சொற்பொருள் பின்வருநிலை அணியின் சுவை!

ஒரு செய்யுளில் முன்னர் வந்த ஒரு சொல், அதே பொருளில் மீண்டும் மீண்டும் வந்து சுவை தந்தால், அது "சொற்பொருள் பின்வரு நிலையணி' எனப்படும். சான்று:
சொற்பொருள் பின்வருநிலை அணியின் சுவை!

ஒரு செய்யுளில் முன்னர் வந்த ஒரு சொல், அதே பொருளில் மீண்டும் மீண்டும் வந்து சுவை தந்தால், அது "சொற்பொருள் பின்வரு நிலையணி' எனப்படும். சான்று:

"எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் / பொய்யா விளக்கே விளக்கு' எனும் குறள் (299).

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று "திணைமாலை நூற்றைம்பது'. அந்நூலில் ஒரு பாடல், இந்த அணியில் அமைந்து பெருஞ்சுவை பயக்குகிறது.

தலைவியைப் பகலில் சந்திக்க வந்த (பகற்குறி) தலைவனைப்  பார்த்துத் தோழி, தலைவியை இற்செறிப்புச் (வீட்டில் அடைத்து வைப்பது) செய்ய உள்ளனர் என்பதைக் கூறுகிறாள். தலைவியை வீட்டில் ஏன் அடைத்து வைக்கப் போகின்றனர் என்பதற்கு அவள் சொல்லும் காரணமும் அதற்கான சொற்பயன்பாடும்தான் சுவையைத் தருகின்றன.

""சந்தன (சாந்தம்) மரங்களை வெட்டி, உழவுத்
தொழில் செய்வதற்காகப் பண்படுத்தப்பட்ட மலைச்சாரலில் பயிர் செய்துள்ள தினைப்புனத்தில், சந்தன மரக்கட்டைகளால் கட்டப்பட்ட பரண்மீதிலிருந்து, கார்காலத்தில் தோகை விரித்தாடும் மயிலைப் போன்றவளான, மேனியில் சந்தனம் பூசிய தலைவி, விரட்டியும் தினைக்கதிரில் அமர்ந்துண்ணும் கிளிகள் பறந்து போகவில்லை. ஏனெனில், தலைவியின் குரல் கிளியின் குரல்போல இருப்பதால், அவை "நம் இனத்தைச் சேர்ந்த பறவைதான் ஒலியெழுப்புகிறது' என நினைத்து, பொறுமையாக இருந்து தின்றுவிட்டுச் செல்கின்றன. அதனால், தினைப்புனம் காக்கும் வேலையைச் செய்ய வேண்டாமென தலைவியை வீட்டிற்கு அழைத்துக்கொள்ளப் போகின்றனர். இனி அவள் வீட்டிலேயே இருப்பாள்'' என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள். 

சாந்தம் எறிந்துழுத சாரற் சிறுதினைச் 
சாந்தம் எறிந்த இதள்மிசைச்-சாந்தம்
கமழக் கிளிகடியும் கார்மயில் அன்னாள்
இமிழக் கிளியெழா ஆர்த்து!        (பா.3)

கிளியின் குரலைத் தலைவியின் குரலுடன் ஒப்பிட்டு, கிளிகள் பறக்காததற்கான காரணத்தைக் காட்டி, அதனால் விளையப்போகும் காரியத்தைக் காட்டி (வீட்டில் அடைத்தல்), காரண - காரியப் பொருத்தத்துடன் சந்தனம் குழைத்து ஆக்கப்பட்டிருக்கிறது இப்பாடல். 

"ஏலாதி' எனும் நூலை இயற்றியவரான புலவர் கணிமேதாவியார்தான் "திணைமாலை நூற்றைம்பது' நூலையும் இயற்றியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com