பதிப்புத்துறையில் தடம் பதித்த முல்லை முத்தையா!

என்னதான் உன்னதப் படைப்பாளியாக இருந்தாலும் அவர்தம் படைப்புகளை வாசகர்களுக்கு நெருக்கமாகக் கொண்டு சேர்ப்பதில் பெரும்பங்கு ஆற்றுபவர்கள் இதழாளர்களும் பதிப்பாளர்களும்தாம். 
பதிப்புத்துறையில் தடம் பதித்த முல்லை முத்தையா!

என்னதான் உன்னதப் படைப்பாளியாக இருந்தாலும் அவர்தம் படைப்புகளை வாசகர்களுக்கு நெருக்கமாகக் கொண்டு சேர்ப்பதில் பெரும்பங்கு ஆற்றுபவர்கள் இதழாளர்களும் பதிப்பாளர்களும்தாம். 
உலகளவில், இலக்கிய உலகிற்கு எழுதுபவர் எவ்வளவு இன்றியமையாதவரோ, அதேபோல பதிப்பவரும் இன்றியமையாதவரே ஆவார். நாணயத்தின் இரு பக்கங்கள் போல் இலங்குபவர்கள் இவர்கள் என்று சொல்வது மிகையாகாது. எழுத்துக்கு இருக்கும் லட்சிய வேட்கை சிறிதளவும் குன்றாமல், அதைவிடவும் அதிக உத்வேகத்தோடு பதிப்பித்தவர்கள் இயங்கியதால்தான் சென்ற நூற்றாண்டில் மகத்தான இலக்கிய ஆளுமைகள் உருவானார்கள்.
துறைதோறும் புதுமை செயப்புகுந்த பாரதியின் கனவு அவர் காலத்தில் முழுமையாக நிறைவேற இயலாத நிலையில், அவர் மறைந்த சில ஆண்டுகளிலேயே வை.கோவிந்தன் களமிறங்கி, பதிப்புத்துறையில் முத்திரை பதித்தார். அவர் தன்னுடன் இன்னபிற அன்பர்களையும் களமிறக்கினார். அவர்களுள் ஒருவர் முத்தையா. இவர் பெயருக்கு முன்னர் "முல்லை' என்ற இணைப்புப் பெயர் இணையக் காரணமானவர் பாவேந்தர் பாரதிதாசன். "முல்லை' என்ற பெயரில் இலக்கிய இதழும் நடத்திய, இவர் 07.06.1920-இல் தேவகோட்டை பழனியப்பச் செட்டியார் - மனோன்மணி ஆச்சி தம்பதியர்க்கு மகவாகப் பிறந்தவர்.
இளமைப் பருவத்தில் பொருள் தேடி பர்மாவிற்குப் போன இவர், அங்கிருந்து கால்நடைப் பயணமாகவே வெ.சாமிநாத சர்மா போல், தாயகம் திரும்பியவர். 1942-இல் வை.கோவிந்தன் நடத்திய "சக்தி' ஆசிரியர் குழுவில் ஒருவராய் இணைந்தவர். 1943-இல் தினமணி, பாரததேவி முதலிய இதழ்களில் உதவியாசிரியராக இருந்த கே. அருணாசலம் என்பவருடன் இணைந்து, இவர் தொடங்கியது, "கமலா பிரசுராலயம்'.
அப்போது "தினமணி'யிலிருந்து விலகிய நிறுவன ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கம் எழுதிய, "எனது ராஜினாமா' என்ற நூல், அப்பதிப்பகத்தின் முதல் நூலாக வெளிவந்தது. அந்தக் காலகட்டத்தில்தான், "மதுவிலக்கு' குறித்த தெளிவான விளக்கங்கள் கொண்ட ராஜாஜியின், "கள் ஒழிக' என்ற நூலையும் முத்தையா இந்தப் பதிப்பகத்தின் வாயிலாக வெளியிட்டார். ராஜாஜியின் ஆங்கில நூலான "Prohibition' என்பதும் வெளியிடப்பெற்றது.
சோவியத் ருஷ்யாவைப் பற்றி தமிழர்கள் விரிவாக அறிந்துகொள்ள ஏதுவாய், தினமணி துணையாசிரியராகப் பணிபுரிந்த ஏ.ஜி.வெங்கடாச்சாரியைக் கொண்டு எழுதுவித்து, "சோவியத் யூனியன்' என்ற நூலையும் அதே ஆண்டில் வெளியிட்டார். அதேபோல், துப்பறியும் கதைகள் எழுதுகிற சிரஞ்சீவி என்பவரின் முதல்நூலான "மின்னும் நட்சத்திரம்' என்ற நூலையும் வெளியிட்டார். உலகப் புகழ்பெற்ற நாவல்களான, அன்னாகரீனா, அம்மா, மேடம்பவாரி, நாநா, குற்றமும் தண்டனையும் முதலான பத்து நூல்களையும் தாமே சுருக்கி, புதுமுறையில் வெளியிட்டுத் தமிழர்க்கு வழங்கினார். 
அத்துடன், ஷேக்ஸ்பியர் கதைகள், டால்ஸ்டாய் கதைகள் ஆகியவற்றோடு, பாலர் கதைக்களஞ்சியம், நீதி நூல்கள் ஆகியவற்றை வெளியிட்டார். சிறுவர் சிறுமியர்க்கான ஆங்கிலம் - தமிழ் - அகராதி, படங்களுடனாகிய பொது அறிவுக்களஞ்சியம் ஆகியவற்றைத் தாமே தொகுத்து 1972-இல் வெளிக்கொணர்ந்தார். முதல் வகுப்பு தொடங்கி, 5ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்ட அட்டவணையை, "புதிய பாடத்திட்டம்' என்ற பெயரில் இருபதாயிரம் பிரதிகள் வெளியிட்டுச் சாதனை படைத்தவர் இவர்.
முதல் முயற்சியாகவும் புது முயற்சியாகவும், "பாரதியார் பாமணிகள்' என்ற நூலை வெளியிட்டுப் பாராட்டுப் பெற்றார். அதற்கு வ.ரா. எழுதிய பாராட்டுக் கடிதம் முல்லை முத்தையாவின் வாழ்வியல் பெருமிதம் என்றே கொள்ளலாம்.
""முல்லை முத்தய்யா அவர்கள், பாரதியாரின் பாடல்களிலிருந்து சிலவற்றை எடுத்து, ஒரு சிறு நூலாக தொகுத்திருக்கிறார். இது ஒருவகைத் தொகுப்பு. இதுபோல, எத்தனையோ தொகுப்புகள் வெளிவரலாம். ஆனால், முத்தய்யாவின் தொகுப்பில் என்ன சிறப்பு இருக்கிறது என்று கேட்டால், இதுதான் முதல் முதல் வெளிவரும் தொகுப்பு என்பது முதல் சிறப்பு. வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் இந்தத் தொகுப்பு தடவிக் கொடுத்து சீர் படுத்தியிருக்கிறது என்பது இரண்டாவது சிறப்பு. இந்தத் தொகுப்பில் காணும் பாமணிகளில் பெரும்பாலானவை, அனேகமாக பழமொழிகளாக, இன்னும் சில ஆண்டுகளில் ஆகிவிடும் என்பது மூன்றாவது சிறப்பு. முத்தய்யா இந்த முயற்சியை வெகுவான ஆர்வத்தோடு செய்திருக்கிறார். அதற்காக அவரை நான் மிகுதியும் பாராட்டு
கிறேன்'' என்று 14.7.1949-இல் வ.ரா. எழுதிய கடிதத்தை, முத்தையாவின் புதல்வர் பழனியப்பன் இன்னும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்.
மேலும் பாரதியார் கதைகள், பாரதியாரின் பகவத்கீதை மொழிபெயர்ப்பு ஆகியவற்றை மலிவுப் பதிப்புகளாகக் கொண்டு வந்த முத்தையா, பாரதியார் குறித்த அறிஞர்களின் கருத்துரைகளைத் தொகுத்து, "பாரதியார் பெருமை' (1953) என்ற நூலை வெளியிட்டிருக்கிறார்.
பாரதிக்குப் பின்னர் வந்த பாவேந்தர் பாரதிதாசன்பால் இவர் கொண்ட அன்பும் அக்கறையும் தனித்துவமானது. 1943-ஆம் ஆண்டின் இறுதியில், முத்தையாவை, பாரதிதாசனிடம் இவரை அறிமுகம் செய்து வைத்த நண்பர், "இவர் ஒரு தேசியப் பதிப்பாளர்' என்று சொல்ல, "இத்தகைய பதிப்பாளர்தான் எனக்குத் தேவை' என்று கூறி அப்பொழுது "அழகின் சிரிப்பு' நூலைக் கொடுத்து வெளியிடுமாறு கொடுத்திருக்கிறார். அதற்காக அவர் வழங்கிய தொகை, பாவேந்தர்தம் மூத்த மகளின் திருமணத்திற்கு உதவியது. 
1944-இல் பாரதிதாசனின் நூல்களை வெளியிடுவதற்காகவே, முல்லைப் பதிப்பகத்தைத் தேவகோட்டை திருநாவுக்கரசு என்பாரின் கூட்டுறவுடன், சென்னையில் தொடங்கினார் முத்தையா. தொடர்ந்து, அவர்தம் நூல்களைச் சிறப்புற வெளியிட்டுப் பெருமை தேடிக் கொண்டார். இதில் ஒரு சிறப்பு என்னவென்றால், தான் வெளியிட்டுவந்த நூல்களைத் தக்கோர்க்கு அனுப்பியமைதான். 
முத்தையா, பாவேந்தரைப் பற்றி, "புரட்சிக் கவிஞர்' என்ற தலைப்பில் ஒரு தொகுப்பு நூல் கொணர்ந்தார். 1946-இல் வெளிவந்த அந்நூலில், பாவேந்தரின் நண்பர்களும், மாறுபாடு உள்ளவர்களும் பங்கேற்றிருந்தனர். அதுபோல், புரட்சிக் கவிஞர் வாழ்க்கையிலே' என்ற வரலாற்று நூல் ஒன்றையும் ஆக்கினார். பாரதிதாசன் இல்லத்தில் இருந்த பழந்தாள்களில் இருந்து தேடித் தொகுத்தவற்றை, "காதல் நினைவுகள்' என்னும் நூலாக ஆக்கியிருக்கிறார்.
அதேபோல், டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தியின் நூல்களையும், விடுதலைப் போராட்ட வீரர் கோவை அ.அய்யாமுத்து, பேராசிரியர் க.அன்பழகன், ஆர்.பி.எம்.கனி உள்ளிட்ட பலரது நூல்களையும் வெளியிட்டிருக்கிறார்.
மருத்துவ நூல்கள், சட்ட நூல்கள், கவிதை நூல்கள், அகராதிகள், அரசியல் நூல்கள், இசை மற்றும் பாடம் தொடர்பான நூல்கள், நீதி நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், தொகுப்பு நூல்கள், மூல நூல்கள் இவற்றோடு ஆங்கில நூல்களையும் வெளியிட்டவர் முல்லை முத்தையா. 
"முல்லை' மற்றும் "நகரசபை' என்னும் இதழ்களையும் நடத்தியவர். தனித்தும் தொகுத்தும் 19 நூல்களுக்கு மேல் எழுதி வெளியிட்டவர். இவர்தம் வாழ்க்கைத் துணைவியார் நாச்சம்மை ஆச்சி. இவர்தம் பிள்ளைகள், பெண்மக்கள் மூவர். ஆண்மக்கள் மூவர். ஆயினும் தந்தைவழி நின்று பதிப்பகப் பணிகளை, மு.பழனியப்பன் இப்போது தொடர்கிறார்.
09.02.2000 அன்று மறைந்த முல்லை முத்தையா, தமிழக அரசின் பாவேந்தர் விருது(1990), திருக்குறள் நெறித்தோன்றல் விருது(1985) உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்ற இவரின் நூல்களைத் தமிழக அரசு 2008-இல் நாட்டுடைமையாக்கிப் பெருமைப்படுத்தியது.
-செளந்தர பாரதி

இன்று: 7.6.2020 
முல்லை முத்தையா நூற்றாண்டு தினம் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com