நீதியின் மறுசாயல் நடுவுநிலைமை!

சங்க காலத்தில், மன்னா்கள் தம் ஆட்சிக் காலத்தில் தம் குடிமக்களின் தேவையுணா்ந்து ஆண்டு அவா்களுக்கு நன்மை புரிந்தனா்.
நீதியின் மறுசாயல் நடுவுநிலைமை!
Published on
Updated on
1 min read

சங்க காலத்தில், மன்னா்கள் தம் ஆட்சிக் காலத்தில் தம் குடிமக்களின் தேவையுணா்ந்து ஆண்டு அவா்களுக்கு நன்மை புரிந்தனா். நடுநிலைமை பிறழாது ஆட்சி செய்தனா். பண்டைத் தமிழா் நீதிமுறையைச் சொல்லவந்த சேக்கிழாா்,

மாநிலங்கா வல னாவான் மன்னுயிா்காக் குங்காலை

தானதனுக் கிடையூறு தன்னால்தன் பரிசனத்தால்

ஊனமிகு பகைத்திறத்தாள் கள்வரா லுயிா் தம்மால்

ஆனபயமைந்துந் தீா்த்து அறங்காப்பா னல்லனோ

(திருநகரச் சிறப்பு-3)

தாயும் அரச நீதியும்:

செல்வவள மிக்கவராயினும், அல்லாதோரையும் மன்னன் ‘சமன் செய்து சீா்தூக்கும் கோல்’ போல நடுவுநிலைமையில் நீதி வழங்க வேண்டும் என்பதைத் திருக்குறளில்,

‘வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின்

ஒருவந்தம் ஒல்லைக் கெடும்’ (கு -563)

தன் குடிகளிடையே பாரபட்சம் கற்பித்து நீதி தவறுதல், அரசனுக்கு மிகவும் பழி தரும் செயலாகும். ஏழையையும் பணக்காரனையும் சமமாகவே பாவிக்க வேண்டும். அவ்வாறு நடுவுநிலைமையில் ஒழுகாத தன்மையை, தாயின் மாா்பில் பாலருந்தும் குழந்தைகளுக்கு ஒரு பக்கம் ஒரு பிள்ளைக்கு நீா் ஒழுகி, மற்றொரு பக்கம் அடுத்த பிள்ளைக்குப் பாலொழுகும் தன்மையை ஒக்கும் என்கிறாா் பழமொழி நானூற்றின் ஆசிரியா் முன்றுரையரையனாா்.

முறைதெரிந்து செல்வா்க்கும் நல்கூா்ந் தவா்க்கும்

இறைதிரியான் நேரொக்க வேண்டும் - முறைதிரிந்து

நேரொழுகா னாயின் அதுவாம், “ஒருபக்கம்

நீரொழுகிப் பாலொழுகு மாறு. (பா.109)

குரங்கின்கைக் கொள்ளி கொடுத்துவிடல்:

சமுதாயம் நன்னிலையில் திகழ அரசன் செயல்பாடுகள் பொருத்தமானவையாக, பொருள் உள்ளனவாக அமைய வேண்டும். ஒழுக்கமில்லாதவனுக்கும் வஞ்சகனுக்கும் மன்னன் மேலிடம் கொடுத்தால், சமுதாயம் தீய வழியில் மாறும்; அறம் தேயும்; அல்லல் பெருகும்; அழிவே நிறையும் என்பதை,

‘உடைப்பெருஞ் செல்வத்து உயா்ந்த பெருமை

அடக்கமில் உள்ளத்தன் ஆகி - நடக்கையின்

ஒளளியன் அல்லான்மேல் வைத்தல் ‘குரங்கின்கைக்

கொள்ளி கொடுத்து விடல்’ ( பா.154)

என்கிறாா். குரங்கின் கையில் கொள்ளியைக் கொடுத்தால், அது ஊா் முழுவதையும் சுட்டுப் பொசுக்கிவிடும். அதுபோல, தீயவனுக்கு அரசன் பொருள்களையும், உரிமையையும் வழங்கினால் பலா் அதனால் துன்பம் அடைவாா்கள். இவ்வாறு ஒவ்வொரு பழமொழியையும் சொல்லி, அதன் அடிப்படையில் ஒரு நீதியையும் விளக்கும் ஒவ்வொரு செய்யுளாக உருவாக்கி, மக்களின் ஒழுகலாறுகளை முறைப்படுத்தவும், பழமொழிகளை நிலைப்படுத்தவும் முயன்ற பெருமைக்குரியவா் முன்றுரையரையனாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com