பேதைநகை மொக்குளுள்ளது!

இராமன், சீதையின் கானக வாழ்க்கையில் ஒரு நாள். இராமன், சீதையின் நடையழகைக் கண்டு சிறிது சிரித்தான்.
பேதைநகை மொக்குளுள்ளது!

இராமன், சீதையின் கானக வாழ்க்கையில் ஒரு நாள். ராமன், சீதையின் நடையழகைக் கண்டு சிறிது சிரித்தான். சீதையும், மணற்குன்றைப் போலக் காணப்பட்ட ராமனின் உயர்ந்த தோள்களையும், யானை நடையினும் சிறந்ததாகத் தோன்றும் அவன் நடையையும் பற்றிய மகிழ்ச்சியினால் அவளும் முறுவலித்தாளாம். அதை,
 ஓதிம மொதுங்கக் கண்ட
 வுத்தமனுழை யளாகும்,
 சீதை தன்னடையை நோக்கிச்
 சிறியதோர் முறுவல் செய்தான்,
 மாதவடானு மாண்டுவந்து
 நீருண்டு மீளும்,
 போதக நடப்ப நோக்கிப்
 புதியதோர் முறுவல் பூத்தாள்
 (கம்ப-சூர்ப்ப.5)
 என்று கம்பர் வருணிக்கிறார். ராமனும் சீதையும் கோதாவரி நதியினருகில் மகிழ்வோடு உலாவும்போது, ராமன் அங்கு அன்னப்பறவை ஒன்றைக் கண்டான். அது தன் இயல்பின்படியே மானிடரைக் கண்டவுடன் ஒதுங்கி நடத்தலைச் செய்தது. அன்னத்தின் நடையைக் கண்ட ராமபிரானுக்கு சீதையின் நடை நினைவுக்கு வர, உடனே அவன் சீதையின் நடையை உற்றுப்பார்த்து, அது அன்ன நடையினுஞ் சிறந்திருத்தலை உணர்ந்து, சீதையின் நடையழகுக்கு முன்னால் தாம் நிற்கலாற்றாது அன்னம் விலகிச் சென்றது எனக் கருதி ராமன் முறுவலித்தானாம்.
 அவ்வாறே சீதையும், அங்கு வந்து நீர் பருகிய யானை இயல்பாக மீண்டு செல்லும் நடையைக் கண்டு, அதனால் ராமனின் நடை நினைவுக்கு வர, உடனே அவன் நடையை உற்றுக் கவனித்து, அது யானையின் நடையைவிட சிறந்துள்ளதை உணர்ந்தாள். இப்படிப்பட்ட நடையழகுக்கு முன்னால் தாம் நிற்கலாற்றாது என்று நாணி, யானை அப்புறம் செல்கின்றது எனக்கருதி, ராமனின் நடையின் சிறப்பு பற்றிய உவகையினாலும் சற்றே முறுவலித்தாளாம்.
 முறுவல் ஒன்றுதான்; ஆனால் ராமன் சிறியதோர் முறுவல் செய்தான் என்றும், சீதை புதியதோர் முறுவல் பூத்தாள் என்றும் கம்பர் கவி செய்கிறார். மகளிர் முறுவல் வெளித்தோன்றாது அடங்கி நிற்குமென்பதைக் காட்டும் கம்பரின் கவிநயம் போற்றத்தக்கது.
 இதனையே, திருவள்ளுவர்
 "பேதைநகை மொக்குளுள்ளது' என்ற குறிப்பால், "முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை / நகைமொக்குள் உள்ளதொன்று உண்டு'
 (குறள்-1274) உணர்த்துகிறார். மொட்டுக்குள் மணம் உள்ளது போல் மகளிர் முறுவலில் உள்ளத்தின் குறிப்பு ஒன்றும் உள்ளது என்கிறார் திருவள்ளுவர்.
 தமிழுக்குக் "கதி'யான இருவருக்கும் நூற்றாண்டுகள் கால இடைவெளி இருப்பினும், கற்பனையிலும், உணர்விலும் ஒன்றுபட்ட ஓர் ஒத்திசைவைக் காணமுடிகிறது.
 -மா. உலகநாதன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com