தமிழிசை மரபைப்  புலப்படுத்தும் 'இயவர்' எனும் சொல்!

சங்க இலக்கியங்களில் வரும் இசை பற்றிய குறிப்புகள் பண்டைக் காலத்தில் இசைக்கலை செழுப்புற்றிருந்த நிலையைப் புலப்படுத்துகின்றன.
தமிழிசை மரபைப்  புலப்படுத்தும் 'இயவர்' எனும் சொல்!
Updated on
2 min read


சங்க இலக்கியங்களில் வரும் இசை பற்றிய குறிப்புகள் பண்டைக் காலத்தில் இசைக்கலை செழுப்புற்றிருந்த நிலையைப் புலப்படுத்துகின்றன. தோலிசைக் கருவிகளும் நரம்பிசைக் கருவிகளும் பண்டைக் காலத்தில் வழக்கில் இருந்தவை பற்றிய பல குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்
படுகின்றன.

இசையால் மலர்கள் மலரும் என்பது குறுந்தொகைப் பாடலால்  (குறுந். 260: 1-2)அறிய வருகின்றது. மதம் பிடித்து அலையும் யானை, பரிக்கோல், குத்துக்கோல் முதலிய ஆயுதங்களாலும் அடக்கமுடியாத நிலைவரும்போது யாழின் இசைக்கு அடங்கிவிடும் என்ற குறிப்பு,  கலித்தொகைப் பாடலில் (கலி. 1:26-7) காணப்படுகின்றது. 

குறிஞ்சி நிலத்தில் தினைக் கொல்லையைக் காக்கும் பெண் ஒருத்தி,  தெள்ளிய சுனையில் நீராடிப் பரணின் மேல்நின்று இனிய காற்றில் தன் கூந்தலை ஆற்றிக்கொண்டும் மிகுந்த களிப்புடன் அந்நிலத்துக்குரிய குறிஞ்சிப் பண்ணைப் பாடிக்கொண்டும் நிற்கையில், தினைக் கதிரை உண்பதற்காக அங்கே வந்த ஒரு யானை, அந்தப் பெண்ணின் இசையிலே மயங்கிக் கதிரை உண்ணாமல் தான் கொண்ட பெரும்பசியையும் மறந்து மயங்கி நின்றதாக ஒரு செய்தி அகநானூற்றுப் பாடலொன்றில் காணப்படுகின்றது. மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங்கூத்தன் பாடியுள்ள அப்பாட்டு,

"ஒலியல் வார்மயிர் உளரினள், கொடிச்சி
பெருவரை மருங்கிற் குறிஞ்சி பாடக்
குரலும் கொள்ளாது, நிலையினும் பெயராது
படாஅப் பைங்கண் பாடுபெற்று, ஒய்யென
மறம்புகல் மழ களிறு உறங்கும் நாடன்' 

(அகம். 102: 5 - 9)
என்று அமைந்திருக்கின்றது. இயற்கையாக மூங்கிலில் எழும் இனிய இசை பற்றிய குறிப்பை அகநானூற்றுப் பாடலில் வரும் அடிகள் (அகம். 82: 1-4) விளக்குகின்றன. 
"இயம்' என்ற சொல் "இசைக் கருவி' என்னும் பொருளைத் தரும் சொல்லாகும். அச்சொல் பல்லியம், வாச்சியம், வாத்தியம் எனும் சொற்களின் சுருக்கமாகச் சுட்டப்படுகின்றது  (தமிழிசைப் பேரகராதி). இதனால் இயங்களை இசைப்பவர் "இயவர்' என்று  சுட்டப்பட்டனர்.

குழல் ஊதும் ஒருவரை "இயவர்' என்று சுட்டும் வழக்கத்தை ஒரு நற்றிணைப்பாடல் புலப்படுத்துகிறது.  திருமணம்புரிந்த சில நாள்களுக்குள் ஆடவர் மேற்கொண்ட பிரிவு அவர் மனைவியின் உள்ளத்தில் பெரும் வருத்தத்தைத் தோற்றுவித்ததை உடனிருக்கும் பாகனிடம் அந்த ஆடவர் சொல்லுவதாகப் புனையப்பட்டுள்ள இளங்கீரனார் பாடலுள், "இம்மென் பெருங் களத்து இயவர் ஊதும்' (நற்.113: 9-12) எனும் குறிப்பு வருகின்றது. "உதியவன் சினந்து ஒலிக்கும் போர்க்களத்தில் இயவர் ஊதும் ஆம்பலங் குழலின் இசை போல மனைவி வாய்விட்டழுது துன்புற்றாள்' என்பது முழுப்பாடலின் பொருளாகும். போர்க்களத்தில் இசை வல்லார் இருந்து செயல்பட்டுள்ள குறிப்பை இதன்வழியாகப் பெறமுடிகிறது.  

ஐங்குறுநூற்றுப் பாடலொன்றில் குழல் ஊதும் "இயவர்' பற்றிய குறிபொன்று இவ்வாறு பயின்று வருகின்றது." தட்டைத் தண்ணுமைப் பின்னர் இயவர்' (ஐங்.215: 1-4) கட்டளைக் கல்போல கரிய நிறத்தைக்கொண்ட தும்பி தட்டை, தண்ணுமைகளின் பின்னர் இயவரின் இனிய குழலினது 
ஆம்பல் பண்ணைப் போல  இமிரும் (ஒலிக்கும்) என்று இப்பாடல் பொருள் தருகின்றது.
அரசவையில் இசைக் கருவிகளைக் கொண்டு அரசரை மகிழ்விக்கும் இசைக் கலைஞர்கள் "மன்னர் இயவர்' எனச் சுட்டப்பட்டுள்ளனர்.  

"மன்னர் இயவரின் இரங்கும் கானம் (ஐங். 425: 1-2). மதுரைக் காஞ்சியில் (மதுரை. 301 - 306) "இயவர்' பற்றிய குறிப்பொன்று இவ்வாறு வருகின்றது.
"மலைப்பக்கத்திலிருந்த மூங்கிற் புதர் தீப்பற்றி எரிந்தது. அப்பொழுது மகிழ்ச்சியால் இயவர் (வாச்சியக்காரர்) தம் வாச்சியத்தை வாசிப்பதுபோல மூங்கிலின் கணுக்கள் திறந்து, உடைந்து அழகு கெடும்' என்கிறது இந்தப் பாடலடிகள். இசை வல்லார் இயவர் எனப்பட்டனர் என்பது இதனாலும் தெரியவருகின்றது. பதிற்றுப்பத்திலுள்ள மூன்று பாடல்களில் இயவர் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. 

பகை நாட்டின் மீது படையெடுத்துச் செல்வதற்கு முன்னர், நீராட்டப்பெற்ற முரசை செந்தினைக் குருதியோடு கலந்து தூவி வழிபட்டு, பின்னர் குறுந்தடி கொண்டு "இயவர்' கையால் முழக்குவர் என்பதை பதிற்றுப்பத்து (பதி. 19: 6-8) வெளிப்படுத்துகிறது. 
"இயம்' எனும் சொல் இசைக் கருவியைக் குறிக்கின்றது. இதனால் இசைக் கருவி வாசிப்பவர் "இயவர்' எனப்பட்டனர். சங்க காலத்தில் குழல் வாசிப்பவராயினும், போர்ப் பறை முழக்குபவராயினும், முரசு கொட்டுபவராயினும் இசைப்பவர் எல்லோரும் "இயவர்' என்றே அழைக்கப்பட்டுள்ளனர் என்பது சங்க இலக்கியச் சான்றுகளால் தெரிய வருகின்றது.

இசை வல்லார் யாவரும் "இயவர்' என்ற சொல்லால் சுட்டும் வழக்கம் சங்க காலத்தில் இருந்திருக்கிறது.
"இயவர்' என்ற சொல் தமிழ் இசை மரபை வெளிப்படுத்தும் புலமைத்துவமிக்க சொல்லாக நிலைபெற்று வந்திருப்பதை நாம் அறிந்து இன்புற வேண்டும்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com