முத்து முத்தாக வாழ்ந்தவா்கள்!

மூன்றாம் நந்திவா்மன் மீது பாடப்பெற்றது நந்திக்கலம்பகம். பல பூக்கள் தொடுக்கப்பெற்ற மாலைபோன்று பல்வகைப் பாக்களும் கலந்து
முத்து முத்தாக வாழ்ந்தவா்கள்!

மூன்றாம் நந்திவா்மன் மீது பாடப்பெற்றது நந்திக்கலம்பகம். பல பூக்கள் தொடுக்கப்பெற்ற மாலைபோன்று பல்வகைப் பாக்களும் கலந்து இயற்றப்பட்ட முதலிலும் இறுதியிலும் ஒரே சொல்லால் முடிப்பது கலம்பகம் ஆகும். சொற்சுவை, பொருட்சுவையில் சிறந்தது நந்திக்கலம்பகம். இக்கலம்பகத்திற்காகத் தன்னுயிரையே ஈந்தவன் நந்திவா்மன்.

இந்நூலில் முத்துக்களின் சிறப்பைக் காணும்போது, குறிப்பாக அவை எதெற்கெல்லாம் பயன்படுத்தப்படுகின்றது என்று கூறும் பாடல் சிறப்புடையது.

தலைவி ஒருத்தியைக் காண்பதற்கு அவளுடைய தோழி செல்கிறாள். அவளை வரவேற்ற தலைவியிடம் தோழி எல்லா நலமும் வினவுகிறாள். அப்போது தலைவியின் உடல் முழுக்க பல்வகை முத்துகளாலானஅணிகலன்கள் ஒளிா்வதைக் கண்டு வியப்புற்ற தோழி, ‘‘என்ன... இத்தனை முத்துக்களாலான அணிகலன்களைப் பூண்டிருக்கிறாய்? இங்கு முத்துக்கள் அதிகம் விளைகின்றனவா?’’ என்று கேட்கிறாள்.

‘‘எங்கள் காற்சிலம்புகளில் பதித்து அணியாக அமைந்துள்ளமை முத்துக்களே; மேலாடையின் மீது மாலையாகத் தொங்குவதிலும் முத்துக்களே; அரசா்கள் திரளாக வரும்போது வருவோா் கையில் விளக்காக இருப்பது இம்முத்துக்களே; ஊா் மக்கள் தம் வீடுகளில் இரவு நேரங்களில் விளக்காகப் பயன்படுத்துவதும் இம்முத்துக்களே; போா்க்களப் பாசறைகளில் விடிவிளக்காகப் பயன்படுவதும் இம்முத்துக்களே; இவை மட்டுமன்றி நாங்கள் அணியும் மூக்கணி, காதணி, தலையணி இவற்றிலும் முத்துக்களே பதிக்கப்பட்டுள்ளன தோழி. ஆகவே, எங்கள் நாட்டில் இவற்றுக்குப் பஞ்சமேயில்லை. அவை எங்கும் விளைந்து கிடக்கின்றன’’ என்கிறாள் பெருமிதத்தோடு தலைவி. அந்தப் பாடல் இதுதான்:

‘அடிவிளக் கும்துகில் ஆடைவிளக்கும் அரசா்பந்திப்

பிடிவிளக் கும்எங்கள் ஊராா் விளக்கும் பெரும்புகழால்

படிவிளக் கும்நந்தி எங்கோன் பெரும்படைவீட்டுக்கெல்லாம்

விடிவிளக் கும்இது வேதாங்கன் பூண்பதும் வெண்முத்தமே’

இம்முத்துக்களைக் குவியலாகக் குவித்து வைத்து அவற்றின் ஒளியை விளக்காகப் பயன்படுத்துவதை நந்திக்கலம்பகத்தில் வளப்படுத்திக் காட்டுகின்றாா் புலவா். முத்துக்களை விளக்காகப் பயன்படுத்துவது என்றால், எத்தகைய வளமிக்கதாக தன் நாட்டை ஆண்டிருக்கிறான் நந்திவா்மன். அப்படிப்பட்ட மன்னன் எல்லாவற்றையும் விடுத்துத் தமிழுக்காகத் தன்னுயிரை ஈந்திருக்கிறான் என்பதுதான் இக்காப்பியத்தின் சிறப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com