வெறுங்கூடு காத்த வேடன்!

மங்கை ஒருத்தி மதுரையை ஆட்சி செய்த மாறன் மீது மையல் கொண்டு, அவன்பால் தனது மனத்தை இழக்கிறாள். தன் மகளின் உள்ளக் கிடக்கையை
வெறுங்கூடு காத்த வேடன்!

மங்கை ஒருத்தி மதுரையை ஆட்சி செய்த மாறன் மீது மையல் கொண்டு, அவன்பால் தனது மனத்தை இழக்கிறாள். தன் மகளின் உள்ளக் கிடக்கையை ஏற்கெனவே அறிந்து வைத்திருந்த அவளின் தாய், மகளை வீட்டுக் காவலுக்கு ஆட்படுத்துகிறாள். 

"இற்செறிப்பு'க்கு ஆளான இளமகள், தோழியைச் சந்தித்துத் தனது துன்பத்தைப் பகிர்ந்துகொள்ள முடியாமல் துவண்டு கிடக்கிறாள். 
மாலை நேரம். தெருவில் திடீரென எழுந்த இன்னியங்களின் முழக்க ஒலி, தென்றலில் கலந்து வந்து தலைவியின் செவிகளில் பாய்கிறது. தென்னவன் தேரில் ஏறி உலா வரப்போவதை ஊகித்து உணர்கிறாள் அவள். வேந்தனைக் காண விழையும் அவள், வேகமாக எழுந்து வாசலுக்கு விரைகிறாள். ஆனால், வீட்டின் தெருக்கதவு மூடப்பட்டு, வெளிப்புறம் தாழிடப்பட்டிருக்கிறது. அது தன் தாயின் செயலே என்பதை அறிகிறாள். 

அப்போது, கதவின் பூட்டில் அமைக்கப்பட்டிருந்த சிறிய சாவித் துளையில் தனது கண் ஒன்றைப் பதிக்கிறாள். அதன் வழிச் சென்ற அவளது பார்வை, பல்லக்கில் பவனி வரும் பாண்டியனின் அழகைப் பருகிட, அவள் பரவசத்தில் ஆழ்கிறாள்.
தனது சிந்தையில் குடியிருக்கும் செழியனைக் கண்டு மகிழ்வதற்காகவே அந்தக் கதவின் துளை அமைந்தது என்று எண்ணுகிறாள். அந்தத் துளையை வைத்த தச்சர்களை நினைத்தபோது, அவள் மனத்தில் நன்றி உணர்வு ஊற்றெடுக்கிறது. "அவர்களுக்கு இனி நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்?' என்று நெகிழ்ந்து புலம்புகின்ற பாடல் இது:

"காப்படங் கென்றன்னை கடிமனை இற்செறித்து
யாப்படங்க ஓடி அடைத்தபின் - மாக்கடுங்கோன்
நன்னலம் காணக் கதவம் துளைதொட்டார்க்(கு)
என்னைகொல் கைம்மாறு இனி'     (முத். 49)

கதை இத்துடன் முடியவில்லை! மேலும் தொடர்கிறது...! கன்னியின் பார்வையோடு அவளது காதல் மனமும் வெளியேறி, காவலன் பின்னே சென்றுவிடுகிறது. வேல் விழியாளின் வெற்றுடல் மட்டுமே வீட்டுச் சிறைக்குள் கிடக்கிறது. ஆனால், இவ்வுண்மையை உணராத அவளுடைய தாயோ, மகளின் நெஞ்சம் நீங்கப்பெற்ற வெற்றுடலையும் இற்செறிப்பிலிருந்து விடுவிக்காமல் காவல் காக்கிறாள். இந்நிலையில், அன்னையின் அறியாமையை எண்ணிப் பார்க்கும் தலைவிக்கு நாட்டு நடப்பொன்று நினைவுக்கு வருகிறது.
அக்காலத்தில் "காடை' என்னும் பறவையைப் பிடிக்கும் வேடர்கள், பழக்கப்படுத்தபட்ட காடையைக் கூண்டுக்குள் வைத்து காட்டுக் காடைகளைத் தந்திரமாகப் பிடிப்பது வழக்கம். "கூண்டுக் காடையை வைத்துக் காட்டுக் காடையைப் பிடித்தாற் போல' என்ற சொலவடையும் உண்டு.

இத்தகைய தொழிலை வழக்கமாகக்கொண்ட வேடன் ஒருவனது கவனக்குறைவால், பழகிய பழைய "காடை' கூட்டைவிட்டு வெளியே பறந்து போய்விடுகிறது. அதை அறியாத வேடன், வெறுங்கூட்டை காட்டில் வைத்துக்கொண்டு காத்திருந்தானாம். அந்த முட்டாள் வேடனின் இந்தச் செயலோடு, தன் தாயின் செயலை ஒப்பிட்டுப் பார்க்கிறாள் தலைவி. 

"கோட்டெங்கு சூழ்கடல் கோமானைக் கூடவென
வேட்டாங்குச்  சென்றவென் நெஞ்சறியாள்-கூட்டே
குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன்போல் அன்னை
வெறுங்கூடு காவல் கொண் டாள்'     (35)

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நற்குணங்கள் நான்கும் நங்கையர்க்கு நலம் பயப்பன. அவற்றுள் "மடம்' என்பது, "இளமை',  "அறிவது அறியாமை' என்னும் இருபொருள் தரும். அறியாப் பருவத்தாளாகிய தன் மகளின் களவொழுக்கத்தை அயலார் அறிந்து "அலர்' தூற்றாமல் காப்பதற்காக அவளை இற்செறித்துக் காப்பது பெற்றெடுத்த நற்றாயின் பெருங்கடமை. ஆனால், அதை உணராத இளநெஞ்சங்கள் அவளை வேம்பென வெறுப்பது உலக இயல்புதானே?

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com