
உயிர்க்கொல்லி, ஈருகொல்லி, பயங்கொள்ளி, பூச்சிக்கொல்லி (மருந்து) ஆட்கொல்லி எனப் பேச்சு வழக்கிலும் "சேர்ந்தாரைக் கொல்லி' (குறள்.306) என்று இலக்கிய வழக்கிலுமுள்ள சில தொடர்களை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால், கல்வெட்டுகளிலும், வைணவ உரைகளிலும் இடம்பெறும், "ஈரங்கொல்லி' என்பது யாரைக் குறிக்கிறது?
"இவனுக்காகக் கம்சனுடைய ஈரங்கொல்லி நம் திறத்தில் செய்த குற்றம் பொறுத்தோம்' என்று திருவரங்கத்து இறைவன், ஸ்ரீஇராமாநுஜரிடம் கூறியதாகத் திருவாய்மொழி ஈட்டுரையில் (5}10}6) ஒரு குறிப்பு காணப்படுகிறது. வைணவ நூல்களின் வழி அறியப்பெறும் இதன் விளக்கம் வருமாறு:
ஒரு நாள் துணிவெளுக்கும் சலவைத் தொழிலாளி ஒருவன் திருவரங்கம் பெரிய கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனுடைய (அழகிய மணவாளன்) ஆடைகளை (திருப்பரியட்டங்கள்) மிக நன்றாகத் துவைத்து வெளுத்துக் கொண்டு வந்து எம்பெருமானாரிடம் (இராமாநுஜரிடம்) காட்டினான். அவ்வாடைகளைக் கண்ட எம்பெருமானார் மிகவும் மகிழ்ச்சி கொண்டார்.
அவனது கையைப் பற்றியழைத்துக்கொண்டு அரங்கன் சந்நிதி நோக்கிச் சென்றார். இறைவன் திருமுன்னே அவனை நிறுத்தினார். இறைவன் திருமுகம் நோக்கி, "இவன் தேவரீருடைய ஆடைகளைத் திருவரைக்குத் தக்கபடி மிக அழகாக வெளுத்துக்கொண்டு வந்திருப்பதைக் கண்டருளல் வேண்டும்' என்று அவற்றை அழகிய மணவாளனுக்குக் காட்டினார்.
இறைவனும் மிக மகிழ்ந்தவனாய் உடையவருக்கு அருள்புரிந்து, "இவ்வண்ணானுக்காக முன்பு கம்சனுடைய "ஈரங்கொல்லி' (வண்ணான்) நம்மிடத்தில் செய்த குற்றத்தைப் பொறுத்தோம்' என்று அருளிச் செய்தானாம். இங்ஙனம் ஆடைகளைத் திருத்தமுற வெளுத்துக்கொண்டு வந்த திருக்கோயில் பணியாளர்களுள் ஒருவனான ஈரங்கொல்லியை, "ஸ்ரீவைஷ்ணவ வண்ணாத்தான்' என்று மதிப்புடன் மற்றோரிடத்தில் குறிக்கிறது (4-3-5) ஈட்டுரை.
"ஈரங்கொல்லி' என்பது தமிழ்க் கல்வெட்டுகளிலும் இடம்பெற்றுள்ளது. அதற்கு, "வண்ணான்' என்று பொருள் கூறும் கல்வெட்டுச் சொல்லகராதி, பின்வரும் கல்வெட்டுப் பகுதியைச் சான்று காட்டுகிறது.
"திருமெழுக்குப்புறம் நிலமிரண்டு மா ஈரங்கொல்லிக்கு' என்பது அக்கல்வெட்டுக் குறிப்பாகும். (தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி முதல் தொகுதி, சாந்திசாதனா வெளியீடு, ப.83,84). மேலும், இதுவே "ஈரங்கொள்ளி' எனவும் கல்வெட்டுகளில் பதிவு பெற்றிருக்கிறது.
"ஈரங்கொள்ளி' எனத் தஞ்சைக் கல்வெட்டில் வண்ணாத்தார்கள் குறிக்கப்பட்டிருப்பதாகக் குடவாயில் பாலசுப்பிரமணியனும் (காண்க:
தஞ்சாவூர் கி.பி.600}850, ப.115) கூறுகிறார்.
ஈரங்கொல்லி (அ) ஈரங்கொள்ளி என்பதற்கு வண்ணான்}வண்ணாத்தார்கள் என்று பொருள் கூறப்பட்டுள்ளதேயன்றி அப்பெயர்க்காரணம் எங்கும் விளக்கப் பெற்றதாகத் தெரியவில்லை.
அழுக்குத் துணிகளை உவர் மண்ணோடு சேர்த்து நீரில் ஊறவைத்துத் துவைத்து, ஈரம் போகுமாறு (ஈரங்கொன்று) காயவைத்துக் கொடுத்ததன் காரணமாக, "ஈரங்கொல்லி' என்னும் பெயர் தோன்றியிருக்கலாம். "ஈரம் உலர்த்திய' என்னும் பொருளில் பாடப்பட்டுள்ள, "ஈரங்கொன்றபின்.... நிழல் உமிழுங்குஞ்சியை' எனவரும் சீவகசிந்தாமணித் தொடராலும் (2422) இதனை உறுதி செய்யலாம். எனினும், இப்பெயரின் அடியாக நாட்டார் வழக்கில் சிற்சில மாறுபாட்டுடன் கதைகள் வழங்குவதாகத் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார் (தமிழகத்தில் புரத வண்ணார்கள், அலைகள் வெளியீட்டகம், பக்.126-127) ஆய்வாளர் த.தனஞ்செயன்.
இடைக்கால சோழராட்சிக் காலத்தில் (கி.பி.9ஆம் நூற். முதல் 16வரை) மிகுதியும் வழக்கிலிருந்த ஈரங்கொல்லி என்னும் இப்பெயர் அக்காலத்தவர்களால் எளிதில் புரிந்து கொள்ளப்பட்டிருக்கும். அப்புரிதல் இருந்ததனால்தான் மக்களிடம் வழங்கிய இப்பெயர் வைணவ உரைகளிலும், கல்வெட்டுகளிலும் இடம்பெற்றது. நிகண்டுகளும் இப்பெயர் வழக்கினை ஏற்றுப் பதிவு செய்துள்ளன.
"காலியர் ஈரங் கொல்லியர் வண்ணார்' (5:76) என்பது பிங்கல நிகண்டு. "ஈரங்கொல்லி' என்பதைச் சிறிது மாற்றி, "ஈரம் கோலியர்' (2:45) என வழங்குகிறது திவாகர நிகண்டு.
இங்கு மற்றொரு செய்தியையும் ஒப்பிட்டு நோக்கலாம். "ஒலிக்கும் ஈரங்கொல்லிக்கும்' என்னும் கல்வெட்டுத் தொடரில் வரும் "ஒலிக்கும்' என்பதற்கு, "துணிவெளுக்கும்' என்று பொருள் தருகிறது முற்குறித்த கல்வெட்டுச் சொல்லகராதி (ப.129). சேக்கிழாரின் பெரிய புராணத்திலும் (திருக்குறிப்புத் தொண்டநாயனார் புராணம் (ப.1201-1203,1206) "ஒலிக்கும்' என்னும் சொல் அடுத்தடுத்த பாடல்களில் துணி வெளுப்பதைக் குறிக்கும் வகையில் பல முறையும் ஆளப்பட்டுள்ளது. இவ்வாறே "வாட்டி' எனும் சொல்லும் இடைக்காலப் பேச்சுவழக்கில் துணிவெளுப்
பதைக் குறித்திருக்கிறது.
"திருப்பரி சட்டம் வாட்டும் வண்ணாத்தான்' (சி.கோவிந்தராசன், கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி, ப.251). "திருப்பரிவட்டங்களை அழகியதாக வாட்டிக் கொண்டு வந்து' (ஈட்டுரை 4-3-5) என வருவன இதற்குச் சான்று. வெள்ளாவி வைத்துத் துவைப்பதன் காரணமாக இச்சொல்வழக்கு தோன்றியிருக்கலாம். இப்போது இவை வழக்கில் இல்லை. ஈரங்கொல்லி என்பதும் காலவோட்டத்தில் வழக்கிழந்து மறைந்துவிட்டது. எனினும் கல்வெட்டுகளில் இடம்பெற்றதன் மூலம் கடந்த காலவரலாற்றைச் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.