"எல்லோருக்கும் வணக்கம்' என்பது அன்றாட வாழ்வில் நாம் அதிகம் பயன்படுத்தும் ஒரு சொற்றொடர். சிலர், "எல்லாருக்கும்' என்றும்; சிலர் "எல்லோருக்கும்' என்றும் சொல்கிறார்கள். இரண்டில் எது சரி?
நண்பர் ஒருவர் தன் பிள்ளைக்குத் தமிழில் பெயர்சூட்ட விரும்பி, "நல்லான்' எனச் சூட்டினார். இப்பெயர் குறித்து தமிழாசிரியர் ஒருவருடன் கலந்துரையாடுகையில், "நல்லான் என்பது நல்லோன் என்றே வரும்' எனத் திருத்தியிருக்கிறார்.
"ஆ ஓ ஆகலும் செய்யுளில் உரித்தே' என்னும் இலக்கணப்படி செய்யுளில் நல்லான் என்பது நல்லோன் என்றே வரும். இதன்படி நல்லான் - நல்லோன்; வில்லான் - வில்லோன்; எல்லாரும் - எல்லோரும், சரியானவை!
1919-ஆம் ஆண்டு, மே மாதம் 19-ஆம் தேதி, மகாகவி சி.சுப்பிரமணிய பாரதி, எட்டயபுரம் மன்னருக்குச் சீட்டுக்கவி எழுதினார். புலவர் மொழியில் சீட்டுக்கவி என்பது, கோரிக்கை மனு.
""ஸ்ரீ எட்டயபுரம் ராஜ ராஜேந்திர மகாராஜ வெங்கடேசு ரெட்டப்ப பூபதி அவர்கள் சமூகத்துக்கு'' எனத் தொடங்கி, ஒன்றன்பின் ஒன்றாக மூன்று சீட்டுக்கவிகள் எழுதி அனுப்பினார். அவற்றுள் மூன்றாவது கவியை இவ்வாறு எழுதியுள்ளார்.
கல்வியே தொழிலாக் கொண்டோய் கவிதையே தெய்வமாக
அல்லு நன் பகலும் போற்றி அதை வழிபட்டு நின்றாய்
சொல்லிலே நிகரிலாத புலவர்நின் சூழலுற்றால்
எல்லினைக் காணப் பாயும் இடபம் போல் முற்படாயோ
இடபம் என்பது ரிஷபம் (காளை). எல் என்பது பரிதி (சூரியன்). சூரியனைக் கண்டதும், காளை உழவு புரிய வயலுக்குப் பாய்வதைப்போல என்பதாக இந்த உவமையின் பொருளைப் புரிந்து கொள்ளலாம்.
""எட்டயபுரம் மன்னரே, கேளுங்கள்! உங்களைச் சுற்றி புலவர் குழாம் சூழ்ந்து நிற்கையில், அவர்களுக்கு நீங்கள் செய்ய வேண்டிய உதவி, சூரியனைக் கண்டு உழவு வேலைக்குப் பாயும் காளையைப் போன்ற வேகத்தில் இருக்க வேண்டும்'' என்கிறார்.
பாரதி வாழ்ந்த காலத்தில் வெங்கடேசுர எட்டுத்தேவர் என்கிற பெயரில் இருவர் இருந்துள்ளனர். ஒருவர் பாரதியின் நண்பர். இவர், நகர பஞ்சாயத்தில் தலைவராக (சேர்மன்) இருந்தவர். பாரதி, பாண்டிச்சேரியில் வசித்த காலத்தில், கேட்டும் கேட்காமலும் பல உதவிகள் செய்தவர்.
மற்றொருவர் எட்டயபுரம் ஜமீன். பாரதி இவரை "மன்னர்' என்று குறிப்பிடுகிறார். இருவரில் யாருக்குச் சீட்டுக்கவி எழுதினார் என்கிற குழப்பம் அன்றைய தமிழறிஞர்களுக்கு இருந்திருக்கிறது. முன்னவர் நண்பர். உதவி கேட்டால் செய்துவிடக் கூடியவர் என்பதால் அவருக்கு எழுதியிருக்க வாய்ப்பில்லை. பின்னவர் ஜமீன். இவருக்கே சீட்டுக்கவி எழுதியிருக்க வேண்டும்.
இச்சீட்டுக்கவி எழுதப்பட்ட காலம் பாரதி, பாண்டிச்சேரியிலிருந்து இடம்பெயர்ந்து பிரிட்டிஷ் இந்தியாவை வந்தடைந்த காலம். நாடு திரும்பியவர், கடயம் கே.ஆர். அப்பாத்துரையார் வீட்டில் தங்குகிறார். இவர், பாரதியின் மைத்துனர். உறவினர் வீட்டில் நீண்டகாலம் தங்க விரும்பாத பாரதி, அதே ஊரில் ராமசாமி கோயிலுக்கு வடக்கே, "பட்டர் வீடு' என்ற ஓட்டுக் கட்டடத்தில் வாடகைக்குக் குடியேறுகிறார். இவ்வீடு மழைக்கும் வெயிலுக்கும் ஒழுகும் வீடாக இருக்கிறது. இந்த வீட்டைச் செப்பனிட பண உதவி தேவைப்பட்டிருக்கிறது. அதற்காக அவர் எட்டயபுரம் மன்னருக்கு ஓலைத்தூது அனுப்புகிறார்.
மன்னரிடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை. பிறகு அவர் ஒரு சீட்டுக்கவி எழுதி அனுப்பியிருக்கிறார். அதையும் மன்னர் கண்டுகொள்வதாக இல்லை. அடுத்து எழுதிய கவியில், "அண்ணலே பரிசு கோடி அளித்திட விரைகிலாயோ?' என எழுதியிருக்கிறார். அதையும் அவர் கண்டுகொள்வதாக இல்லை. மூன்றாவதாக, அவர் எழுதிய சீட்டுக்கவியில், உதவி கேட்கும் புலவர்களுக்கு "சூரியனைக் கண்டு பாயும் உழவுக் காளையைப் போல உதவ வேண்டும்' என எழுதினார்.
நண்பனுக்கு சக நண்பன் உதவும் உதவியும், ஏழைக்கு ஒரு செல்வந்தர் உதவும் உதவியும், மக்களுக்கு ஓர் ஆட்சியாளர் செய்யும் உதவியும் வெவ்வேறு வேகம் கொண்டவை. நண்பனுக்குச் செய்யும் உதவி, "உடுக்கை இழந்தவன் கை போல' அதிவேகத்தில் இருக்க வேண்டும் என்கிறது வள்ளுவம்.
"ஏழைக்கு செல்வந்தர் செய்யும் உதவி, கோடைக்கால மழையின் வேகம்' என்கிறது புறநானூறு. ஆட்சியாளர்கள் உதவிக்கரம் நீட்டி மக்களுக்குச் செய்யும் உதவி, "எல்லினைக் காணப் பாயும் இடபம்' வேகத்திற்கு இருக்க வேண்டும் என்கிறார் பாரதி!
எல்லா, எல்லோரும், எல்லாமே என்பதற்குக் காரணமான "எல்' என்பது ஆதியில் தோன்றிய தமிழ்ச்சொல். இச்சொல் தமிழ் காலத்தையொட்டிய கிரேக்க மொழியிலும் உள்ளது. அம்மொழியிலும், "எல்' என்பது சூரியனையே குறிக்கிறது! கிரேக்கர்களின் காவல் கடவுள் "எல்'. கிரேக்கர்கள் தங்களை "எல்லனிக் கிரிஸ்' என அழைத்துக் கொள்கிறார்கள். அதாவது சூரியக் குழந்தைகள். இந்தியாவில், புராணக் கதைகளில் சூரியக் குலத்தவர்கள் உண்டு. எல், என்கிற சொல்லே ஆங்கிலத்தில் அல், ஆல் என மருவியுள்ளது.
எல்லோரும், எல்லோருக்கும் என்பதில் ஆறறிவு இருப்பதாக சொல்லிக்கொள்ளும் மனிதர்கள் மட்டுமல்ல, மனிதனுக்கு முன்பு தோன்றிய அனைத்து உயிர்களும் இருக்கின்றன. இதையேதான் தாயுமானவர்,
"எல்லோரும் இன்புற்றிருக்க'
எனப் பாடியிருக்கிறார்! மூதுரை பாடலில்,
"எல்லாருக்கும் பெய்யும் மழை' (10) என்கிறார் ஒளவையார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.