
நமக்குக் கிடைத்துள்ள மிகப்பழைய இலக்கணமாகிய தொல்காப்பியத்தில் மாயோன், சேயோன், வேந்தன் (இந்திரன்) வருணன் (தொல்.951) ஆகிய நானிலத் தெய்வங்களோடு, "பழையோள்' ஆகிய கொற்றவையும் (தொல்.1005) பேசப்படுகின்றாள்.
"மாயோன் மேய காடுறை உலகமும்' என்பது தொடக்கமாகக் கூறப்பட்ட தெய்வங்களுள் இந்திரன், வருணன் ஒழிந்த ஏனைய மூவருமே பாட்டும் தொகையுமாகிய பழைய சங்கப் பனுவல்களில் அதிகம் இடம்பெறுகின்றனர். ஏனைய இருவருள் இந்திரன் பற்றிய ஒரு சிறு குறிப்பினை மட்டும் புறநானூறு (பா.241) காட்டுகிறது. அவன் வானவர்க்குத் தலைவன் ஆவான் (25) என்று திருக்குறளும் கூறுகின்றது.
""வருணனைப் பொறுத்தவரை இந்திரனுக்குரிய சிறிய இடங்கூட அவனுக்கு இருந்ததாகத் தெரியவில்லை'' என்கிறார் பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் (பெரியபுராணம் - ஓர் ஆய்வு, ப.3, 1994). எனினும், சங்க காலத்தை அடுத்துத் தோன்றிய சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களில் இந்திரனுக்கு விழா எடுத்த செய்தி விரிவாக இடம்பெற்றதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
தொல்காப்பியர் கூறும் இந்திரன் பற்றிய குறிப்பு சங்க நூல்களில் அதிகம் காணப்பெறாது இடையறவு பட்ட போதிலும், தமிழர் வாழ்விலும் நம்பிக்கையிலும் இந்திரன் முற்றும் நீங்காது இருந்தமைக்கான இலக்கியத் தடயங்கள் உண்டு. இதற்கான வித்தினை உட்கொண்டிருப்பது நாம் முன்னர் காட்டிய புறநானூற்றுப் பாடலாகும்.
ஏணிச்சேரி முடமோசியார் என்னும் புலவர் ஆய்அண்டிரன் என்னும் வள்ளல் மறைந்தபோது அலமந்து பாடிய பாடல் அது. பெரிதும் மனமறுக்கமுற்ற புலவர், ஒருவாறு மனந்தெளிந்து, "இத்தகு வள்ளலைத் தேவர்கள் எதிர்கொண்டு வரவேற்பது தப்பாது' என்று நம்பினார். அந்த நம்பிக்கையில்,
"திண்டேர் இரவலர்க்கு ஈத்த தண்டார்
அண்டிரன் வரூஉம்'என்ன, ஒண்டொடி
வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்
போர்ப்புறு முரசங் கறங்க
ஆர்ப்பெழுந் தன்றால் விசும்பி னானே!' (புறநூ 241)
என்று பாடினார். திண்ணிய தேர்கள் பலவற்றை இரப்போர்க்கு ஈந்த நம் அண்டிரன் அதோ, தேவருலகம் புகுந்தான். தொடியினையும் வச்சிரப் படையினையுமுடைய இந்திரனது கோயிலில் (இருப்பிடத்தில்) அவனை வரவேற்று முரசும் முழங்கியது. வானுலகமெங்கும் அந்த ஆரவாரம் எழுந்தது என்பது இதன் பொருளாகும். இங்கு. "வச்சிரத்தடக்கை நெடியோன்' என்ற இந்திரனை,
நல்லறஞ் செய்வோர் நல்லுலகு அடைதலும்
அல்லறஞ் செய்வோர் அருநரகு அடைதலும் உண்டு
(ம.மே. 16:88-90)
என்னும் நம்பிக்கையைத்தான் முடமோசியாரின் இப்பாடல் காட்சிப்படுத்துகிறது. இவ்வாறு நல்லோர் இந்திரஉலகம் புகுந்த செய்தியைச் சிலப்பதிகாரமும் தெரிவிக்கின்றது. பாண்டியனோடு வழக்குரைத்து அவனும் பாண்டிமாதேவியும் உயிர்துறத்தற்குக் காரணமாயிருந்த கண்ணகி கடைசியில் தன் சீற்றம் தணிந்து வாழ்த்துக் காதையில்,
தென்னவன் தீதிலன் தேவர்கோன் தன்கோயில்
நல்விருந்து ஆயினான் நான்அவன் தன்மகள்
என்று பேசக் காண்கிறோம். மானிடயாக்கையில் கொண்டிருந்த கோபம் தெய்வ உடம்பு பெற்றதும் மாறியது. பாண்டியன் குற்றமற்றவன்; அவன் இந்திரனது அரண்மனையில் நல்ல விருந்தினன் ஆனான்; நான் அப் பாண்டியனின் மகளாவேன் என்று மனங்கனிந்து பேசுகின்றாள் கண்ணகி. இங்ஙனம், "வானவர்க்குத் தலைவனான இந்திரனின் விருந்தாளி' என்னும் செய்தியில், இந்திரன் மட்டும் விலக்கப்பட்டு, ஏனைய வானோர்க்கு விருந்தாகும் செய்தியே திருக்குறளில் இடம் பெறுகின்றது.
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு (85)
என்னும் குறள் காண்க. மண்ணுலகில் நெடும்புகழ் படைத்தவரையே தேவருலகம் போற்றும் என்னும் பொருளமைந்த குறளிலும் (234) தேவேந்திரனுக்கு இடமில்லை.
பின்னாளில் அவ்வானவரும் விலக்கப்பட்டு அவர்களின் இடத்தில் வைகுந்தத்து அமரர்கள் (நித்திய சூரிகள்) இடம் பெறுவதைத் திருவாய்மொழி காட்டுகிறது. அந்நிலையில் இந்திரலோகம், "வடிவுடை மாதவன் வைகுந்தம்' (10-9-8) ஆக மாறுகிறது. இதன் விரிவை, "சூழ்விசும்பு' எனும் திருவாய்மொழிப் பதிகத்தில் (10-9) படித்துணரலாம்.
எனினும், "வேந்தன் மேய தீம்புனல் உலகம்' என்று மருதநிலத் தெய்வமாகத் தொல்காப்பியத்தில் பேசப்பட்ட இந்திரன் தமிழ் மக்களால் முற்றாக மறக்கப்படவில்லை. தேவேந்திரன், தெய்வேந்திரன், புலவேந்திரன் என்னும் பெயர் வழக்குகளே இதனை உறுதி செய்கின்றன. தமிழ் நிகண்டுகளில், "புலவர்' என்பதற்கு, "தேவர்' எனும் பொருளும் கூறப்பட்டுள்ளது.
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு (234)
எனும் திருக்குறளும் இதற்குச் சான்றாகும். எனவே, நாட்டார் வழக்கில் நிலைபெற்றுள்ள "புலவேந்திரன்' முதலான பெயர்கள் மருதநிலத் தெய்வமான இந்திரனை மறவாமல் நினைவூட்டுவதாகக் கருதலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.