செங்காந்தள் மலர் கண்டு அஞ்சிய யானை

செங்காந்தளானது காந்தள் வகைகளுள் ஒன்று. இதன் பூ செந்நிறமாக இருக்கும் காரணத்தால் இப்பெயர் பெற்றது. இதற்கு இலாங்கலி, கோடை, தோன்றி, தோட்டி, பற்றை ஆகிய வேறு பெயர்களும் உண்டு.
செங்காந்தள் மலர் கண்டு அஞ்சிய யானை
Published on
Updated on
2 min read

செங்காந்தளானது காந்தள் வகைகளுள் ஒன்று. இதன் பூ செந்நிறமாக இருக்கும் காரணத்தால் இப்பெயர் பெற்றது. இதற்கு இலாங்கலி, கோடை, தோன்றி, தோட்டி, பற்றை ஆகிய வேறு பெயர்களும் உண்டு. இது குறிஞ்சி நிலமான மலைப் பகுதியில் மிகுதியாக வளரக் கூடியது. 

இச்செங்காந்தளில் மழைக் காலத்தில் அரும்புகள் தோன்றும். அரும்புகள் மலர்ந்தவுடன் நாகப்பாம்பு படம் எடுப்பதுபோல இருப்பதை, "வெய்யவாய், அரவுபைத் தாவித்தன்ன வங்காந்தளவிழ்ந் தலர்ந்தன' (1651:1, 2) என்று சீவகசிந்தாமணி பாடலடி குறிப்பிட்டுள்ளது. 

பூத்த மலர் ஆறு இதழ்களைக் கொண்டிருக்கும். "செங்காந்தள் கையால்' (194:1) என்னும் நளவெண்பா பாடலடியில் அவ்விதழ்கள் பெண்களுடைய சிவந்த மெல்விரல்களுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. இம்மலரில் தேன் மிகுதியாக இருக்குமென்பதை, "மதுவாயசெங் காந்தண்மலர்' (தேவா.126:3) எனத் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகிறார். அதனால் இம்மலரை எந்நேரமும் வண்டுகள் மொய்த்துக் கொண்டிருக்கும் என்பது பெறப்படுகிறது.

குறிஞ்சி நில மக்கள் இந்த மலரைப் பறித்து மாலையாகத் தொடுத்து முருகப் பெருமானுக்கு விரும்பிச் சூட்டுவதும் உண்டு. செங்காந்தளில் அரும்புகள் தோன்றும்போது இளம்பச்சை நிறத்தில் இருக்கும். மலர்ந்து விரிந்த பின்பு அது மஞ்சளாகி,  இறுதியாக நெருப்பை ஒத்த சிவந்த நிறத்தில் காணப்படும். 

இம்மலர் பல நிறங்களில் இருந்தபோதிலும், நெருப்பை ஒத்த சிவப்பு நிறத்தில் இருப்பதை "தீயி னன்ன ஒண்செங் காந்தள்' (மலை.145) என்று பெருங்கெளசிகனார் சுட்டியுள்ளார். இம்மலர் பூத்து, அடர்ந்து நெருக்கமாக இருக்கும்போது பார்ப்பதற்குக் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பைப் போலக் காட்சி தரும். இத்தகைய செங்காந்தள் மலரைக் கண்டு யானை அச்சம் கொண்டதாம்.

குறிஞ்சி நிலத்தில் மழை பொழிந்து எங்கும் பசுமையுடன் காட்சி தந்து, ஓரிடத்தில் மட்டும் காட்டுத் தீப்போல செங்காந்தள் மலர் பூத்திருந்தது. அவ்விடத்திற்கு அருகில் கூட்டத்திலிருந்து பிரிந்த யானை நின்றது. அப்பொழுது அது சினங்கொண்டு மேல் நோக்கி வளைந்திருக்கும் இரு தந்தங்களுக்கு இடையே தன்னுடைய நீண்ட கரமாகிய தும்பிக்கையை உயர்த்திக்கொண்டு ஓடத் தொடங்கியது. யானை பயத்தில் ஓடும்போது இயல்பாகவே கீழே தொங்கக்கூடிய தும்பிக்கை நிமிர்த்திக்கொண்டு ஓடுவது இயல்பு. அக்காட்சி காண்போருக்கு இன்பத்தைத் தரும். இதைத்தான் சங்கப் புலவர் புல்லங்காடனார், காந்த ளரும்புகை யென்று கதவேழ மேந்தன் மருப்பிடைக் கைவைத் தினனோக்கிப் பாய்ந்தெழுந் தோடும் (கைந்நிலை 9:1-3)
என்கிறார். செங்காந்தள் மலரைக் காட்டுத் தீ எனக் கருதி யானை பயந்து ஓடியதாகக் குறிப்பிட்டுள்ளார். புலியைத் தாக்கும் வல்லமையுடைய உருவத்திலும் கனத்திலும் பெருத்த யானை, அடர்த்தியாகப் பூத்திருக்கும் செங்காந்தள் மலருக்கு அஞ்சியது என்று புலவர் கூறுதல் வியப்பாக உள்ளதை நோக்குவோம். 

யானைகள் நீர் நிறைந்த காட்டுப் பகுதிகளில் விரும்பி வாழும். மரங்கள் உராய்வினால் காடுகளில் அவ்வப்பொழுது தீ பற்றும். தீயினால் யானைகளுக்குப் பெரிதும் துன்பம் ஏற்படும். அதனால் அவை தீ பற்றிய இடத்தைக் கண்டாலே அஞ்சும். அஞ்சியதுடன் மட்டுமில்லாது அந்தப் பக்கமே போகாது. அதனாலேயே மலைவாழ் மக்கள் தங்கள் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் தீயினை மூட்டி யானைகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வர்.

இவற்றை எல்லாம் கண்டறிந்த புல்லங்காடனார், இயல்பாக அஞ்சி ஓடிய யானையின் செயல், எரிவது போல் காட்சி தரும் செங்காந்தள் மலரைக் கண்டுதான் அஞ்சி ஓடியது என்று கூறுவது அவருடைய கற்பனைத் திறனை வெளிப்படுத்துகிறது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com