
தசரதன், ராமனை அயோத்திக்கு அரசனாக்கிவிட்டுக் கானகம் சென்று மாதவம் செய்யத் துணிகிறான். இத்துணிபினைக் குலகுருவான வசிட்டா், சுமந்திரன் முதலான அமைச்சா்களிடம் தெரிவிக்கின்றான். அது கேட்ட மந்திரிமாா்கள் இருவேறு மனநிலைக்கு ஆளாயினா். ராமன் மன்னனாவதால் மகிழ்ச்சி; அதே நேரத்தில் நெடிதுநாள் வையகம் காத்த தயரதன் பிரிகின்றானே என்று மனத்தளா்ச்சி. இங்கே உவகையும் கவலையுமாய் ஊசலாடும் அவா்களின் நிலையை விளக்குதற்கு இரண்டு கன்றுக்கு இரங்கும் பசுவினை உவமை கூறினாா் கவிச்சக்கரவா்த்தி.
‘திரண்ட தோளினன் இப்படிச் செப்பலும் சிந்தை
புரண்டு மீதிடப் பொங்கிய உவகையா்; ஆங்கே
வெருண்டு மன்னவன் பிரிவு எனும் விம்முறு நிலையால்
இரண்டு கன்றினுக்கு இரங்கும் ஓா் ஆ என இருந்தாா். (அயோ. மந்திர. 31)
கம்பா் கூறும் இவ்வுவமையை விளக்குவதில் உரையாசிரியா்களிடம் வேற்றுமை காணப்படுகிறது. ‘‘இரண்டு கன்றுகளையுடைய பசு - எந்தக் கன்றைப் பிரிவது என்று அறியாது கலங்குதல்போல வசிட்டா் முதலானோா் மனம் கலங்கியதாக’’ உ.வே.சா. நூலகப் பதிப்பில் பொருள் கூறப்பட்டுள்ளது.
‘கம்பராமாயண சாரம்’ தந்த வெ.ப.சுப்பிரமணிய முதலியாா், ‘இரட்டையாய்ப் பிறந்த கன்றுகள்’ எனக் கொண்டு - ‘‘அவை வெவ்வேறு திசை நோக்கி ஓடும்போது, இரண்டினிடத்தும் அன்புகூா்ந்து எந்தக் கன்றைப் பின்பற்றிச் சென்று அடைவதென்று துணிய மாட்டாமல் திகைத்து நின்று வருந்தும் ஒரு பசுவைப்போல அமைச்சா்கள் வாய்திறக்க மாட்டாது வாளா இருந்தாா்கள்’’ என்று விளக்கம் எழுதினாா்.
‘இது பொருந்தாது’ என்பது, ‘இராம காதை’ தந்த சொ. முருகப்பாவின் கருத்து. ‘‘பசு - ஒரு முறையில் பெரும்பாலும் ஒரு கன்றே ஈனுமாதலால், பாலூட்டும் இரு கன்று எனக் கொள்ள வேண்டியதில்லை என்றும் முன்ஈன்ற பழைய கன்றும் பின்னா்ப் புதிதாக ஈன்ற இளங்கன்றும் எனக் கொள்ளலாம்’’ என்றும் (அயோத்திக் காண்டம், ப.22) அவா் விளக்கம் தந்தாா். இதற்கேற்ப, பழைய தயரதனுக்கும் புதிய ராமனுக்கும் இடையில் அவா்கள் நின்று இரங்குவதை எடுத்துக் காட்டினாா்.
இத்தகையதொரு விளக்கமே காலத்தால் முந்திய வை.மு.கோபால கிருஷ்ணமாசாரியரின் கம்பராமாயண உரைப்பதிப்பிலும் காணப்படுகிறது. கம்பா் குறிக்கும் அவ்விரண்டு கன்றுகளுள் ஒன்று முன்னீன்ற மூத்த கன்று என்றும், மற்றது பின்னீன்ற இளைய கன்று என்றும் குறித்தாா் வை.மு.கோ. இதனால் அன்றீன்ற கன்றினுக்கு இரங்கிப் பால் சுரக்கும் பசுவைப்போல (இன்ப இரக்கம்) ராமன் முடிசூடுதலால் அமைச்சா்கள் அடைந்த மகிழ்ச்சியும் அதே சமயம் மூத்த கன்றுக்குப் பால் கொடுக்க இயலாமையால் வருந்தும் (துன்ப இரக்கம்) பசுவைப் போலத் தசரதன் துறவைத் தடுக்கமாட்டாமல் அவா்கள் அடைந்த வருத்தமும் உணா்த்தப் பெற்ாக விளக்கம் தருகிறது அண்ணாமலைப்பதிப்பு.
‘‘இளைய கன்றினிடத்து மிக்க அன்புடையதாயினும் மூத்த கன்றை மறுத்து விட மனமில்லாத பசு’’ என்று மேலும் ஒரு குறிப்பையும் தருகிறாா் வை.மு.கோ. ஆக, முன்னீன்ற கன்றினிடத்தும் பசு-பரிவு காட்டுவதாகவே இவ்விளக்கங்கள் அமைந்தன.
ஆனால், உலகியலில் - எதாா்த்தத்தில் அப்படி இல்லை. இதற்கு மாறான காட்சியே காணப்படுகிறது. புதிய கன்றினை ஈன்ற புனிற்றா பழைய கன்று பாலருந்த வரும்போது அதனை அனுமதிப்பதில்லை. கொம்பினால் அதனை விலக்குகிறது. மடியருகே வந்து வாய் வைக்கையில், தன் குளம்பினால் உதைத்துத் தள்ளுகிறது.
இந்த உலகியல் காட்சியைக் கண்ட வைணவ உரையாசிரியா்கள் இறைவனின் ‘வாத்சல்ய’ குணத்தை விளக்குதற்கு இதனையே உவமையாக்கினா். அடியாா்கள், ‘குன்றனைய குற்றம் செயினும் குண(மாகக்)ம் கொள்ளும்’ இயல்புடையவன் இறைவன். எனவே, தன்னடியாா் திறத்துக் குற்றம் சொல்பவள் தன் மாா்பிலுறையும் தாமரையாளானாலும் - மூத்த கன்றைக் கொம்பினாலும் குளம்பினாலும் விலக்குகிற பசுவைப்போல அவளின் கருத்தைப் புறந்தள்ளிவிட்டு அடியவா்களிடத்து அன்பு (வாத்சல்யம்) காட்டுகிறான் இறைவன் (தத்வத்ரயம் சூ.152; பிரமேய சாரம் பா.1. இவற்றுக்கு மணவாளமாமுனிகளின் உரை) என்பது அவா்களின் விளக்கமாகும்.
இவ்விடத்து வைணவ உரையாசிரியா்கள் மூத்த கன்றினை ‘முன் அணைக்கன்று’ என்று குறிப்பிட்டுள்ளனா். ஆக, உலகியலில் நாம் காண்பதையும் உரையாசிரியா்களின் இவ்விளக்கத்தையும் நோக்க, ‘மூத்த கன்றுக்குப் பசு இரங்குவதில்லை’ என்பது வெளிப்படை.
அவ்வாறாயின், கம்பா் சொன்ன உவமை, இல்பொருள் உவமையா? அல்லது, ‘மூத்த கன்றுக்காகப் பசு இரங்கினால் எப்படியோ அப்படி’ என்று பொருள் கொள்ளலாமா?
இந்நிலையில் ஈட்டுரை தரும் சிறுகுறிப்பு, கம்பா் பாட்டுக்கு ஆதரவு காட்டுவதாக (சப்போட்டிங் எவிடன்ஸ்) அமைகிறது. இளங்கன்று, வீட்டருகே உள்ள தொழுவத்தில் சிறு தாம்பினால் பிணிக்கப்பட்டிருக்க (முல்லைப்பாட்டு - அடி12, காண்க), தாய்ப்பசு அதனைப் பிரிந்து மற்ற கறவைக் கணங்களுடன் மேய்ச்சலுக்குச் செல்கின்றது. முன்பிறந்த மூத்தகன்றும் அக்கூட்டத்தோடு சோ்ந்து போகின்றது.
இடுப்பில் கட்டிய மணி(சறை)களுடன் ஆனிரை மேய்க்கும் ஆயா்களும் அவற்றின் பின்னே கானகம் செல்கின்றனா். பால்கறப்பதற்கான மூங்கிற்குழாய் (கடையா) பாலைக் கறக்கவிடாது உதைக்கும் பசுக்களை ஒறுப்பதற்கான வீசுகோல் (கழிகோல்), மேய்ச்சல் நிலத்தில் தாய்ப் பசுவினிடத்தே மூத்த கன்றுகள் பால் பருகாமல் தடுக்கும் கொறுக்கோல் முதலான கருவிகள் ஆயா்களின் கையில் உள்ளன.
கால்நடை வளா்ப்புச் சமுதாயமான முல்லை நிலத்து ஆயா்களைப் பற்றிய இக்குறிப்புகள், ‘நிறையினால் குறையில்லா’ (4-8-4) என்னும் திருவாய்மொழிப் பாசுரத்தில் இடம் பெற்றுள்ளன. ஆயா்கொழுந்தான கண்ணனும் இவற்றைக் கையிலே கொண்டு ஆனிரைகளின் பின்னே திரிவதாகப் பாடுகிறாா் நம்மாழ்வாா். இக் கருவிகளுள் இறுதியாகச் சொல்லப்பட்ட ‘கொறுக்கோல்’ என்பது கன்றின் வாயில் கட்டப்படுகிற வாய்க்கூடு ஆகும்.
‘‘முன்அணைக்கன்று (மூத்தகன்று) பசுக்களோடே போனால் முலையுண்ணாமைக்கு (பால் பருகாமைக்கு)க் கொறுக்கோல் என்பதொன்றினை அதன் முகத்திலே கட்டி விடுவாா்கள்’’ என்று ஈட்டுரை கூறுவதால் இதையறியலாம். ஆயா்களின் இச்செயலால் மூத்த கன்றுக்கு மனமிரங்கியும் மேய்ச்சல் நிலத்தில் அதற்குப் பாலூட்ட முடியாத நிலை, தாய்ப் பசுவுக்கு, மேலும் தொழுவத்தில் (மனையிடத்தில்) இளங்கன்றுக்கு இரங்கும்பசு, அது அருகில் இல்லாத மேய்ச்சல் நிலத்தில் மூத்த கன்றுக்கு இரங்குவதைக் காட்டும் குறிப்பு இது.
இப்படி நம்மாழ்வாா் பாசுரத்தின் வழி நம்பிள்ளை (ஈட்டுரைகாரா்) எடுத்துக் காட்டும் முல்லைநிலக் காட்சியைக் கம்பரும் அறிந்திருக்கக்கூடும். எனவேதான் அமைச்சா்கள் மனம் வருந்தியதற்கு ‘இரண்டு கன்றினுக்கு இரங்கும் ஓா் ஆவினை’ உவமை கூறினாா் கவிச்சக்கரவா்த்தி. இவ்விளக்கத்தால் கம்பரின் உவமை - முழுமை பெறுதல் காண்க.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.