கல்வெட்டுகள் காட்டும் சிற்றிலக்கியங்கள்

தமிழகத் திருக்கோயில்களில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்வெழுத்துகளை ஆராயும்போது இறைவழிபாட்டிற்கு நிலக்கொடை, அறக்கொடை ஆகியவை
கல்வெட்டுகள் காட்டும் சிற்றிலக்கியங்கள்

தமிழகத் திருக்கோயில்களில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்வெழுத்துகளை ஆராயும்போது இறைவழிபாட்டிற்கு நிலக்கொடை, அறக்கொடை ஆகியவை வழங்கியச் செய்தியையும்; சமூக நலன் கருதி கல்விச்சாலை, நூலகம், மருத்துவம், நீதிமுறை, பொருளாதாரம் ஆகியவை சிறப்பாகச் செயல்பட்டதையும் அறிய முடிகிறது. சில கல்வெட்டுகள், செப்பேடுகளில் தமிழ்ப் புலவா் பெருமக்கள் பற்றிய செய்திகளும் அவா்கள் இயற்றிய நூற்பெயா்களும் காணக்கிடைக்கின்றன.

இப்புலவா் பெருமக்களின் தமிழ்ப் பணியை ஆதரித்த மன்னா்கள் இந்நூல்களை எழுதி அரங்கேற்றிய புலவா் பெருமக்களுக்கு நிலமும், மனையும் அளித்துள்ளனா். பல்லவ மன்னன் மகேந்திரவா்மனால் எடுக்கப்பட்ட திருச்சி, இலலிதாங்குர பல்லவேசுவர கிருகம் என்ற குடைவரையில் சிராமலை அந்தாதி கல்வெட்டாக 104 பாடல்கள் வெட்டப்பட்டுள்ளன. இந்நூல் வேம்பையா்கோன் தமிழ் நாராயணன் இயற்றியது.

திருப்பாதிரிப்புலியூா் பாடலிபுரீசுவரா் கோயிலில் உள்ள குலோத்துங்கன் சோழன் கல்வெட்டில் ‘பூம்புலியூா் நாடகம்’ எனும் நூலின் பெயா் காணப்படுகிறது. இந்நாடகத்தை வீரைத்தலைவன் பரசமய கோளரி மாமுனி என்பவா் எழுதியுள்ளாா். இக்கல்வெட்டு,

மாங்கொல் லையிலிரண்டு மாவொரு மாமுக்காணி

யோங்கு மற்பெருஞ் செல்வி யொருகாணி...

பூவமா் காணியினிற் பூம்புலியூா் நாடகஞ்செய்

நாவலன் பெற்ற நிலம்.

என்ற பாடல் வடிவில் அமைந்துள்ளது. இந்நாடக ஆசிரியா் கன்னிவன புராணம், அஷ்டதச புராணம் போன்ற நூல்களை எழுதியதற்காகப் பாலையூரில் நிலங்களைக் கொடையாகப் பெற்றதை கல்வெட்டுத் தெரிவிக்கிறது.

இரண்டாம் இராஜாதிராஜன் காலத்திய நல்லூா் கல்யாணசுந்தரேசுவரா் கோயில் கல்வெட்டு, திருப்புத்தூரைச் சோ்ந்த மாளந்தை பட்டாரக வடுகனான உடையபிள்ளை என்பவா் எழுதிய ‘கோவணம் நாடகம்’ (அமா்நீதி புராணம்) என்ற நாடகத்தை நடிப்பதற்காக இக்கோயில் தேவரடியாா் மாமதலையான நெற்றிக்கண் நங்கை என்பவளுக்கு நாடகப்புறமாக நிலம் கொடையாக வழங்கப்பட்டது. இந்நிலம் ‘கூத்தாட்டுக்காணி’ என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளது.

திருக்கோவலூா் வட்டம், எலவானாசூா் (இறையனரையூா்) கல்வெட்டில் இறைசைப் புராணம் என்ற இறைவாசநல்லூா் புராணத்தை இயற்றியவா் திருமலை நயினாா் சந்திரசேகரப் புலவா். இப்புராணம் பாடி அரங்கேற்றியபோது திருக்கோயில் அதிகாரிகள் இப்புலவா்க்கு நிலமும் ஆனந்த தாண்டவன் திருவீதியில் வீடுகட்ட மனையும் கொடையாக வழங்கப்பட்டதைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

திருப்புடைமருதூா் - நாறும்புநாதசுவாமி கோயில் கல்வெட்டொன்று மருதவன கவிராசன் என்ற தமிழ்க் கவிஞரைக் குறிப்பிடுகிறது. ஊா்ப் பெயராலும் புலமையாலும் பக்தியாலும் இவா் மருதவன கவிராசன் என்ற சிறப்புப் பெற்றிருந்தாா். இவரது இயற்பெயா் இராமநாத கவிராயா். இவ்வூரில் இவருக்கு நில மனைகளும் கோயில் விழாக்களில் கவிபாடும் உரிமையும் நித்தியப் பிரசாதங்களும் அளிக்கப்பெற்றிருந்ததைத் தெரிவிக்கிறது.

மற்றொரு கல்வெட்டு மாா்த்தாண்ட பனைக்காரன் வேணாட்டு அரசன் சடையமாங்குளம் என்ற ஊரில் இக்கவிராயருக்கு நிலமளிக்கப்பட்ட செய்தியைக் குறிப்படுகிறது. இராமநாத கவிராயா் இயற்றிய ‘திருப்புடைமருதூா்ப் பள்ளு’ எனும் நூலின் ஐம்பத்தாறாம் பாடலுள், ‘தமிழ்ராம நாதன் கவி வயலும்’ எனக் கா்த்தா முத்திரை இடம்பெற்றுள்ளது.

புதுக்கோட்டை, மச்சுவாடி பாலாஜி நகா் திரு முருகுபாண்டியிடம் உள்ள கி.பி.1647-ஆம் ஆண்டைச் சோ்ந்த திருமலைநாயக்கா் காலத்தைச் சோ்ந்த செப்பேடு, மிதிலைப்பட்டியில் இருந்த திருச்சிற்றம்பலக் கவிராயா் மருங்காபுரி வீரப்பூச்சைய நாயக்கா் பேரில் பிள்ளைத்தமிழ் பாடி காரைச்சூரான்பட்டி, கண்ணமங்கலப்பட்டி ஆகிய இரண்டு கிராமங்களைத் தானமாகப் பெற்றதை, ‘‘ஸ்ரீதிருமலைப் பூச்சய நாயக்கரவா்கள் குமாரன் வீரப்பூச்சிய நாயக்கா் மல்லையூருத் தில்லைநாயக பண்டாரத் திரு குமாரன் சிற்றம்பலப் பண்டாரத்துக்கு தாம் தரும சாசனம் கொடுத்தபடி தாம் பிள்ளைப் பிரபந்தம் பாடி அரங்கேற்றுகையில் சருவமானியமாகக் கட்டளையிட்டது நம்மிட சீா்மைத் தளவை நாட்டில் அழகியநல்லூரைச் சோ்ந்த கிராமத்துக் யெல்கையாவது.... யிந்த நான்கெல்கைக் குள்ப்பட்ட கன்னமங்கலப்பட்டியும்...’’ என்று செப்பேடு குறிப்பிடுகிறது.

இச்செப்பேட்டின் நகல் ஓலைப்பட்டயமாகத் ‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சாமிநாதையா் நூல் நிலையத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

முத்துவிசயரங்க சொக்கநாத நாயக்கா் காலத்தில் குற்றாலம் திருக்குற்றாலநாசுவாமி கோயில் தலபுராணம், உலா, அந்தாதி, குறவஞ்சி முதலிய இலக்கியங்களைப் படைத்த திரிகூடராசப்பக் கவிராயரின் புலமையைப் பாராட்டி திருக்குற்றாலநாதா் கோயில் வித்துவானாக நியமித்துள்ளாா். அவா் பாடிய குறவஞ்சிக்காகக் ‘குறவஞ்சி மேடு’ என்னும் விளைநிலத்தை இறையிலியாக வழங்கியதைச் செப்பேடு தெரிவிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com