மாணிக்கவாசகர் காட்டும் அன்பு நெறி!

திருவள்ளுவப் பெருந்தகை அருளியுள்ள, "அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு / என்புதோல் போர்த்த உடம்பு' (80) என்ற குறளில் "உயிர்நிலை' என்ற பதம் ஆழ்ந்த பொருள் கொண்டது. உயிரின் ஆரம்பம்,
மாணிக்கவாசகர் காட்டும் அன்பு நெறி!
Updated on
2 min read

திருவள்ளுவப் பெருந்தகை அருளியுள்ள, "அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு / என்புதோல் போர்த்த உடம்பு' (80) என்ற குறளில் "உயிர்நிலை' என்ற பதம் ஆழ்ந்த பொருள் கொண்டது. உயிரின் ஆரம்பம், பயணம், முடிவு ஆகிய மூன்று நிலைகளுக்கும் முதன்மையான அடிப்படையே அன்புதான்.
 இந்த உண்மை உயிருள்ள சீவராசிகளுக்கு மட்டுமல்ல, சடப் பொருள்களுக்கும் பொருந்துவதாகும். இது எவ்வாறெனில், இந்தப் பேரண்டம் இயங்குவதற்கு அடிப்படையாக இருப்பதே ஒரு கவர்ச்சி சக்தியாகும் என்பது அறிவியல் உண்மை. நாம் எல்லோரும் அறியும் புவி ஈர்ப்பு சக்தி மட்டுமின்றி அண்டத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் ஒன்றையொன்று கவர்ந்து இழுக்கின்றது.
 இந்தக் கவர்ச்சி சக்திதான் பல்வேறு கிரகங்களையும், விண்மீன்களையும், பால்வழிகளையும் அதனதன் இடத்தில் தத்தம் கடமைகளை ஜதி தவறாமல் செய்ய வைக்கின்றது. இந்தக் கவர்ச்சி சக்தியை ஒழுங்கு தவறாமல் இருக்க வைக்கும் இன்னொரு மாபெரும் சக்தி அவற்றை இயக்கி அண்டத்தைக் காக்கிறது என்பது அறிவியல் மூலம் அறிந்த உண்மை. இந்த மாபெரும் சக்தியையே நாம் "இறைவன்' என்று அறிகிறோம்.
 நம் இருப்பிடமாகிய பூமியின் கவர்ச்சி சக்தியை புவி ஈர்ப்பு சக்தி என்று அறிகிறோம். இந்த ஈர்ப்பு சக்தி பூமியில் உள்ள அனைத்துப் பொருள்களையும் கவர்ந்து இழுத்துத் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறது. பூமியின் மேல் உள்ள பல உயிரினங்களில் கவர்ச்சி சக்தி எவ்வாறு ஜீவராசிகளைப் பரவசப்படுத்தி அன்பினால் இணைக்கின்றன என்பதைப் பார்ப்போம். ஆம்! உயிர்களுக்கிடையே ஒன்றுக்கொன்று கவர்ந்து இழுக்கும் இந்தக் காந்த சக்தியே "அன்பு'
 எனப்படுவது.
 அன்பும் இறைவன் மேல் கொண்ட பக்தியும்: படைப்புத் தொழிலே அன்பு மூலமாகவும் இன்பமான விளையாட்டாகவும் நடக்கின்றது என்பர் சான்றோர். ஆண், பெண் கவர்ச்சிக்குப் பின் ஓர் அன்புப் பிரவாகம் இருப்பதை நாம் அறியலாம். இந்த அன்புப் பிரவாகமே படைப்புக்கு வழி வகுக்கின்றது. வாழ்நாள் முழுவதும் அன்பின் வழி செல்லும் உயிர்கள் பேரின்ப நிலை எய்தி நற்கதி அடைகின்றன.
 உயிர்கள் பல்வேறு பொருள்கள், மற்ற உயிர்களிடத்தில் அன்பு வைத்தாலும் இறைவன் மேல் கொண்ட அன்பு தனித் திறம் வாய்ந்தது. இறைவனின் பிரம்மாண்ட சக்தியின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு, அவன் மேல் காட்டும் அன்பே பக்தியாகும்.
 குருவருள்: இந்தப் பக்தி நிலை அனைவருக்கும் கிட்டுவதில்லை. "அவன் அருளால் அவன் தாள் வணங்கி' என்ற மாணிக்கவாசகரின் வாக்கிற்கிணங்க அந்த மாபெரும் சக்தியை உணர்ந்து அதன் ஈர்ப்பு சக்திக்குள் வருபவர் அதன் சிறப்பை உணர முடியும். அவர்களே "குரு' என்ற உயர்நிலையை அடைந்து தாம் கண்ட பக்தி மார்க்கத்தை மற்றவர்களுக்கும் உணர்த்துகிறார்கள். அத்தகைய குருமார்களில் சைவக் குரவர் நால்வர் தனிப்பெரும் சிறப்புப் பெற்றவர்கள்.
 "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற முறையில் தாமடைந்த இறையனுபவத்தை மற்றவர்களும் பெற வேண்டி,
 தேனினுமினிய பாடல்களைத் தமிழ்கூறு நல்லுலகத்துக்கு அருளிச் சென்றுள்ளனர். அவர்களுள், இறைவனே தம் கைப்பட எழுதிக் கொண்ட சிறப்புப் பெற்ற பக்திப் பனுவலான மாணிக்கவாசகர் அருளிய திருவாசகப் பாடல்கள் சிலவற்றைக் குறிப்பிடலாம்.
 அன்பே சிவம்: திருவாசகத்தின் பொருள் அன்பே வடிவான சிவம். திருவாசகப் பாடல்கள் அன்புணர்ச்சி பெருக்கெடுத்தோடும் கவிதை அருள் வெள்ளம், அதைப் பாடியவர் அன்பே வடிவான அருளாளர் மாணிக்கவாசகர். அன்பைப் பற்றி அவர் எடுத்துக்கூறும் சில சொற்றொடர்கள் பின்வருமாறு:
 "அன்பெனும் ஆறு கரையது புரள...'; "நின்றன் வார்
 கழற்கு அன்பு எனக்கு நிரந்தரமாய் அருளாய்'; "வேண்டும் நின் கழற்கு அன்பு'; "இல்லை நின்கழற்கு அன்பது என்கணே'; "இடையறா அன்பு உனக்கு என் ஊடகத்தே நின்றுருகத் தந்தருள்'; "ஆடுகின்றிலை கூத்துடையான் கழற்கு அன்பு யிலை'; "கண்ணப்பன்
 ஒப்பதோர் அன்பின்மை'; "மெய்கலந்த அன்பர் அன்பு எனக்கு ஆகவேண்டுமே'
 இவ்வாறு எண்ணிறந்த பல இடங்களில் அன்பை எடுத்தாண்டு, "அன்பு' நெறியே பக்தி நெறி; அதுவே முக்திக்கு வித்து எனும் தத்துவத்தை எடுத்துரைக்கிறார். "அன்பினில் விளைந்த ஆரமுதே' (பி.ப.3) என்ற வரிகளின் மூலம் இறைவனை அன்பினில் உண்டாகிய அரிய அமுதம் என்று பாடுகிறார். "பால்நினைந் தூட்டும் தாயினும் சால' என்று தொடங்கும் பாடலின் மூலம் தாயினும் சிறந்த அன்பைக் கொண்டவன் - அன்பே வடிவானவன் சிவபெருமான் என்பதை நமக்கு உணர்த்துகிறார்.

 "அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்/ அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்' என்ற பாடலில் திருமூலர், அந்த அன்பை அறிந்தவர், உணர்ந்தவர் எவ்வாறு இருப்பர் என்பதையும் சொல்லியிருக்கிறார்.
 "அன்பே சிவம்' எனும் சைவ நெறியே திருவாசக நெறியுமாகும். இந்நெறியிலே சென்று... மார்கழி மாதத்துப் பாராயணத்துக்கென்றே மாணிக்கவாசகர் சிறப்பாக அருளிச் செய்துள்ள திருவெம்பாவை- திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களை மெய்யன்புடன் முப்பது நாள்களும் ஓதி இறைவனின் அருளுக்குப் பாத்திரமாவோம்!
 -பேராசிரியர் பீம. சத்திய நாராயணன்
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com