ஒன்றில் நான்கு

திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இளமையில் திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே அதவத்தூரில் வாழ்ந்தார். வறுமையும் புலமையும் பிரிக்க முடியாதவை என்பதற்கு ஏற்ப புலமைச் செல்வராய் விளங்கிய அவர்
ஒன்றில் நான்கு


திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இளமையில் திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே அதவத்தூரில் வாழ்ந்தார். வறுமையும் புலமையும் பிரிக்க முடியாதவை என்பதற்கு ஏற்ப புலமைச் செல்வராய் விளங்கிய அவர்,  இளமையிலேயே வறுமையில் வாடினாலும், தம் பத்தாம் அகவையிலேயே செய்யுள் இயற்றும் திறம் பெற்றிருந்தார். அவர் காலத்தில் வணிகர்களும் தமிழறிவு பெற்றிருந்தனர்.

கடைக்குச் சென்று பொருள் வாங்கச் சென்ற மீனாட்சி சுந்தரத்திடம் இருந்த கவிபாடும் திறனை மதித்த கடைக்காரர்கள் அவரிடம் பாடல் இயற்றச் சொல்லி, பாடல் ஒன்றுக்கு ஒரு பணம் அதாவது, இரண்டணா கொடுத்து மகிழ்ந்தனர்.    

ஓர் அன்பர் முருங்கைப்பேட்டை என்னும் ஊரிலுள்ள மிராசுதார் ஒருவரிடம் இவரை அழைத்துச் சென்று இவருடைய திறமையை அவருக்குச் சொன்னார். பக்கத்திலிருந்த ஒருவர் மீனாட்சி சுந்தரத்தை நோக்கி ஒரு பாட்டைக் கூறி, ""அப்பா, இப்பாட்டுக்கு அர்த்தஞ் சொல்'' என்றார்.

அவ்வாறே அதற்கு இவர் பொருள் சொன்ன பின் அவர், ""இப்பாட்டுக் கருத்தஞ் சொல்' என்பதையே ஈற்றடியாக வைத்து ஒரு வெண்பாப் பாடு'' என்றார். உடனே சிறுவன் மீனாட்சிசுந்தரம், ஒரே பாவில் நான்கு வகைப் பொருள் தரும் சிலேடை வெண்பா ஒன்றை இயற்றிப் பாடினார். 

அப்பாடலில் ஒவ்வோரடியிலும் பிரமன், திருமால், சிவன் ஆகியோரைக் குறிக்கும் தொடர்களை அமைத்துப் பாடியதோடல்லாமல், அப்பாடல் "நெல்'லையும் குறிக்கும்படிப் பாடினார். மிகவும் வியப்படைந்த அச்செல்வர்  அதனைப் பிரித்துப் பொருள் கூற வேண்டினார்.  
"ஒண்கமலம் வாழ்ந்தன்ன மாகி யுரலணைந்து
தண்கயநீர்த் தூங்கித் தகுமேறூர்ந் - தென்கதிரின்
மேயவிதத் தான்மூவ ராகும் விளம்பியதென்
தூயவிப்பாட் டுக்கருத்தஞ் சொல்' 

இப்பாடலின் ஒண்கமலம் வாழ்ந்து, அன்னமாகி  என்ற தொடர்கள் - தாமரை மலர்மேல் அமர்ந்தவர், சிவபிரானின் அடிமுடி தேடியபோது அன்னப் பறவையானவர் பிரமன் என்றும்;  

"உரலணைந்து, தண்கயநீர்த் தூங்கி' என்ற  தொடர்களில் பாற்கடலில் பாம்பணைமேல் கிடந்தவர்,  யசோதை இல்லத்தில் உரலில் கட்டுண்டு கிடந்தவர் திருமால்  என்றும்; "தகும் ஏறு ஊர்ந்து, தென் கதிரின் மேய' என்ற தொடர்களில் காளை மேல் ஏறி வந்தவர், தென்னகத்தில் கதிரவன்போல் ஒளிவீசி  விளங்கியவர் சிவபிரான் என்றும் பொருள் தருவதை விளக்கினார். 

அடுத்து இப்பாடலின் அடிதோறும், "ஒண்கமலம் வாழ்ந்து' - தாமரை சூழ்ந்த நிலத்தில் பயிராகி வளர்ந்து; 
"அன்னமாகி' - உண்ணும் சோறாகி;  
"உரலணைந்து' -  நெல்லைக் குற்றும்போது உரலில் கிடந்து; "தண்கயநீர்த் தூங்கி' -  வயலில் நீரில் கிடந்து; "தகும் ஏறூர்ந்து' - போரடித்த களத்தில் மாட்டின் காலடிக்கீழ்க் கிடந்தும், மாட்டு வண்டியில் ஏறியும்;  
"கதிரின்மேய' -  நெற்கதிர்களில் மேவி என்ற வகையிலெல்லாம் "நெல்' என்ற நான்காம் பொருளுடன் இருந்ததை விளக்கினார்! 

அவ்வணிகர் கேட்ட "இப்பாட்டுக் கருத்தஞ்சொல்' என்ற தொடருக்கு முன் "தூய' என்ற சொல்லைச் சேர்த்து, "தூயவிப்பாட் டுக்கருத்தஞ் சொல்! என்ற ஈற்றடியாக்கி,  வெண்பாவை  நிறைவு செய்தார். "சொல்' என்பதன் பொருள் "நெல்' ஆகும்! இப்பாட்டுக்கு அருத்தம் சொல்  - அதாவது, "இப்பாட்டுக்கு அருத்தம் "நெல்' என்று கூறினார்.  அதனைக் கேட்ட அந்த வணிகர் மிக மகிழ்ந்து, ஒரு வண்டி நிறைய சிறுவனார் மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு நெல் கொடுத்தனுப்பினார் என்பது வரலாறு.

இவ்வாறு ஒரு பாட்டில் நான்கு பொருள்களைச் சிலேடையாக அமைத்து, தம் பத்தாம் வயதிலேயே பாடிய கவிஞர் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களே ஆவார்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com