இந்த வாரம் கலாரசிகன்

சென்ற வாரம் வியாழக்கிழமை இதுபோல, "இந்த வாரம்' பத்தியை எழுதிக் கொண்டிருந்தபோது, அடுத்த வாரம் ப.முத்துக்குமாரசுவாமி ஐயா நம்மை விட்டுப் பிரிந்துவிடுவார் என்று கனவிலும் நான் நினைத்துப் பார்க்கவில்லை.
இந்த வாரம் கலாரசிகன்

சென்ற வாரம் வியாழக்கிழமை இதுபோல, "இந்த வாரம்' பத்தியை எழுதிக் கொண்டிருந்தபோது, அடுத்த வாரம் ப.முத்துக்குமாரசுவாமி ஐயா நம்மை விட்டுப் பிரிந்துவிடுவார் என்று கனவிலும் நான் நினைத்துப் பார்க்கவில்லை.
 கொவைட்-19 தீநுண்மி நோய்த்தொற்று தொடங்கியதிலிருந்து வீட்டிலிருந்து எங்கும் வெளியே செல்லாமல், எழுத்தே தவமாகக் கழித்த அந்தத் தமிழறிஞருக்காகக் காலன் வெளியே ஆறு மாதங்களாகக் காத்திருந்திருக்கிறான். வெள்ளிக்கிழமை சில மணி நேரங்கள் தன் மருமகனுடன் வெளியே சென்றிருக்கிறார், அவ்வளவுதான். காத்திருந்த காலனுக்கு (கரோனா நோய்த் தொற்றுக்கு) அதுவே வாய்ப்பாகிவிட்டது. சனிக்கிழமையிலிருந்து உடல்நலக் குறைவு, ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் அனுமதி. வியாழனன்று உயிர் பிரிந்துவிட்டது.
 1963-ஆம் ஆண்டு படைப்புப் பணியில் தடம் பதித்தது முதல் இதுவரை 127 புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.
 அச்சில் ஏழு புத்தகங்கள் வெளிவரத் தயாராக இருக்கின்றன. காமராஜரிடமிருந்து பொற்கிழியைப் பரிசாகப் பெற்ற பெருமைக்குரிய ப.முத்துக்குமாரசுவாமி, ஒரு வகையில் "செக்கிழுத்த செம்மல்' வ.உ.சிதம்பரனாருக்குத் தாய்வழி தூரத்து உறவு.
 "பணிவு' என்கிற வார்த்தைக்கு வாழும் இலக்கணமாகத் திகழ்ந்த ஐயாவின் உழைப்பும், சற்றும் தளராத மன உறுதியும் கண்டு நான் பலமுறை பிரமித்துப் போயிருக்கிறேன். தில்லி தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து "தினமணி' நடத்திய தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாடும் சரி, சென்னையில் கூடிய இரண்டாவது உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடும் சரி, பெரியவர் ப.முத்துக்குமாரசுவாமி இல்லாமல் நடைபெற்றிருக்க முடியாது. இலக்கிய விழாவாகட்டும், தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்ளும் மாநாடுகளாகட்டும், அவை எப்படிக் கட்டமைக்கப்பட வேண்டும், அதில் யார், யார் பங்குபெற வேண்டும் என்பதையெல்லாம் முறையாகத் திட்டமிட்டு நடத்தித் தருவதில் அவருக்கு இணை அவர் மட்டுமாகத்தான் இருக்க முடியும்.
 என்னைப் பொருத்தவரை, மிகப்பெரிய தனிப்பட்ட இழப்பு. நான் கொவைட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டபோது அவர் எனக்குத் தந்த ஊக்கம் கொஞ்ச நஞ்சமல்ல. பத்து நாள்களுக்கு முன்பு நான் அவரை அழைத்துப் பேசினேன். "நோய்த் தொற்றிலிருந்து மீண்டு வந்தாலும், இன்னும் பலவீனமாக இருப்பதால் அலுவலகம் செல்லவில்லை' என்று தெரிவித்தபோது, மிகவும் கவலைப்பட்டார். அன்று இரவு அவரிடமிருந்து எனக்குக் கட்செவி அஞ்சலில் இந்தச் செய்தி வந்தது -
 "ஐயா வணக்கம். நீண்ட ஆயுளும், உடல்நலமும் குறைவிலாது பெற்று, அறவழி நேர்வழி என அன்பினைத் தவமாக்கிக் கொண்டு வாழும் உத்தமர் நீங்கள். எந்தவிதக் குறையும் வராது. எல்லாம் அந்த அன்னை கொல்லூர் மூகாம்பிகை அவள் திருக்கரம் பற்றி, நீங்கள் குறைவில்லா வாழ்வு வேண்டி நிற்கிறேன் ஐயா. பாதுகாப்புடன் பத்திரமாய் இருங்கள். இடையில் சிறு சோதனை பனிபோல் விலகும். வீட்டில் அம்மா முதல் அனைவருக்கும் எனது வணக்கம். பாப்பாவைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். முத்துக்குமாரசுவாமி.''
 மருத்துவமனையிலிருந்து செவ்வாய்க்கிழமை இன்னொரு செய்தி அனுப்பி இருந்தார். "இனிய வணக்கம். இறைவன் எவ்வழி நடத்துகின்றானோ அவ்வழியில், நம் பயணத்தை நம் கரம் பிடித்து, அவனால் விதிக்கப்பட்ட திருப்பணிகள் முடிகிறவரை அமைதியாகக் கொண்டு செல்வான். தாயினும் சாலப்பரிந்தூட்டும் தாயானவனல்லவா? அவனன்றி ஓர் அணுவும் அசையாது இவ்வுலகில். திருவருள், குருவருள் ஆசியோடும், தங்களைப் போன்ற சான்றோர் பெருமக்களின் பிரார்த்தனைகளோடும் விரைவில் வீடு திரும்ப வைப்பார் என்கிற நம்பிக்கை நிறையவே இருக்கிறது. ஐயா, தாங்கள் பத்திரமாக இருங்கள். வீட்டில் உள்ள அனைவருக்கும் என் வணக்கங்கள். என்றும் நன்றி மறவா முத்துக்குமாரசுவாமி.''
 நினைத்துவிட்டால் மூகாம்பிகையை தரிசிக்கக் கொல்லூர் கிளம்பி விடுவார். திரும்பி வந்ததும் பிரசாதத்துடன் என்னை சந்திக்க வந்துவிடுவார். இரவு பத்து மணிக்கு மேல் மருமகன் நடராஜனையும் அழைத்துக் கொண்டு அவர் அலுவலகத்தில் என்னை சந்திக்க வரும்போது மனம் சங்கடப்படும். "தொலைபேசியில் பேசினால் போதாதா' என்று கேட்டால், "உங்களை நேரில் சந்தித்துப் பேசுவதுபோல இருக்காது. ஏன் தடுக்கிறீர்கள்?' என்று சிரித்தபடி வினவுவார்.
 பெரியவருக்கு ஓர் ஆசை இருந்தது. நாங்கள் கடைசியாகப் பேசியபோது என்னிடம் தெரிவித்தார். "நம்ம கிருங்கை சேதுபதி பாரதியார் பற்றி நிறைய புத்தகங்கள் எழுதி இருக்கிறார். அவருக்குத் தமிழக அரசின் பாரதியார் விருது வழங்கப்பட வேண்டும்'' என்பதுதான் அது.
 என்னை சந்திக்கும் போதெல்லாம், "அடுத்த தமிழ்த் திருவிழா எப்போது நடத்தப் போகிறோம்?' என்கிற கேள்வி அவரிடமிருந்து வரும். பெரியவர் முத்துக்குமாரசுவாமி ஐயா இல்லாமல் தமிழ்த் திருவிழாவை இனி எப்படி நடத்தப் போகிறோம் என்கிற கேள்விக்கு விடையளிக்காமல் அவர் விடைபெற்றுக் கொண்டுவிட்டார்.
 84 வயதாகி விட்டது. ஐயா மறைந்துவிட்டதைக்கூட என்னால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால், அவருக்கு இறுதி மரியாதை செலுத்தப் போக முடியாதளவு நான் தனிமைப்படுத்தலால் கட்டிப்போடப் பட்டிருக்கிறேனே, அதைத்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை. விதி வலியது என்பதும் தெரிகிறது. விதி கொடியது என்பதும் புரிகிறது.
 
 தோழர் கே.ஜீவபாரதியை ஆசிரியராகக் கொண்டு "மேன்மை' என்கிற தனிச்சுற்று இதழ் வெளிவருகிறது என்பது எனக்குத் தெரியாது. "மேன்மை களஞ்சியம் -1' என்கிற தொகுப்பை அலுவலகத்திலிருந்து எனது உதவியாளர் அனுப்பிய போதுதான் தெரிந்து கொண்டேன். புரட்டிப் பார்த்ததும் மலைத்துப் போய்விட்டேன். உண்மையிலேயே அது ஒரு கருத்துக் களஞ்சியம்தான்.
 ஒரு பத்திரிகை நின்றுபோன பின் பல காலம் கழித்துத்தான் அந்தப் பத்திரிகையில் வெளிவந்த படைப்புகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவருவது வழக்கம். முதலாவது ஆண்டில் வெளியான பன்னிரண்டு மேன்மை இதழ்களும் தொகுக்கப்பட்டு "மேன்மை களஞ்சியம்-1' என்று வெளிவந்திருக்கிறது. இதற்குப் பிறகு இதுபோல எத்தனை தொகுதிகள் வெளிவந்தன, தெரியாது.
 தமிழகத்தின் மரியாதைக்குரிய எழுத்தாளர்கள் அனைவருமே நான் படித்த முதல் 12 இதழ்களிலும் எழுதியிருக்கிறார்கள். அவர்கள் எழுதியிருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, அந்தப் படைப்புகளில் பல மிக முக்கியமான ஆவணப் பதிவுகள் என்பதுதான் மேன்மை களஞ்சியத்தின் மேன்மை. அந்த எழுத்தாளர்களில் பலரும் "தினமணி' நடுப்பக்கக் கட்டுரையாளர்களும்கூட என்பதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
 கி.ரா.வின் கட்டுரைகள், ஜீவபாரதியின் ஜெயகாந்தன் குறித்த தொடர், தொ. பரமசிவன், தோழர் ஆர்.நல்லகண்ணு, தோழர் த. ஸ்டாலின் குணசேகரன், கவிஞர் முத்துலிங்கம், பேராசிரியர் தி.இராசகோபாலன், பெ.சு.மணி உள்ளிட்ட பலரின் கட்டுரைகள் என்று கருத்துக் கருவூலமாகத் திகழும் "மேன்மை' இதழின் அடுத்தடுத்த தொகுதிகளும் வேண்டும், சந்தாதாரராகவும் வேண்டும்.
 தரமான கட்டுரைகள். அதிக தகவல்கள். தேவையான தரவுகள். பதிப்பாளர் மு.மணியையும், ஆசிரியர் ஜீவபாரதியையும் எத்துணை பாராட்டினாலும் தரும்.
 
 .வசந்தகுமாரன் புதியவரல்லர் எழுத்துக்கும், கவிதைக்கும். பாலைவனத்துப் பூக்கள்(1986), சொந்த தேசத்து அகதிகள் (1987), மனிதன் என்பது புனைபெயர் (1994), மழையை நனைத்தவள் (2005), சதுர பிரபஞ்சம் (2017) ஆகியவற்றைத் தொடர்ந்து இந்த ஆண்டு வெளியிட்டிருக்கும் அவரது ஆறாவது படைப்பு "முறிந்த வானவில்'. அதிலிருந்து ஒரு கவிதை.
 நடுநிசிப் பயணம்
 இடுகாடு தாண்டும்வரை
 ஆத்திகனானேன்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com