவைதான் விசு. 

விசுவிடம் நெருங்கிப் பழகவில்லை என்கிற ஆதங்கம் எனக்கு எப்போதுமே உண்டு. இப்போது அது நிரந்தரமாகிவிட்டது!

                                                                                *****

பல்வேறு இதழ்களில் சாந்தகுமாரி சிவகடாட்சம் எழுதிய கட்டுரைகளையும், தொடர்களையும் படித்திருக்கிறேன்.  அவர் "தினமணி' இணைப்புகளில் எழுத வேண்டும் என்கிற அவா எனக்கு நீண்ட நாள்களாகவே இருந்து வந்தது. அவரை சந்திக்கவோ, தொடர்பு கொள்ளவோ வாய்ப்பு அமையவில்லை. அப்படியொரு வாய்ப்பு அமைந்தபோது, நான் அவரிடம் கேட்ட முதல் கேள்வியே இதுதான்- ""நீங்கள் ஏன் "தினமணி' இதழுக்கு எழுதுவதில்லை?'

என்னிடமிருந்து அப்படியொரு கேள்வியை முதல் சந்திப்பிலேயே அவர் எதிர்பார்க்கவில்லை என்பதை அவரது முகபாவம் காட்டியது. அடுத்த சில நாள்களிலேயே அறிவிப்பை வெளியிட்டு, சில வாரங்களில் "தினமணி'யின் ஞாயிற்றுக்கிழமை "கொண்டாட்டம்' இணைப்பில் "சிந்தை கவர்ந்த திருவிழாக்கள்' தொடர் வெளிவரத் தொடங்கியது.

ஆமதாபாதின் காத்தாடித் திருவிழாவில் தொடங்கிய அவரது திருவிழாப் பயணம் அடுத்த 81 வாரங்கள் தொடர்ந்தது. அது வெறும் திருவிழாப் பயணமாக இல்லாமல், உலகத்தையே சுற்றிவந்த பெருவிழாப் பயணமாகவே மாறிவிட்டது. ""எப்போது நிறுத்துவது?'' என்று அவர் கேட்ட போதெல்லாம், அதற்கு நான் சொன்ன பதில் - ""அத்தனை திருவிழாக்களையும் நீங்கள் பார்த்து, ரசித்து  முடிக்கும்போது...!''

"ஒருவருக்காக மற்றவர் பிறந்திருக்கிறார்' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதன் இந்நாள் எடுத்துக்காட்டு சிவகடாட்சம் தம்பதியினர். தனது பணிச்சுமைக்கு இடையிலும் மனைவியுடன் உலகின் பல்வேறு திருவிழாக்களுக்கு மருத்துவர் சிவகடாட்சம் சென்றுவர முடிந்திருக்கிறது என்பது மட்டுமல்ல, இந்தத் தொடருக்காக எடுக்கப்பட்ட அத்தனை புகைப்படங்களும் அவரால்தான் எடுக்கப்பட்டிருக்கின்றன.

இதுவரை சாந்தகுமாரி சிவகடாட்சம் மூன்று பயணக் கட்டுரை நூல்களும், மூன்று சிறுகதைத் தொகுப்புகளும் எழுதியிருக்கிறார். 

அத்துடன் நின்றுவிடவில்லை. மூன்று புதினங்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, வாழ்க்கை வரலாறு நூல் என்று இவரது எழுத்துப் பட்டியல் நீள்கிறது. இவர் எழுதிய "டாக்டர் ரங்கபாஷ்யத்தின் சரிதம்' என்கிற வாழ்க்கை வரலாற்று நூலைப் பாராட்டாதவர்களே கிடையாது.

சாந்தகுமாரி சிவகடாட்சம் எழுதிய "சிந்தை கவர்ந்த திருவிழாக்கள்' இப்போது புத்தக வடிவம் பெற்றிருக்கிறது. இது ஆங்கிலத்தில் மட்டுமல்ல, அனைத்து இந்திய மொழிகளிலும் வெளிவர வேண்டிய புத்தகம். 

                                                                          *****

"சாவி' வார இதழில் நான் உதவி ஆசிரியராக இருந்தபோது, கவிஞர் ராசி. அழகப்பன் "தாய்' வார இதழில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது தொடங்கிய தொடர்பு எங்களுடையது.  "இளைஞர் மணி' இணைப்பின் வடிவமைப்பு முடிந்த பிறகு எனது சம்பிரதாய ஒப்புதலுக்கு எடுத்துவந்தார் புதிய ஜீவா. அதில் இடம்பெறும் "இணைய வெளியினிலே...' பகுதியில் கவிஞர் ராசி.அழகப்பன் முகநூலில் பதிவிட்டிருந்த கவிதை இடம்பெற்றிருந்தது. 

கரோனா நோய்த்தொற்றுக்காக ஒட்டுமொத்த உலகமே "தனிமைப்படுத்தல்' என்பதை அனுபவிக்கும் நேரத்தில், அந்தக் கவிதை சூழ்நிலைக்குப் பொருத்தமாக இருந்தது. "இணைய வெளியினிலே...' பகுதியில் இடம்பெற இருந்த அந்தக் கவிதை இப்போது இந்த வாரக் கவிதையாக உங்களுக்கு...
இத்தனை நாள் எப்படி இருந்தது
அந்த ஒற்றைப் பனைமரம்.
எவருடனாவது பேசியிருக்குமோ?
அச்சப்பட்டிருக்குமோ?
இதயம் கனத்திருக்குமோ?
பறவைகள் வந்தமரும் பொழுதை
நினைத்திருக்குமோ?
இருட்டோ, வெளிச்சமோ
தனித்திருத்தல் வாழ்வானதோ?
நாமே விரும்பிய தனிமைக்கும்
தனித்திருத்தலின் கடமைக்கும்
எத்தனை வித்தியாசம்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com