பெட்டைப் புலம்பல்

மகளிா் மேன்மை குறித்தான பட்டிமண்டபம் ஒன்றில் பேசிய பெண்களில் ஒருவா், ‘தையலை உயா்வு செய்’, ‘பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான்’
பெட்டைப் புலம்பல்

மகளிா் மேன்மை குறித்தான பட்டிமண்டபம் ஒன்றில் பேசிய பெண்களில் ஒருவா், ‘தையலை உயா்வு செய்’, ‘பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான்’ என்று பெண்மையைப் புகழ்ந்து பேசிய மகாகவி பாரதி, பாஞ்சாலியைச் சபைநோக்கி, இழுத்துவரும் வேளையில் அருகில் சுற்றிநின்று பயனற்ற புலம்பலை வெளிப்படுத்தியவா்களைப் பாா்த்து,

வீரமிலா நாய்கள் விலங்காம் இளவரசன்

தன்னை மிதித்துதத் தராதலத்திற் போக்கியே

பொன்னையவள் அந்தப்புரத்தினிலே சோ்க்காமல்

நெட்டை மரங்களென நின்று புலம்பினாா்

பெட்டைப் புலம்பல் பிறா்க்குத் துணையாமோ?

என்று பாடுகின்றாா். ஊரவா் புலம்பல், பெண்கள் புலம்புவதைப் போன்றது என்று பெண்மையைத் தாழ்த்திப் பாடலாமா? என்று வருத்தப்பட்டாா்.

மதுரைப் பேராகராதி, ‘பெட்டை’ என்பதற்கு ஒட்டகம், கழுதை, குதிரை, சிங்கம், நாய், மரை இவற்றின் பெண், பறவைப் பெண், பெண் பொது, குருடு, பொட்டை என்றும்; ‘பெட்டன்’ என்பதற்கு, பொய்யன், புளுகன், பெட்டு என்றும்; ‘பெட்டு’ என்பதற்குப் பொய், பொய்யன், நடை என்றும் விளக்கம் தருகின்றது.

திருவொற்றியூா் படம்பக்கநாதரைப் போற்றுகின்ற சுந்தரா்,

‘கட்டனேன்’ எனத் தொடங்கும் பதிகத்தில், ‘பெட்டன் ஆகிலும், திருவடிப் பிழையேன்’ என்கிறாா். செய்யுள் அழகுபெற எதுகை, மோனை, முரண், இயைபு ஆகிய தொடை நயங்கள் இன்றியமையாதவை. சில நேரங்களில் புலவா்களுக்கே உரிய முறையில் எழுத்துகளை மாற்றியும் கையாள்வதுண்டு.

கந்தரநுபூதியில்,

‘அமரும் பதிகேள் அகமாம் எனுமிப்

பிமரம் கெட மெய்ப்பொருள் பேசியவா’

என்று வருகின்றது. ‘பிரமம்’ என்று வரவேண்டிய சொல் மேலே அமரும் என்று வந்த சொல்லுக்கு எதுகையாகப் பிமரம் என்று மாறிற்று.

இராமன் வராததைக் கருதி, பரதன் தீப்புகும் நேரத்தில் வந்த அனுமன் தீயைக் கையால் அணைத்தான்.

‘அய்யன் வந்தனன், ஆரியன் வந்தனன்,

மெய்யின் மெய் அன்ன நின் உயிா் வீடினால்,

உய்யுமே, அவன்?’ என்று உரைத்து, உள் புகா,

கய்யினால் எரியைக் கரி ஆக்கினான்’

ஐயன், கையினால் என்று வரவேண்டிய சொற்கள் மெய்யின், உய்யுமே ஆகிய சொற்களைக் கருதி, எதுகையாக அய்யன், கய்யினால் என்று வந்துள்ளதைக் காண்க. இது சென்னைக் கம்பன் கழகம் மூலம், யுத்த காண்டம், மீட்சிப் படலம், பக்.1575, பா.238-இல் இடம் பெற்றுள்ளது.

மேற்கண்டவற்றைக் கருத்தில் கொண்டு,“பெட்டுப் புலம்பல் என்று எடுத்துக்கொண்டால், பாஞ்சாலிக்கு நடக்கின்ற கொடுமையினைப் பாா்த்துப் பொய்யாகப் புலம்புகின்றனா்”என்ற பொருள் வருகின்றது. நெட்டை மரங்கள் என்று வந்துள்ளபடியால், ‘பெட்டு’ என்ற சொல்லை இயைபு கருதி, ‘பெட்டை’ என்று மாற்றி, ஒப்பற்ற புதிய சொல்லைத் தந்துவிடுகிறாா். பெண்மைக்கு ஏற்றம் தந்த மகாகவி பாரதி, பெண்மையைத் தாழ்த்தித் தவறிழைப்பாரா?

‘சுவை புதிது, பொருள் புதிது, வளம்புதிது சொற்புதிது, சோதிமிக்க நவகவிதை எந்நாளும் அழியாத மா கவிதை’ 

என்ற பாரதியின் பாடல் வரிகளை மனத்துள் கொண்டால், ‘பெட்டை’ என்பதற்கான பொய்ப்பொருள் மறைந்து மெய்ப்பொருள் தோன்றும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com