குறுந்தொகைப் பாடலும் நாவுக்கரசர் பனுவலும்!

 தமிழகத்தில் ஈராயிரம் ஆண்டுகளாக மக்கள் கண்டுகளித்த வீரவிளையாட்டுகளில் ஒன்றாக "வாரணப்போர்' எனப்பெறும் கோழிப்போர் திகழ்ந்துள்ளது.
குறுந்தொகைப் பாடலும் நாவுக்கரசர் பனுவலும்!

 தமிழகத்தில் ஈராயிரம் ஆண்டுகளாக மக்கள் கண்டுகளித்த வீரவிளையாட்டுகளில் ஒன்றாக "வாரணப்போர்' எனப்பெறும் கோழிப்போர் திகழ்ந்துள்ளது. தொள்ளாயிரத்து ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சயங்கொண்டார் தாம் யாத்த கலிங்கத்துப்பரணியில் குலோத்துங்க சோழன் கண்டு களித்த போர்களில் ஒன்றாக "இருசிறை வாரணப்போர்' பற்றி அழகு தமிழில் உரைத்துள்ளார்.
 இரண்டு சிறகுகளையுடைய சேவற்கோழிகள் மோதுகின்ற கோழிப்போர் பற்றிய குறிப்புகள் பெருங்கதை, சீவகசிந்தாமணி முதலிய நூல்களில் காணப்பெறுகின்றன.
 வீரமரணம் அடைந்த வீரமறவர்களுக்கு நடுகல் வைத்து, வழிபாடு செய்வதற்கு ஒப்பாக, கோழிப்போரில் கடும் சமரிட்டு வீரமரணம் எய்திய இரண்டு சேவல்களுக்கு கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் நடுகல் எடுத்து, அக்கல்லில் பீடும் பெயரும் எழுதி உருவமும் பொறித்து போற்றியுள்ளனர்.
 திண்டிவனம் அருகே உள்ள இந்தளூர், விழுப்புரம் அருகிலுள்ள அரசலாபுரம் எனும் ஊர்களில் கண்டறியப்பெற்ற சேவற்கோழிகளுக்குரிய நடுகல் ஒன்றில் "கீழைச்சேரிக்கோழி பொற்கொற்றி' என்ற வீரமரணம் அடைந்த சேவலின் பெயர் குறிக்கப் பெற்றுள்ளது. சங்ககாலச் சோழர் தலைநகரமான உறையூருக்கு "கோழி' என்ற பெயரே பண்டு நிலவியது.
 சேவற்கோழியொன்று யானையோடு சமரிட்டு வென்றது என்ற தொன்மத்தின் அடிப்படையில் இப்பெயர் வழக்கு நிலைபெற்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்ககால சோழர் காசு ஒன்றில் யானையும் சேவலும் மோதும் காட்சி காணப்பெறுகின்றது. உறையூர் சிவாலயத்தில் காணப்பெறும் சிற்பக்காட்சி ஒன்றில் சமர்புரியும் சேவல் யானையின் காதின்மேல் அமர்ந்து அதனைக் கொத்திக் கிழிப்பதாக அமைந்துள்ளது.
 கோழிச்சண்டையிடுவோர் தங்கள் சேவல்களை எதிரெதிரே நிறுத்தி மோதவிடுவர். இதனை "நேர்விடுதல்' என்பர். இரு சேவல்களும் மோதி உச்சம்பெறும் நிலையில், கோழி விடுவோர் இருவரும் தம்தம் சேவல்களை மோதலிலிருந்து பிரிப்பர். பின்பே போர் தொடரும். விதிகளுக்கு உட்பட்டே வெற்றி-தோல்வி உறுதிப்படுத்தப்பெறும். போரிடும் சேவல் இனங்களில் பலவுண்டு. நேர்விடுவார் கோழிகளைத் தக்க சமயத்தில் பிரித்துவிடாமல் இருந்தால் கோழிகளில் ஒன்று மாய்ந்துவிடும். நேர்விடுதலும், பிரித்து விடுதலும் கோழிப்போரின் இன்றியமையா கடமைகளாகும்.
 குறுந்தொகையின் 305-ஆவது பாடலைப் பாடியவர் "குப்பைக்கோழியார்' எனும் புலவர் ஆவார். அவர்தம் இயற்பெயர் அறிய இயலவில்லை என்றாலும், அவர் பாடலில் வரும் குப்பைக்கோழியின் சிறப்பால் அப்பெயரையே அவர் பெற்றார். குறுந்தொகைப் பாடலில் காமநோய் வயப்பட்ட தலைவி ஒருத்தியின் துயர நிலையைக் கூறவந்த புலவர், கோழிப்போரின்போது சண்டைக் கோழிகளை மோதவிடுவதற்காக விடுபவர்கள் அவற்றை உரிய நேரத்தில் மோதலில் இருந்து களையார் ஆயின் அது குப்பைமேட்டில் விடுதலும், பிரித்தலும் இல்லா நிலையில் சண்டையிட்டு துன்பப்படும் குப்பைக்கோழிகளின் நிலைக்கு ஒப்பாக இருந்தது என்று கூறியுள்ளார்.
 "உய்த்தனர் விடாஅர் பிரித்து இடை களையார்
 குப்பைக்கோழித் தனிப்போர் போல
 விளிவாங்கு விளியின் அல்லது
 களைவோர் இலையான் உற்றநோயே!'
 என்பது குப்பைக்கோழியாரின்
 கூற்றாகும்.
 திருவாமூரில் பிறந்த மருள்நீக்கியார் என்ற இளைஞர் ஒருவர் தன் தாய் - தந்தையரை இழந்து, தமக்கையார் திலகவதியாரையும் பிரிந்து பாடலிபுத்திரம் அடைந்து தமிழ் மறந்து பாலி, பிராகிருதம், மாகதி முதலிய மொழிகள்பால் வயப்பட்டு மந்திர, தந்திர நெறிகளில் மனம்கொண்டு அங்கிருந்தோர்க்கெல்லாம் தலைவராகிய "தருமசேனர்' ஆனார். பின்னர் சூலை நோய்க்கு ஆட்பட்டு தாளாத் துயரால் தமக்கையாரிடம் திரும்பி வந்து அவர் கருணையால் திருவதிகைப் பெருமானால் ஆட்கொள்ளப்பட்டு திருநாவுக்கரசரானார். பின்னர் அவர் பாடிய அருந்தமிழ் பதிகங்கள் பலவற்றில் தன் முந்தைய செயல்கள் பலவற்றை நினைந்து நினைந்து வருத்தமுற்று, படுகுழியில் வீழ்ந்து அல்லலுற்றேன் என அவர்தம் நிலையைப் பலபட பதிவு செய்தார்.
 அந்நிலையில், பல்லாண்டு மறந்திருந்த சங்கத்தமிழ் அவர் நினைவுக்கு வந்திருக்க வேண்டும். கடவூர் வீரட்டனார் முன்பு நின்று தன் நிலையினை குறுந்தொகையில் குப்பைக்கோழியார் பாடிய பாடலோடு ஒப்பிட்டு நினைந்தார்போலும். உடனே,
 தலக்கமே செய்து வாழ்ந்து தக்கவாறு ஒன்றும் இன்றி
 விலக்குவார் இலாமையாலே விளக்கத்திற் கோழிபோன்றேன்
 மலக்குவார் மனத்தினுள்ளே காலனார் தமர்கள் வந்து
 கலக்கநான் கலங்குகின்றேன் கடவூர் வீரட்டனீரே!
 என்று பாடி, "தான் விலக்குவார் இல்லாத கோழி பெற்ற நிலையினை அடைந்தேன்' என்று தன் அனுபவத்தைப் பதிவு செய்துள்ளார். இதுவல்லவோ செம்மொழியின் பட்டறிவு. தமிழ்நாட்டுக் கலைஞர்களின் ஒத்துழைப்புடன் கம்போடிய நாட்டில் எழுந்த அங்கோர்வாட், பயான் போன்ற ஆலயங்களில் உள்ள கோழிப்போர் சிற்பக் காட்சிகள் நம் உள்ளத்தை நெகிழ வைப்பவை. தமிழ் நூல்கள் கூறும் அக்காட்சிகளை இவை நம் கண்முன்னே நிறுத்துகின்றன.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com